பாரதி ஆய்வுகள் -- சிக்கல்களும், தீர்வுகளும், ஆசிரியர் சீனி.விசுவநாதன்
மேற்படி நூல் 640 பக்கங்கள் கொண்ட புத்தகம். முன்னரே சிக்கல்கள் மட்டும் பற்றிச் சிறு நூலொன்று இவரால் எழுதப்பட்டு வந்தது. ஆனால் இந்த நூல் மிக விரிந்ததும், கிட்டத்தட்ட அனைத்துக் குளறுபடிகளையும், பாரதி நூல்கள், வாழ்க்கைச் செய்திகள், சரித நூல்கள், மூன்றாம் மனிதர் தகவல், சக காலத்து அறிஞர்கள் பின்னிட்டுப் பாரதியின் பெருமை உணரத் தலைப்பட்டபின் புது ஊக்கம் கொண்டு தாங்கள் பழக நேர்ந்த பாரதி நாட்களைப் பற்றிய நேரடி வர்ணனைகளின் சான்றாண்மை என்று மிக விரிவாகச் செய்திருக்கிறார் ஆசிரியர். பாரதி இயலின் பெரும் உபகாரி இந்த ஆசிரியர் என்பது பலருக்கும் மேன்மேலும் தெரிந்துகொண்டு வரும் விஷயம்.
கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி நூல்களில் எல்லாம் ஆசிரியரின் உழைப்பைப் பூரணமாகப் பார்வையிடும் பொழுது எனக்குத் தோன்றிய கருத்து இந்த ஆசிரியருக்கு உண்மையில் இந்த வேலைக்காக இரண்டு பட்டங்கள் தரவேண்டும் என்பதுதான். ஏனெனில் பாரதியின் எழுத்துக்களைத் தேடிப்பிடித்து வந்து கால நிரல் படுத்தி ஊர்ஜிதம் செய்து போடுவது ஒரு பெரும் பணி. அதோடு நிற்காமல் பாரதி ஒரு கட்டுரை எழுதுகிறார் என்றால் அந்தக் கட்டுரை வேறு ஏதோ நிகழ்ச்சிகளையோ, அல்லது மற்றவர் எழுதிய இதழ்க் கட்டுரைகளையோ குறிப்பிட்டால் அந்த நிகழ்ச்சிகள் பற்றிய தகவல், அந்தக் கட்டுரைகள் பற்றிய தகவல், முடிந்த இடத்தில் எல்லாம் அந்தக் கட்டுரைகளின் நகல், மற்றும் அதன் தமிழாக்கம் (ஆங்கிலமாய் இருப்பின்) என்று அந்தக் காலக் கட்டத்தையும் சேர்த்து ஆவணப் படுத்திவிட்டார் ஆசிரியார்.
இவ்வளவு நெடிய உழைப்பில் பழுத்த, பாரதி வித்தையை வளர்க்கும் பெரியவர் கொண்டு வந்திருக்கும் நூல் ‘பாரதி ஆய்வில் சிக்கல்களும் தீர்வுகளும்’. 640 பக்கங்களும் பாரதி ஆய்வாளர்கள், மாணவர்கள், நேசர்கள் ஆகியோருக்கு அருமையான பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை.
பின்னிணைப்புகளில் தலைப்புகளே அவற்றின் முக்கியத்வத்தைக் கூறும். 1)பாரதி காலத்தில் பத்திரிக்கைகளில் பிரசுரமான பாடல்கள் 2)பாரதி காலத்தில் நூல் வடிவம் பெறாத பாடல்கள் 3)பாரதி காலத்திய நூல்களில் மறுபிரசுரம் செய்யப்பட்ட பாடல்களுக்கான விவரம் 4)பிரிட்டிஷ் அரசு ஆட்சிக்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாரதி பாடல்கள்.
பாரதி இயலை கற்பனைகளின் மைதானமாக ஆக்கிவிடும் நிலையிலிருந்து மீட்டு, ஆரோக்கியமான ஆய்வுகள் மிகுவதற்கான வாய்ப்பை அதிகப் படுத்தியதில் பெரும் பங்கு திரு சீனி. விசுவநாதனுடையது என்றால் இந்த நூல் எந்த அளவிற்குச் சான்றாண்மை மிக்கதாய் இருக்கும் என்று நீங்களே ஊகிக்கலாம். நூலாசிரியரின் ’படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை’ என்ற அறிமுகம், 32 தலைப்புகளில் நெடுங்கட்டுரைகள், 6 பின்னிணைப்புகள் என்று நூல் பரந்துபட்டு பாரதி ஆய்வுலகின் சிக்கல்களையும், தீர்வுகளையும் விளக்குகிறது.
உதாரணத்திற்கு மூன்று சொல்கிறேன். ‘சத்தியப் போர்’ என்பது பாரதி பாடலா? சங்கு சுப்பிரமணியன் தம் இதழில் போட்டது. அது பாரதி பாடல் இல்லை என்று பாரதியின் தம்பி திரு சி விச்வநாதனும், திரு சிதம்பரம் ரகுநாதனும் கருத்து தெரிவித்தனர். திருமதி செல்லம்மா பாரதி வெளியிட்ட சுதேச கீதங்கள் பதிப்பில் இருந்ததாகத் திரு சிதம்பரம் ரகுநாதனின் கருத்து. பாரதியின் தம்பி கருதியது சொற்கள் பாரதியின் சொல்லாட்சியாக இல்லை என்பது. பாரதி பிரசுராலயம் வெளியிட்ட பதிப்பில் இந்தப் பாடல் இடம் பெறவில்லை. நூல் இந்தச் சிக்கலை விளக்கி, தீர்வும் தருகிறது.
அடுத்து, திலகர் மறைந்த போது ஏன் பாரதியார் அவரைபற்றி எதுவும் பாடவில்லை? எங்கிருந்தார்? கடலூரில் எழுதிக்கொடுத்த வாசகங்கள் அவரைப் பாடவிடாமல் கையைக் கட்டிப்போட்டதா? கிடைத்த தகவல்களுக்கிடையிலும், அந்தத் தகவல்களையும் அணுகும் முறையில் ஆர்வம் ஆர்வமின்மை காரணமாகவும் பலரும் பெரும் கேள்விகள் எழுப்பி, தம் கேள்விகளையே முடிவுகளாகவும் ஆக்கிச் செய்திருக்கும் குழப்பத்தின் இடையே இந்தச் சிக்கல் என்ன? அதன் தீர்வு யாது? என்பது எவ்வளவு பெரிய விஷயம்?
அடுத்து பாப்பா பாடல். பாரதி பிரசுராலயத்தாரின் பதிப்பில் பல பிழைகள் என்று வாசகர்களின் சார்பாக நியாயக் குரல் எழுப்பினார் புதுமைப் பித்தன் மணிக்கொடியில். ஆனால் அவர் சுட்டிக்காட்டிய தவறுகள் பாரதி காலத்திலேயே பதிப்பிக்கப்பட்ட தொகுப்புகளில் ஏறியிருந்தால். அப்பொழுது அவை தவறுகள் அல்லவே. கிடைத்ததைக் கொண்டு பாரதியின் ஆகச்சிறந்த உண்மையான பாடம் என்றுதானே ஆகும். இவை எல்லாம் பாரதி பற்றிய ஆவணங்களைப் பல பத்தாண்டுகளாகத் தேடித் திரட்டி வரும் ஆசிரியர் சுட்டிக்காட்டி உண்மை நிலவரங்களைத் தெளியப் படுத்துவது எத்தகைய ஆக்க பூர்வமான பணி! இந்தப் பாப்பா பாடலில் ஒரு விஷயம்.
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி - அன்பு
நிறைய வுடையவர்கள் மேலோர்.
என்ற பாட்டில் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியாரின் வரியாகப் படித்துப் பழக்கம்.
ஆனால் திரு சீனி விசுவநாதன் அவர்களது பதிப்பில்
சாதி பெருமையில்லை பாப்பா - அதில்
தாழ்ச்சி உயர்ச்சி செய்தல் பாவம்
என்று வருகிறது. கீழ்க்குறிப்பில் சாதிகளில்லையடி பாப்பா - என்பது 1917ல் வந்த நெல்லையப்பர் பதிப்பு என்கிறார். அப்படியென்றாலும் பாரதியார் இருந்த பொழுதே அவர் சம்மதத்துடன் வந்த பதிப்புதானே அது? கையெழுத்துப் பிரதியில் இருந்தாலும் பாரதியார் பதிப்பிற்குக் கொண்ட பாடத்தைத்தானே பாரதி பாடலாகக் கொள்ள வேண்டும்? இல்லை அவருடைய கையெழுத்துப் பிரதியில் கண்டதுதான் மிக்க சான்று என்றால், அப்படியென்றால் பாரதியார் சாதிகள் உண்டு, ஆனால் அவற்றில் பெருமை இல்லை. உயர்வு தாழ்வு சொல்லக் கூடாது. அவ்வளவுதான் எனும் கொள்கை உடையவரா? இல்லையெனில் சாதிகள் இல்லையடி பாப்பா என்பதுதான் பாரதியின் முடிந்த எண்ணமா?
பாரதி பாடல்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்பிலும்
சாதி பெருமையில்லை பாப்பா - அதில்
தாழ்ச்சி யுயர்ச்சிசெய்தல் பாவம்
என்று போட்டிருக்கிறது. அதன் கீழ்க் குறிப்பில் 1917 பரலி சு நெல்லையப்பர் பதிப்பைக் குறிப்பிட்டு, மேற்படி பதிப்பில் என்று சுட்டிக்காட்டி
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி யுயர்ச்சிசொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி - அன்பு
நிறைய வுடையவர்கள் மேலோர்.
என்று பாடலின் வடிவமும் தரப்பட்டு, மேலும்,
" பாரதியாரின் மிக நெருங்கிய நண்பர் நெல்லையப்பர்; கவிஞர் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்த பதிப்பாதலின் பாரதியார் திருத்திக்கொடுத்த வண்ணமே வெளிவந்தது என்றே கொள்ளுதல் வேண்டும்."
என்றும் மிகத் தெளிவாக அடிக்குறிப்பும் வரையப் பட்டுள்ளது. எனக்கு எழும் சந்தேகம் என்னவெனில் இவ்வளவு தெளிவாக அடிக்குறிப்பில் 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்பதே பாரதியார் திருத்திக்கொடுத்த வடிவம் என்று சொல்லிவிட்டுப் பின்னர் அந்தப் பாடத்தை முக்கியமான பாடல் அமைப்பிற்குள் காட்டாமல் ஏனோ கீழ்க் குறிப்புக்குத் தள்ளியிருக்கின்றனர்? 'சாதி பெருமையில்லை பாப்பா' என்ற வரியை ஏனோ பிரதான பாடல் அமைப்பிற்குள் பெய்துள்ளனர்? பாரதியார் காலத்திற்குப் பின்னர் வந்த பாடல் வடிவம் என்றால் அவ்வாறு கீழ்க் குறிப்பில் காட்டி, பாரதியின் கையெழுத்துப் பிரதியில் என்ன வடிவம் உள்ளதோ அதைப் பிரதானமாகக் காட்டுதல் முறை. ஆனால் இங்கு திருத்தப்பட்ட வரி வடிவம் பாரதி காலத்திலேயே பாரதியாராலேயே திருத்தப்பட்டது என்று அடிக்குறிப்பும் தெரிவித்து விட்டு அவரால் விடப்பட்ட ஒரு வடிவத்தைப் பேணி, பிரதான அமைப்பில் தந்திருப்பது ஏன் என்றே புரியவில்லை.
பாரதியாரின் பாடல்களைக் கால வரிசையில் தந்த திரு சீனி விசுவநாதனோ பாடலின் வடிவத்தில் 'சாதி பெருமையில்லை பாப்பா' என்னும் பாடத்தையே முக்கிய பாடமாகக் காட்டிவிட்டுக் கீழ்க் குறிப்பில் 1917ல் வந்த பதிப்பில் பாடமான 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்னும் பாடத்தைக் காட்டுகிறார். அப்படியென்றால் பதிப்பாசிரியராகிய திரு சீனி விசுவநாதன் பாரதியாரின் அறுதியான பாடல் வரி 'சாதி பெருமை இல்லை பாப்பா' என்றுதான் நினைக்கிறார் என்று பொருளாகிறது. அப்படி இல்லையேல் அவர் இந்த வரியைக் கீழ்க் குறிப்பில் காட்டி 1917ஆம் ஆண்டு பதிப்பின் படி 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்னும் வரியை பிரதானமாகக் காட்டியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. ஆனால் பூங்கொடி பதிப்பகம் மூலம் போட்ட பாரதியார் கவிதைகள் (இரண்டாம் பதிப்பு, டிசம்பர் 2001) என்ற நூலைப் பதிப்பித்த திரு சீனிவிசுவநாதன் அவர்களே பாப்பா பாடலில் தந்திருக்கும் பாடம் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்பதே.
ஆனால் 'பாரதி ஆய்வுகள் சிக்கல்களும் தீர்வுகளும்' என்னும் நூலில் எழுதும் போது இதே பாப்பா பாட்டைப் பற்றியே ஓர் அத்யாயம் ஒதுக்கி இதன் சிக்கல்களை என்றைக்குமாகத் தீர்க்க வேண்டும் என்று எழுதி வரும் போது புதுமைப் பித்தனின் விமரிசனம் ஒன்றிற்குப் பதில் எழுதுகிறார். புதுமைப் பித்தன் 1925 ஆம் ஆண்டு வந்த பாரதி பிரசுராலயத்தாரின் பதிப்பில் பாப்பா பாட்டில் பதிப்பித்தவர்கள் பலவித மாறுதல்களுக்கு உட்படுத்திவிட்டார்கள் என்றும், பாட்டுகளைச் சரியான பாடங்களுடன் ஏன் பிரசுரிக்கலாகாது என்றும் கேட்டிருந்தாராம். அதற்குப் பதில் எழுதும் போது திரு சீனி விசுவநாதன் கூறுவது:
"புதுமைப் பித்தனின் நியாயமான (?) கேள்வியின் தன்மையைச் சற்றே உரசிப் பார்க்க வேண்டும். ஞான பாநு பத்திரிக்கையிலே பாட்டு பிரசுரமான போது, பதினான்கு செய்யுள்களே இடம் பெற்றிருந்தன. 1917 ஆம் ஆண்டிலே பாட்டைச் சிறு பிரசுரமாக நெல்லையப்பர் வெளியிட்ட போது இரு செய்யுள்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டன. பாட பேதங்களும் இடம் பெற்றன. 1917 ஆம் ஆண்டிஎலே செய்யப்பட்ட பாட பேத மாறுதல்களே 1919, 1922, 1925 ஆகிய ஆண்டுகளிலே மறுபிரசுரமான "பாப்பா பாட்டி”ல் தொடர்ந்து இடம் பெற்றன. பாரதி காலத்திலேயே நிகழ்ந்துவிட்ட மாறுதல்களுக்கு அடிப்படை உண்மைகளை ஆராயப் புதுமைப் பித்தன் தவறி விட்டார்.; 'இலக்கியத்தைப் பிரசுரிக்க முயலும் முறை வேறு' என்று சொன்னவர், அந்த இலக்கியம் பிரசுரம் செய்யப்பட்ட காலப் பகுதிகளையும் ஆராய முற்பட்டிருக்க வேண்டும்."
இவ்வளவும் புதுமைப் பித்தனுக்குப் பதிலாக எழுதுகின்ற திரு சீனி விசுவநாதன் தாம் பிரசுரித்திருக்கும் கால வரிசையிலான பாரதி பாடல்களில், பாப்பா பாட்டில், 1917 ஆம் ஆண்டில், அதாவது பாரதியார் வாழ்ந்திருந்த காலத்திலேயே வந்த பாடல் வரியின் வடிவமான 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்பதை பாப்பா பாட்டில் முக்கியமான பாடமாகக் காட்டாமல், 'சாதி பெருமை இல்லை பாப்பா' என்னும் வரியைக் காட்டியது ஏன் என்று புரியவில்லை.
சரி. பாரதியாரின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று அவரது மற்ற பாடல் வரிகளை நாம் கவனித்தால் மிகவும் தெளிவாகவே இருக்கிறது.
'முரசு' என்ற பாடலில்,
"சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
ஆதரவுற்றிங்கு வாழ்வோம் - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்"
என்று மிகத் தெளிவாகப் பாரதியார் பாடுகிறார்.
அது போல் 'பாரத தேசம்' என்னும் பாடலிலும் இன்னும் தெளிவாகக் காட்டிவிடுகிறார்:
"சாதி இரண்டொழிய வேறில்லையென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்
நீதிநெறியில் நின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்."
ஔவையின் சொல்லை அமிழ்தம் என்று கொண்டாடுகிறார் பாரதியார்.
இவ்வளவு தெளிவாக பாரதியின் இதயத்தைப் பாரதியே கல்வெட்டாகப் பல இடங்களிலும் தெளிவுறப் பதிந்து வைத்திருந்த போதிலும், ஏன் பாரதியின் பாடம் எது என்பதில் குழப்பம் வருகிறது?
***
No comments:
Post a Comment