ஒவ்வொரு மொழியிலும் கிளவியாக்கம் என்பது மிகவும் சுவையாக இருக்கிறது ஊன்றிப் பார்த்தால்.
வடமொழியில் ஒரு சொல் கண்ணுக்குப் பட்டது. ‘ஸ்வரூபதாததீந்யம்’ என்பது அந்தச் சொல். இது எப்படி உருவாகிறது?
முதலில் ரூபம். ரூபம் என்றால் என்ன? ஸ்வ என்பது தன்னிலை சேர்ந்து ஸ்வரூபம் - சுய உருவம் என்று ஆகிறது.
அடுத்து அதீநம் என்பதற்கு வருவோம். அதீநம் என்றால் சார்ந்து இருப்பது என்று பொருள். தத் + அதீநம் = தததீநம். தத் என்றால் அது. எது? எந்தச் சொல்லுக்குப் பின்னால் இந்த ‘தத்’வருகிறதோ அந்த முன்சென்ற சொல்லைக் குறிக்கும்.
இங்கு ஸ்வரூபம் என்னும் சொல்லுக்குப் பின்னால் தத் வந்து சேருவதால், தத் (அது) என்பது அந்தச் சொல்லான ஸ்வரூபம் சம்பந்தமாக எதையோ சொல்லப் போகிறது என்று பொருள். ஸ்வரூபம் சம்பந்தமாக என்ன விஷயத்தை இந்த தத் என்னும் ஒட்டு சொல்லப்போகிறதோ அந்த விஷயம் ஆவது ‘அதீநம்’ சார்ந்திருப்பது என்னும் விஷயம். அதாவது ஸ்வரூபம் +தத் + அதீநம் = ஸ்வரூபமாம் +அதை + சார்ந்திருப்பது என்று பொருள் படுகிறது. தமிழில் சொன்னால் ’சுய உருவாம் அதைச் சார்ந்திருப்பது’.
சரி. அப்படியென்றால் ஸ்வரூபதத் அதீநம் = சுய உருவைச் சார்ந்திருப்பது என்று வரவேண்டும். ஆனால் இந்தச் சொல் எப்படி இருக்கிறது? ஸ்வரூபதாததீந்யம் - என்று இருக்கிறது. இப்படி எப்படி உருமாறியது?
தத் + அதீநம் = ததீநம் = அதைச் சார்ந்திருப்பது என்னும் பகுதியைப் பார்த்தோம் அல்லவா? இப்பொழுது இந்த ‘அதைச் சார்ந்திருப்பது’ என்பதைப் பண்புப் பெயராக ஆக்கிப் பார்ப்போம். எப்படி?
அதைச் சார்ந்திருப்பது ---> அதைச் சார்ந்திருக்கும் தன்மை (பண்புப் பெயர்)
இப்படி தத் அதீநம் என்பதை அதன் பண்புப் பெயராக மாற்றும் போது இந்த தததீநம் என்பது ‘தாததீந்யம்’ என்று மாறும்.
தாததீந்யம் = அதைச் சார்ந்திருக்கும் தன்மை.
இப்பொழுது ஸ்வரூப + தததீநம் --> ஸ்வரூப தாததீந்யம் (ப.பெ)
சுய உருவைச் சார்ந்திருப்பது --> சுய உருவைச் சார்ந்திருக்கும் தன்மை
ஸ்வரூப தாததீந்யம் என்பதன் பொருள் - சுய உருவைச் சார்ந்திருக்கும் தன்மை.
இப்படித்தான் உலகில் மொழிகள் எங்கணும் எப்படிச் சொல்லுருவாக்கம் நடைபெறுகிறது என்று பார்க்கும் போது மிக ஆர்வமூட்டுவதாக இருக்கிறது.
***
No comments:
Post a Comment