82 வருஷங்களுக்கு முன்னர் ஒரு ஸ்ரீவைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் போது, ஸ்ரீரங்கத்தில் நடந்த ஒரு முக்கியமான விஷயம்:
ஸ்ரீ உ வே காரப்பங்காடு தேசிவரதாசார்ய ஸ்வாமிகள் என்பார் அப்பொழுது ஸ்ரீரங்கத்தில் வதிந்தவராய் இருந்தார். அந்த ஸ்வாமி உடையவர் ஸந்நிதியில் தொடர்ச்சியாக ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் சாதித்துக்கொண்டிருந்தார். அதனைக் கேட்ட பெருமக்கள் எல்லாம் கூடி, நன்கு வடமொழி அறிந்தவர்கள், தமிழ் மட்டுமே அறிந்தவர்கள் என்று அனைத்து மக்களும் ஆர்வமுடன் 1930க்கு முன் இருக்கும் இராப்பத்து உத்ஸவத்தின் போது ஆயிரக்கால் மண்டபத்தில் கூடி ஒரு மீட்டிங் போட்டனர். என்ன பேசினார்கள், என்ன முடிவெடுத்தார்கள் என்பதைச் சொல்கிறேன். அதற்கு முன் சில விளக்கங்களைச் சொல்லிவிட்டுப் பார்ப்போம்.
ஸ்ரீபாஷ்யம் காலக்ஷேபம் சாதித்தார் ஸ்ரீகாரப்பங்காடு தேசிவரதாசாரியார் ஏன்று சொன்னேனா? அவ்வாறு அவர் சாதித்த காலக்ஷேபத்தில் ஸ்ரீபாஷ்யத்திற்கான விரிவான விளக்க உரை ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர் ச்ருதப்ரகாசிகை என்பது. அதை எழுதியவர் ஸ்ரீசுதர்சன பட்டர் என்னும் ச்ருதப்ரகாசிகாசாரியார். அவருக்கு நம்பெருமாள் அளித்த பெயர் வியாஸாசாரியர் என்பதாகும். அதில் மிகவும் விரிவாக ஸ்ரீபாஷ்யத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் நுணுக்கமான பொருள் செறிவை ஏடுபடுத்தியுள்ளார் ஸ்ரீசுதர்சன பட்டர். ஸ்ரீபாஷ்யம் என்பது என்ன? அதற்கு ஏன் மேலும் ஒரு விரிவான விளக்க உரை எழுதினார்?
வேத வியாசர் உபநிஷதங்களில் இருக்கும் வேதாந்த முடிவுகள் அனைத்தையும் ஒருங்குற அமைத்து ஸ்ரீகிருஷ்ணனின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உதவியோடு வேதாந்த ஸூத்திரங்கள் அல்லது ஸ்ரீப்ரஹ்ம ஸூத்திரங்கள் அல்லது சாரீரக ஸூத்திரங்கள் என்ற பெயரில் அருளிச்செய்தார். ஜைமினி முனிவர் யாகாதிகள், கர்ம காண்டம் என்பதைத் தொகுத்து ஸூத்திரங்களாகத் தந்தது பூர்வ மீமாம்ஸை ஸூத்திரங்கள் என்பதாகும். ஞான காண்டம் என்னும் உபநிஷதங்களின் கருத்துகளைத் தொகுத்து வேத வியாசர் தந்த இந்த ஸ்ரீபிரஹ்ம ஸூத்திரங்களுக்கு உத்தர மீமாம்ஸை ஸூத்திரங்கள் என்று பெயர் ஏற்பட்டது. இதற்குத்தான் பல சித்தாந்தங்களைச் சேர்ந்த ஆசாரியர்கள் தங்கள் சித்தாந்ததிற்கு ஏற்ப உரைகளை எழுதினர். அவரவர்களின் வழிவந்தோர் அந்தந்த உரைகளுக்கு மேலும் விரிவுபட விளக்க உரைகள் எழுதினர். அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம். சுத்தாத்வைதம், அசிந்த்ய பேதாபேதம் முதலிய பல சித்தாந்தங்களுக்கும் ஏற்ற வகையில் பல உரைவளங்களைக் கண்டது இந்த ஸ்ரீபிரஹ்ம ஸூத்திரங்கள் என்னும் வேதாந்தம். முழுமையாகப் பார்க்குமிடத்து வேதாந்தம் என்பது ஸ்ரீப்ரஹ்ம ஸூத்திரம், உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை என்னும் மூன்றிற்குமான உரைக் கோவைகளும் ஒருங்கே வேதாந்த தர்சனம் என்று சொல்லப்படும்.
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்திற்கு ஏற்றாற்போல் உரை எழுத வேண்டும் என்பதுதான் ஸ்ரீஆளவந்தார் என்னும் பரமாசாரியாரின் உள்ளக் கிடக்கையாக இருந்தது. அவ்வாறு உரை எழுத வேண்டும் என்றால் ஸ்ரீபாஞ்சராத்திர ஆகம சித்தாந்த நுட்பங்களைப் பொதிந்து ஏற்கனவே போதாயனர் என்பார் ஒரு விருத்தி நூல் எழுதி அது அக்காலத்திய காஷ்மீர தேசத்தில் ஸரஸ்வதி பீடத்தில் இருந்தது, அதைக் கண்டு அதன் உதவியுடன் செய்தால்தான் நன்கு சிறக்கும். அந்தப் பெரும் சீரிய நற்பணியைச் செய்து முடித்தவர் ஸ்ரீராமாநுஜர். அவர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின்படி எழுதிய உரையை காஷ்மீர தேசத்தில் இருந்த ஸரஸ்வதி பீடத்தில் ஏற்றுக் கொண்டாடி, ஒரு பாஷ்யம் என்பது எவ்வாறு இருக்க வேண்டுமோ அந்த இலக்கணங்கள் நன்கு பொருந்திய சிறந்த உரை என்னும் பொருள்பட ஸ்ரீபாஷ்யம் என்று அழைத்தனர். எனவே வேதாந்த ஸூத்திரங்களுக்கு ஸ்ரீராமாநுஜர் அருளிய பாஷ்யத்திற்குப் பெயர் ஸ்ரீபாஷ்யம் என்று அழைக்கப்பட்டது. ஸ்ரீராமாநுஜருக்கும் ஸ்ரீபாஷ்யகாரர் என்று பெயர் உண்டானது.
அந்தக் காலத்தில் பொதுவாக வேதாந்தம் படிப்பவர்கள் ஏற்கனவே வியாகரணம், மீமாம்ஸை, நியாயம் என்னும் துறைகளை நன்கு கற்ற பின்னர் வேதாந்தத்தைப் படிக்கத் தொடங்குவர். இந்த நான்கு சாத்திரங்களையும் சேர்த்து சதுர் சாஸ்த்ரம், நான்கு சாத்திரங்கள் என்று கூறுவதுண்டு. இத்தகைய உரிய துணைக்கல்விகளோடு படிப்பவர்களுக்கு அவர்கள் தாமே பெரும் அறிஞர்களாகவும் இருந்தமையால் ஸ்ரீபாஷ்யத்தின் உட்பொருட்கள் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் பின்னால் வருவோரின் உதவிக்காக வேண்டி பெருந்தன்மையுடன் ஸ்ரீசுதர்சன பட்டர் ஸ்ரீபாஷ்யத்திற்கான தமது விரிவான விளக்கத்தை ஏடுபடுத்தி வைத்துப் போனார். அதற்குப் பெயர்தான் ச்ருதப்ரகாசிகை என்பதாகும்.
இப்பொழுது நம்முடைய கதைக்கு வருவோம். உடையவர் சந்நிதியில் ஸ்ரீகாரப்பங்காடு தேசிவரதாசாரியார் சுவாமி ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் சாதிப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தோமா? அதுவும் ச்ருதப்ரகாசிகையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் அல்லவா? அதைக் கேட்ட ஊர்ப்பெரியவர்கள் எல்லோருக்கும் ஓர் எண்ணம். வடமொழி அறிந்தார், அறியாதார் என்ற வேறுபாடின்றி அனைவரும் ஸ்ரீராமாநுஜ பாஷ்யத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், அதற்கு உதவியாக ஸ்ரீபாஷ்யத்தை ச்ருதப்ரகாசிகையுடன் தமிழாக்கம் செய்தால் பெரும் உதவியாக இருக்குமே என்று நினைத்துத்தான் அந்த ஆண்டு இராப்பத்து உற்சவத்தின் போது கூட்டம் போட்டனர். ‘ஸ்ரீபாஷ்யம் தமிழ் மொழிபெயர்ப்புச் சங்கம்’ என்று ஒரு சங்கத்தை நிறுவினார்கள். அதற்குத் ப்ரஸிடெண்டாக திருப்புறம்பியம் ப்ரபன்ன வித்வான் ஸ்ரீமான் டி டி ராமஸ்வாமி நாயுடு அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவரும் பேர் ஆர்வத்துடன் தமது பங்காக பெரும்பணத்தை அளித்து இன்னும் பல திவ்ய தேசங்களினின்றும் பல பண உதவியாளர்களையும் இணைத்து பெரும் முனைப்போடு செயலாற்றினார்.
பெருந்திட்டத்தின் முதற்கட்டமாக ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரத்தின் முதல் நான்கு ஸூத்திரங்களுக்கான ஸ்ரீபாஷ்யம், அதன் ச்ருத்ப்ரகாசிகை என்பதை மட்டும் மொழிபெயர்ப்பது தமிழில் என்று முடிவாகியது. வேதாந்த ஸூத்ரங்களின் முதல் நான்கு ஸூத்ரங்கள்தாம் முழு நூலுக்கான முன்னுரை போன்று அமைந்த பகுதி. அந்த சதுஸ்ஸூத்ரீ (நான்கு ஸூத்ரங்கள்) என்பதற்கே பெயர் உபோத்காதம் (முன்னுரை) என்பதாகும். அந்த நான்கு ஸூத்ரங்களில் முதல் ஸூத்திரமான ’அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா’ என்னும் ஒரு ஸூத்திரத்துக்கே 800 பக்கங்களுக்கு மேல் அச்சுப் பக்கங்கள் வருகின்றன. இத்தனைக்கும் பெரிய சைஸ் நூல், சின்ன சைஸ் ஃபாண்ட். அதை மொழிபெயர்த்தவர் அப்பொழுது அதாவது 1930ல் செயிண்ட் ஜோஸஃப் கல்லூரி ஸம்ஸ்க்ருதத் துறையின் தலைவராய் இருந்த ஸ்ரீ உ வே டி வி ஸ்ரீநிவாஸாசாரியர். அருமையான மொழிபெயர்ப்பு. என்ன பணி அது!
சரி விஷயம் இதோடு விட்டதா? நம்பிள்ளை சந்நிதியைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கந்தாடை ஸ்ரீமத் உ வே ஸ்ரீநிவாஸாசாரியார் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பை வைத்தே காலக்ஷேபமும் சாதித்து சாற்றுமுறையும் நடத்திவிட்டார். அதுவே மொழிபெயர்ப்புக்கான பொருள் ஒப்புநோக்கும் சோதனையாகவும் ஆகிவிட்டது. இதில் மொழிபெயர்ப்பாளர் அவ்வப்பொழுது முடிக்கும் பகுதிகள், அவருக்குத் துணையாகத் தேவைப்படும் நூல்குறிப்பு வசதிகள், தொடர்பான சிறு சிறு பங்களிப்புகளை ஒருங்குற முறைப்படுத்திப் பாதுகாத்தல் முதலிய பணிகளைச் செய்தவர் ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூலில் பிரபந்த உபாத்யாயராக இருந்த ஸ்ரீமத் உ வே என் கே ராகவாசாரியர். பொதுவான மேற்பார்வை, மேனேஜ்மண்ட் ஆகியவற்றைச் செய்தவர் ஸ்ரீரங்கம் ஆனரரி மேஹிஸ்ட்ரேட்டாக இருந்த ஸ்ரீமான் ஆர் ஏ பங்காருஸ்வாமி நாயுடு அவர்கள். நூல் ஸ்ரீமத் உ வே சுந்தரராஜ ஐயங்கார் அவர்களின் ஸ்ரீவிலாஸம் பிரிண்டிங் பிரஸ்ஸில் வெளிவந்தது.
முதல் ஸூத்திரத்திற்கான மொழிபெயர்ப்பு 840 பக்கங்களைப் பார்த்ததும் திருச்சி அட்வகேட் ஸ்ரீ உ வே ஏ வி கோபாலாசாரியர் முதல் நான்கு ஸூத்திரங்களில் மீதம் இருக்கும் மூன்று ஸூத்திரங்களுக்கான மொழிபெயர்ப்பைத் தாம் ஒருவரே செய்து முடித்துத் தந்துவிட்டார்.
ஆக சதுஸ்ஸூத்ரீ எனப்படும் உபோத்காதமான முதல் நான்கு ஸூத்ரங்களுக்கான ஸ்ரீபாஷ்யம், ச்ருதப்ரகாசிகைப் பகுதி தமிழில் இரண்டு வால்யூம்களாக 840 + 390 பக்கங்களில் வெளிவந்தன. அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து தமிழில் வேதாந்தம் என்பதில் இயற்றிய சாதனை இது நடந்தது நம் ஸ்ரீரங்கத்தில் 1930 தொடங்கி 1938 வரையில். தொடர்ந்து மற்ற பகுதிகளும் வந்தனவா என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை. விவரம் தெரிந்தவர்கள் கூறலாம். இதில் மேலும் திருத்தமாகத் தெரிந்தவர்கள் கூறினால் நன்றி.
இன்று கிரகணம். அப்பொழுது செய்யும் செயல்கள் மேலும் மேலும் விருத்தியடையும் என்பார்கள். நம் ஸ்ரீரங்கத்து சாதனை மேலும் மேலும் தொடர்ந்தால் முன்னோர்களுக்கு இதைவிட வேறு என்ன உகப்பு! சேனைமுதலியார் சொன்னால்தான் ஸ்ரீரங்கராஜர் திருக்கண் நோக்கத்தால் அருள் எழுத்து சாத்துவாரோ!
***
No comments:
Post a Comment