Wednesday, December 25, 2019

அது நமது விதிவகையே!

சில சமயம் நமது ஞாபகம் நம்மை ஏமாற்றிவிடும் என்ற பயத்தால் நூல்களைப் படித்து ஒரு முறை சரிபார்த்த பிறகு விஷயங்களைப் போடுவது வழக்கம். அது எல்லா நேரத்திலும் சரியாக வருவதில்லை. நேற்று திருநெடுந்தாண்டகம் பற்றிப் போடும்போது ‘எம்பெருமானார் பராசர பட்டரின் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து, நம்மை இவனை நினைத்திருப்பதைப் போலே நினைத்திருங்கோள்’ என்று சொன்னார் என்று முதலில் எழுதியிருந்தேன். பிறகு ஒரு தடவை சரிபார்க்கலாம் என்று ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம் நூலைப் பார்த்த பொழுது பராசர பட்டர் கையில் நூல் எதுவும் தந்தது போல் வரவில்லை. சரி நம் ஞாபகம் ஏமாற்றிவிட்டது போலும் என்று அதை மாற்றிப் போட்டுவிட்டேன். இப்பொழுது ‘அருள்தருவான் அமைகின்றான். அது நமது விதிவகையே’ என்பதற்குப் பொருள் தேடும்போது அந்த விஷயம் கண்ணில் படுகிறது.

அதாவது பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி, முதல் பாசுரம் ஈட்டு வியாக்கியானத்தில் அது நமது விதிவகையே என்பதை விவரிக்கும் பொழுது, நெஞ்சைக் குறித்து ஆழ்வார் பாடுகிறார். ஏ நெஞ்சே! ஆழியான் அருள்தருவதற்காக அமைகின்றான். இருள்தரு மாஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன். நீயும் மருளை ஒழித்து என்னுடன் வா என்பது போல் பாட்டின் கதி. அப்பொழுது நம்மாழ்வார் இப்படிப் பாடுகிறார்: ‘அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே’. இங்கு விதிவகையே என்பதற்கு பூருவர்கள் சொல்லும் பொருள்: ‘நமது பாக்கிய அநுகுணமாக இறே.’ ஆனால் எம்பெருமானார் இதற்குச் சொல்லும் பொருள்: ‘இத்திருவாய்மொழியில் மேலோடுகின்ற ரஸத்திற்குச் சேராது, நாம் விதித்தபடியே செய்வானாய் இருந்தான் என்கிறார்’ என்று அருளிச் செய்வர்.

இந்த இடத்தில் ஒரு விருத்தாந்தம் அருளிச்செய்கிறார் நம்பிள்ளை. -- நமது விதிவகையே என்பதற்கு பராசர பட்டர் பொருள் சொல்லுவாராம். நித்ய விபூதியில் சேனை முதலியார் என்ன சொல்கிறாரோ அதை பவ்யமாகக் கேட்டிருந்து அநுமதி பண்ணி மேலெழுத்திடுவது போல் தம் அருள்நோக்கு காட்டி அருள்புரிவர் பகவான் என்பதற்கு ஒரு சுலோகம் சொல்வார் பராசர பட்டர் : ’ததாநுஜாநந்தம் உதார வீக்ஷணை:’ என்று. இவ்வாறு பராசர பட்டர் அருளிச் செய்த போது கிடாம்பி ஆச்சானும் மற்றவர்களும் பராசர பட்டரைச் சுற்றி இருந்தனர். அனைவரும் அந்த சுவையான விளக்கத்தைக் கேட்டு மிகவும் நெகிழ்ந்து போனார்கள். அதிலும் கிடாம்பியாச்சான் மிகவுமே நெகிழ்ந்து போனார். அவரை இளையாழ்வான் என்னும் ஆச்சானின் சிஷ்யர் கேட்டாராம்: ‘பராசர பட்டரை ஆச்ரயித்தவர்களில் அனைவரிலும் தாங்கள் ஏன் மிகவும் அதிகமாக நெகிழ்ந்து, பெரும் விநயமும், பிரமிப்பும் தோற்ற பராசர பட்டரிடம் நடந்துகொள்கிறீர்கள்?’ என்று அதற்கு கிடாம்பியாச்சானின் பதில்: ’நீ அன்று கண்டிலைகாண். எம்பெருமானார் பட்டர் கையிலே புஸ்தகத்தைக் கொடுத்துத் திருமுன்பே ஒரு சுலோகத்தை விண்ணப்பம் செய்வித்துத் திருப்பிரம்புக்குப் புறம்பாகக்கொண்டு புறப்பட்டுச் சுற்றும் பார்த்தருளி, நம்முடையாரடங்கலும் நம்மை நினைத்திருக்குமா போலே இவனை நினைத்திருங்கோள்” என்றருளிச்செய்தார்.--

எனவே ஞாபகம் ஏமாற்றவில்லை என்று தெரிகிறது. ஆனால் எந்த இடத்தில் படித்தோம் என்பது நினைவிற்கு வரவில்லை என்றால் என்ன செய்வது? ஆனால் இப்படி யதேச்சையாக நாம் எழுதியது சரியே என்று தக்க சான்றுகள் எதிர்பாராத இடத்தில் வந்து நம்மை எதிர்கொள்ளும் போது அது ஒரு தனி ஆனந்தம்தான். அதாவது நாம் சொல்வது தக்க சான்றுகள் உள்ளதாக இருக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால் கொஞ்சம் இப்படிக் கஷ்டப்பட வேண்டியது நியாயம்தானே!

***

No comments:

Post a Comment