Saturday, December 21, 2019

அத்வைத ரஸம்

சித்திரம்சேர் வத்திரத்தைச் சித்திரம் கண்மூடினும் அவ்
வத்திரம்பொய் யாகாத வண்ணமருஞ் - சித்துருவை
மாயாரூபங்கண் மறைப்பினு மஃதெஞ்ஞான்று
மோயாத பேரொளி யன்றோ.
(அத்வைதரச மஞ்சரி, அச்சுதாநந்த ஸ்வாமிகள்)

ஒரு துணி இருக்கிறது. அதில் சித்திரங்கள் எல்லாம் நகர்ந்து, பேசி, பெயர்ந்து பாடுமதான சினிமாக் காட்சி ஒளிபாய்ச்சப்பட்டு நடந்துகொண்டிருக்கிறது. இப்பொழுது அதில் வரும் ஒரு சித்திரம் ஆணோ பெண்ணோ நன்கு தூக்கத்தில் கண்ணை மூடிவிட்டது. அதற்கு அதன் நனவுலகமே அந்தத் திரையில் ஓடிக்கொண்டிருந்தது நின்றுவிட்டது. எந்தத் துணியின் மீது நீ இப்படியெல்லாம் சலனம் கொண்டு, பேசி, நடந்து ஓடிப் பிறகு இப்பொழுது தூங்குகிறதோ அந்தத் துணி இருக்கிறதா இல்லையெனில் அந்தச் சித்திரம் கண்ணை மூடியதால் துணியும் இல்லாது போய் விட்டதா? அந்தத் துணியைக் கேட்டால் என்ன சொல்லும்..
நீ எதைப் பற்றிப் பேசுகிறாய்? நீ யார்? என்றுதான் கேட்கும் அந்தத் தொங்கும் துணி. என்ன நடந்தது அதற்கு ஒன்றும் பொருட்டில்லை. எல்லாம் துணியின் மீது காட்சிகள். சிலது பார்க்கப்படும் காட்சிகள் சிலது பார்க்கும் காட்சிகள்.

சித்திரம்சேர் வத்திரத்தை
சித்திரம்தன் கண் மூடினும்
அந்த வஸ்திரம் பொய்யாகாதவண்ணம்
அரும் சித்துருவை மாயா ரூபங்கள் மறைப்பினும்
அஃது எஞ்ஞான்றும் ஓயாத பேரொளி அன்றோ!

*
வெள்ளத்தின் வேகத்தான் மேவும் பெருஞ்சுழிகள்
வெள்ளம்போனால் போவிதம் போல - மெள்ளச்
சொரூபநிட்டை வந்தெய்திற் தொல்லுலகச் சேட்டை
அரூபமுற்று விஸ்ராந்தி யாம்.
(அத்வைதரச மஞ்சரி)

வெள்ளத்தில் பெருஞ்சுழிகள் சுழல்கள் பல காட்சி எல்லாம் எங்க போச்சு இப்பக் காயுது. இந்தப் பக்கமெல்லாம் தோப்பு. காடா இருக்கும். அந்தக் காட்டுக்குள்ளாற ஒரு கல்யாண மண்டபம். சார் அந்த கல்யாண மண்டபம் எங்கே என்று கேட்டேன். அதான் சார் இது என்று ’செந்திலி’த்தார் ஒருவர். பார்த்தா அந்த மண்டபம் அப்படியே இருக்கு. ஆனால் சூழல். நம்ப முடியவில்லை. கால வெள்ளத்தில் ஞாயிறு ஓர் குமிழியாம் - பாரதி பாடினதுதான் எவ்வளவு உண்மை! ஞாயிறே அந்தக் கதி என்றால் மற்றதை என்ன சொல்ல? வெள்ளம் போனாக்கூட ஒரு மதகு மேல நீட்டிக் கொண்டிருக்கும் பாறை மீது இடம் பிடித்தமர்ந்து பார்க்கின்றாற்போல் ஏதாவது இந்தக் கால வெள்ளத்தில் நிலையான மதகு இருக்கா? அதில் போய் உட்கார்ந்தால் போவது இருப்பது வருவது எல்லாவற்றுக்கும் அப்படியே சாட்சி பூதமா இருந்துகொண்டு....

இருக்கு என்கிறார் அச்சுதாநந்தர். அப்படி அலுங்காம நலுங்காம மெள்ள சொரூப நிட்டை, தன்னுடைய உண்மையான ஆன்ம சொரூபத்தில் நிலைப்பேறு வந்துவிட்டால் இந்தத் தொல்லுலக சேட்டையெல்லாம் அப்படியே ஜாலியா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாமா? இல்லை எல்லாம் காணாமல் போய்விடும். நிம்மதி விஸ்ராந்தி.

***

உலகில் மிகக் கஷ்டமான செயல் எது தெரியுமா? சிவப்பிரகாசப் பெருந்திரட்டின் மூலம் தெரியவரும் 700 ஆண்டுகளுக்கு முந்தைய பாட்டு ஒன்று

துன்பத்தை இன்பம் என்றும்
தூய்தின்மை தூய்மை என்றும்
இன்பத்தைத் துன்பம் என்றும்
இல்லதை உள்ள தென்றும்
புன்புற்ற நன்மை என்றும்
பொன்றுவ பொன்றா என்றும்
அன்புற்ற உலகர்க்கு உண்மை
உரைத்தல்போல் அருமை உண்டோ.
(ஞானசாரம்)

***

No comments:

Post a Comment