Monday, December 23, 2019

’நம்பிள்ளை படி’ - நான்கு திருவந்தாதிகள்

பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளில் மறைந்திருந்து, அச்சு ஏற்றத்தையும், வழிவழியான நூல்படிப்பு நெறியினரின் கண்களையும் தப்பித்து இந்த வ்யாக்யானம் இருந்து வந்திருப்பது ஆச்சரியம்தான். முதலாழ்வார்கள் மூவரின் திருவந்தாதிகளுக்கு விளக்கமான உரைகள் இந்த நூலில் கிடைக்கின்றன. ஏற்கனவே உள்ள உரைகள் என்ன காரணத்தாலோ மிகவும் சுருக்கமாக இருக்கின்றன. ஆனால் இந்த மறைந்திருந்த மா உரையில் அந்தத் தேவையும் பூர்த்தியாகி விபுலமான உரைப் புதையலாகக் கிடைத்திருக்கிறது. விடாமுயற்சியுடன் பதிப்பித்த டாக்டர் எம் ஏ வேங்கடகிருஷ்ணனின் பணி பாராட்டிற்குரியது. பார்த்த ஓலைச் சுவடிகளில் எல்லாம் 'பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்' என்று இருக்கவும் அதில் ஓர் ஓலைச்சுவடியில் கண்ட உரை அச்சேறிய உரையின் நடையினின்றும் வேறுபட்டுக் காணவும், முகப்பில் பார்த்தால் 'நம்பிள்ளை படி' என்று இருக்கவும் முனைவர் முழுமூச்சாக முனைந்து நூலைக் கொண்டு வந்திருக்கிறார். முதலாழ்வார்கள் மூவரின் திருவந்தாதிகளான முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, திருமழிசையாழ்வாரின் நான்முகன் திருவந்தாதி ஆகிய நான்கு இயற்பா திவ்ய ப்ரபந்தங்களுக்கு ’நம்பிள்ளை படி’ கிடைத்து அச்சு நூல் ஆகியுள்ளது.

திருக்கோவலூர் இடைகழியில் ஓரிரவுப் பொழுதில், கனத்த மழையில், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்படி முதலாழ்வார்கள் மூவரையும் கூட்டினான் திருமகள் கேள்வன். ஒருவர் படுக்கும் இடம், இருவர் இருக்கலாம். இருவர் இருக்கும் இடம் மூவர் நிற்கலாம் என்று நின்றார்கள் ஓடித்திரியும் யோகிகள் மூவர். அந்த மகான்களைப் பேராத திவ்ய ஆனந்த உணர்வாக வெளிப்பட்டு நெருக்கினார்கள் திவ்ய தம்பதிகள். சொல்லாமல் வந்து சொல்லிறந்து புகுந்து நெருக்கும் அவர்களைக் காண வேண்டி, பகவானின் விபூதிகளையே அவனைக் காட்டும் விளக்காக ஏற்றினார் பொய்கையார். அவனிடத்தில் ஆராத காதல் அன்பினையே அரும் விளக்காகக் கொளுத்தினார் பூதத்தார். உள்ளும், புறமும் விளக்கேற்றி விட்டால் அந்த மறைபுலர் நாயகனும், மாதவனின் மருவு திருவும் ஒளியுமாறு எங்ஙனே? ஏற்றிய விளக்கத்தில் ஏறு திருவுடையானைக் கண்டார் பேயாழ்வார். இந்த இடத்தை மிக அழகாக விளக்குகிறது ’நம்பிள்ளை படி’.

"இவர்கள் மூவரும் கூடி நிற்கச் செய்தே இவர்கள் அளவல்லாதபடியே அவர்க்கும் இடம் காண வேண்டும்படி 'நீயும் திருமகளும் நின்றாயால்' என்கிறபடியே, ஸர்வேஸ்வரனும் பிராட்டியும் கூட நெருக்க, இவர்களிலேயொருவர், 'இஃது இருந்தபடியென்? நாம் மூவருமே என்றிருந்தோம். அவ்வளவன்றிக்கே இருந்ததீ ! இது விளக்கேற்றிப் பார்க்க வேண்டி யிருந்ததீ !' என்ன, அவர்களிலே ஒருவர் ஸவிபூதிகனான ஸர்வேஸ்வரனை ஒரு விளக்காக ஏற்ற, மற்றையவர் தத் விஷயத்தில் பக்தியை ஒரு விளக்காக ஏற்ற, அநந்தரம் மற்றையவர் ஸாக்ஷாத்காரத்தாலே அநுபவித்தாராயிருக்கிறது."

அச்சின் இடைகழியிலே இந்த அரியவாகிப் போன வ்யாக்யானத்தை அழகிய பதிப்பாக்கி விளக்கேற்றி வைத்திருக்கிறார் திரு வேங்கடகிருஷ்ணன். நம் வேலை திருக் கண்டேன்; பொன் மேனி கண்டேன் என்று மகிழ வேண்டியதுதான். முதல் மூன்று திருவந்தாதிகளுக்கு உரை விரிவாகவும், நான்முகன் திருவந்தாதிக்குச் சிறிது சுருக்கமாகவும் ’நம்பிள்ளைபடி’ அமைந்திருக்கிறது.

பொதுவாக திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் என்று ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய நுட்பங்கள் சூர்ணைகளின் வடிவில் நூல்களாக ஆனது பிள்ளை லோகாச்சாரியாரின் காலத்தை ஒட்டித்தான். சற்று முன்னர், பின்னர் என்றபடி. பகவத் விஷய வ்யாக்யானங்களிலும், மற்றைய திவ்ய பிரபந்த உரைகளிலும் ரஹஸ்யங்கள் என்னும் மேற்கூறிய மூன்று நுட்பங்களின் பொருள் சிறப்புகள் விரவித் துலங்கிக் கிடக்கும். பராசர பட்டரின் ’அஷ்ட ச்லோகி’ ரஹஸ்ய த்ரய அர்த்தங்களை எட்டு ச்லோகங்களில் வடித்த நூல். ’நம்பிள்ளை படி’யிலோவெனில் ரஹஸ்யார்த்தங்களான திருமந்திர, த்வய, சரம ஸ்லோக நுட்பங்கள் இடத்திற்கு இடம் விளக்கெரித்துக் காட்டப் படுகின்றன. இந்த அம்சம் இந்த நூலின் காலத்தைச் சரிவர கணக்கிடப் பயன்படலாம். நம்பிள்ளை செய்ததோ அன்றி அவர் காலத்தை ஒட்டிப் பின்னர் வந்த மகனீயர்கள் யாரேனும் செய்ததோ நிச்சயம் இந்த வ்யாக்யானம் ஒரு விசேஷமான வ்யாக்யானம். There is very large presence of Nampillai in and through this commentary. இந்தப் பதிப்பில் ஒரு விசேஷம். வியாக்கியானத்தின் மூலத்தை இடப்புறப் பக்கங்களில் வரிசையாக போட்டு, அதன் எளிய தமிழாக்கத்தை வலப்புறமாக அச்சடித்திருப்பது மொழித் திறமை மிகவும் குறைந்து காணப்படும் இன்றைய நாட்களில் மிகவும் உதவிகரமாக இருக்கும் ஒன்று. மணிப்ரவாளத்தைக் கண்டு யாரும் மிரளாமல் அதில் இருக்கும் பொருட்சிறப்புகள் ஒன்று விடாதபடி அநுபவிக்க நல்ல வாய்ப்பாக இருக்கிறது.

மூன்று திருவந்தாதிகளுக்கும் கிடைத்திருக்கும் வியாக்கியானம் ஒருவரே எழுதியது என்பதற்கு பனுவலின் பரஸ்பரக் குறிப்புச் சான்றுகள் அக ஆதாரமாய் நிலவுகின்றன. மூன்று திருவந்தாதிகளின் உரை அவதாரிகைகளும் ஒன்று விட்ட இடத்தை மற்றொன்று குறிப்பிட்டுக் காட்டித் தொடர்ந்து செல்கின்றன. ஒரு பொது விளக்கத்தின் நுட்பத்தைச் சார்ந்த பகுதி விளக்கங்களாக அவை தம்மை நிலை பெறுத்திக் கொள்கின்றன. அது மட்டுமின்றி மூன்று திருவந்தாதிகளுக்கு உரை அமைத்தவரேதாம் நான்முகன் திருவந்தாதிக்கும் உரை அருளியவர் என்பது நான்முகன் திருவந்தாதியின் அவதாரிகையில் தெரிகிறது. (அவதாரிகை என்பது முன்னுரை என்று பொருள்).

முதலில் மூன்று திருவந்தாதிகளின் உரைகளும் எப்படி ஒன்றை ஒன்று ப்ரதிபலிக்கின்றன என்று பார்ப்போம்.

"அவர்களிலே ஒருவர் ஸவிபூதிகனான ஸர்வேஸ்வரனை ஒரு விளக்காக ஏற்ற, மற்றையவர் தத் விஷயத்தில் பக்தியை ஒரு விளக்காக ஏற்ற, அநந்தரம் மற்றையவர் ஸாக்ஷாத்காரத்தாலே அநுபவித்தாராயிருக்கிறது "

இவ்வாறு முதல் திருவந்தாதியின் அவதாரிகை குறிப்பிட்டுவிட்டு மேலும் கூறும் கருத்து நம்பிள்ளைபடிக்கே உள்ள விசேஷமான ஒன்று --

"இனி இவைதாம் மூன்றும் ஒருவர்க்கே பிறந்ததோர் அவஸ்தை போலேயிருக்கிறது."

"அதாகிறது, முந்துற ஜ்ஞாநமாய், அநந்தரம் பக்தியாய், பின்னை தர்சனமாயிறே இருப்பது."

இவ்வாறு மூவரின் அநுபவத்தையும் முமுக்ஷு ஒருவனுடைய பக்தியீடுபாட்டின் வளர்நிலைகளாகக் காட்டியுள்ளமை மிகவும் சிறப்பு. அதை விளக்கும் வழியில் மேலும் வ்யாக்கியானம் கூறுகிறது --

"ஸ்வவ்யதிரிக்தமடங்கலும் அவனுக்கு ஸ்வம்; அவன் இதுக்கு ஸ்வாமீ என்கிற இந்த ஜ்ஞாநத்தாலே ஒரு விளக்கேற்றினாராயிருக்கிறார் இவர்; இப்படிப்பட்ட விஷயத்தில் பிறந்த பக்தியைப் பரிகரமாகக் கொண்டு அத்தாலே ஒரு விளக்கேற்றினாராயிருக்கிறது மற்றையவர். அந்த பக்திக்கு அநந்தரமான தர்சனமாயிருக்கிறது மற்றையவரது."

அதாவது எளிய தமிழில் -- 'அவனுக்குத் தன்னைத் தவிர்த்த மற்றவையனைத்தும் அவனுடைய சொத்து. அவன் அந்த அனைத்துக்கும் உடையவனான ஸ்வாமீ. இந்த ஜ்ஞாநத்தாலே ஏற்றப்பட்ட விளக்கு முதலாவது ஆழ்வாரின் வையம் தகளி. அத்தகைய ஸ்வாமியான பகவானிடத்தில் பிறந்த பக்தியையே ஒரு விளக்காக ஏற்றியவர் நடுவில் ஆழ்வார். அத்தகைய பக்தியாக வளர்ந்து நிற்கும் ஜ்ஞாந விளக்கில் கண்ட தர்சனமாய் இருக்கிறது மூன்றாமவரான ஆழ்வாரின் 'திருக் கண்டேன்' என்ற திருவந்தாதி.

முதல் திருவந்தாதியின் உரை அவதாரிகை காட்டும் இந்தக் கருத்துகளை எப்படி மற்றைய திருவந்தாதிகளின் உரை அவதாரிகைகள் ப்ரதிபலிக்கின்றன என்று பார்ப்போம்.

இரண்டாம் திருவந்தாதி வியாக்கியானம் --

" கீழில் திருவந்தாதியில் ஆழ்வார் உபயவிபூதியுக்தன் ஆனவனுடைய சேஷித்வத்தை ப்ரகாசித்தாராய் நின்றார். அதுபோய் இவருடைய சேஷத்வ ஜ்ஞாநத்துக்கு உறுப்பாய், அந்த ஜ்ஞாநந்தான் போய் பக்தி ரூபாபந்நமாய்த்து. அது ஜ்ஞான விஷயம்; இது பக்தி விஷயம். பக்தியாலே வழிந்து புறப்பட்ட சொல்லாய் இருக்கிறது. அவர்க்குப் பக்தி இல்லையோவென்னில் உண்டு. கார்யகாரணரூபமான அவஸ்த்தாபேதமே உள்ளது.

"உபயவிபூதியையும் அநுஸந்தித்துப் பிறந்த ஜ்ஞானம் அவரது. அது பக்வமாய், பக்தி ரூபாபந்நமான படி இவரது. "

மூன்றாம் திருவந்தாதியின் வ்யாக்கியான அவதாரிகையில் --

" மயர்வற மதிநலம் அருளப்பெற்றது பக்தி ரூபாபந்நமான முதல் திருவந்தாதி. 'என்றன் அளவன்றால் யானுடைய அன்பு' என்கையாலே அது பரபக்தியாய்த் தலைக்கட்டிற்று கீழில் திருவந்தாதி (இரண்டாம் திருவந்தாதி). அப் பரபக்திக்கு அநந்தரம் ஸாக்ஷாத்காரமாயிறேயிருப்பது. தன்னைக் காட்டிக் கொடுக்கக் கண்டேன் என்கிறார் இதில்."

" 'வையந் தகளி' ஞானத்தைச் சொல்லுகிறது. அதாகிறது அவன் சேஷி என்றும் நாம் சேஷம் என்றும் அறியும் அறிவு.

'அன்பே தகளி' ஞான விபாகமாய் அது உண்டானால் உண்டாகக் கடவ பரபக்தியைச் சொல்லுகிறது.

"இது (திருக்கண்டேன்) அந்தப் பரபக்திக்கு அநந்தரமான ஸாக்ஷாத்காரத்தைச் சொல்லுகிறது."

ஆக ஒன்றையொன்று மேலும் விளக்கி விரிவுபடுத்திக் கொண்டு போவனவாய் இருக்கின்றன மூன்று அவதாரிகைகளும். ஸ்ரீவைஷ்ணவக் கருத்துலகில் ஈடுபாடு கொண்டோர்க்கு அரிய பொக்கிஷம் இந்த நூல்.

***

No comments:

Post a Comment