Monday, December 30, 2019

பிறந்த குழந்தைக்கு பக்தி வருமா?

நமக்கு எதற்குத்தான் நேரமிருந்தது? ஒரு ஹோட்டலில் நண்பருடன் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது அங்கு ஒரு காட்சி. ஒரு குழந்தை கிடுகிடுவென்று எதையோ காட்டிக்கொண்டு ஓடுகிறது. தகப்பன் பின்னாலேயே ஓடுகிறான் திட்டிக் கொண்டு. குழந்தையோ 'அது அது' என்கிறது. எது என்று கேட்கத் தகப்பனுக்குப் பொறுமையில்லை. 'சரி சரி வாவா அதற்கெல்லாம் நேரமில்லை' கையைப் பிடித்து இழுத்துத் தன் கவலையில் தோய்ந்தவாறே சென்றான். குழந்தையிலிருந்து கடவுள்வரை எதற்கும் நமக்கு நேரமில்லை. பின் நம் காலமெல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? அதோ அங்கே ஓர் ஒல்லியான சின்ன சிகப்பு நாய் கிடுகிடுவென வந்து அந்தக் குழந்தையிடம் நின்று ஏதாவது கிட்டுமா? கிட்டாதா? என்று இரண்டு முறை வாலை ஆட்டி, பின் நிச்சயம் செய்துகொண்டு விறுவிறு என்று எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. அப்படித்தானே நம் மனத்தையும் அலையும் நாயாக்கிப் பேருமா பேராதா என்று அலையவிட்டிருக்கிறோம். குழந்தைமையை எட்டி எம்பிப் பார்க்கத் தெரியாத நாம் நகக்கண்ணை உண்டவாறே டிவியைப் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் சமாதியில் திவ்ய தமபதிகளைப் பார்த்ததாகச் சொன்னவர் வார்த்தையை நாம் ஏற்றாலும் விடுத்தாலும், குழந்தைமையைப் பார்க்கத் தெரியாத ஆட்களே இல்லை ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசாரியர்களின் கூட்டத்தில்.

ஒரு குழந்தை பிறக்கிறது. உடனே எல்லோரும் 'கைகள் இருந்தவா காணீரே, கால்கள் இருந்தவா காணீரே' என்று திரள் திரளாக வந்து பார்ப்பர்கள் அன்றோ! அதுபோல் ஒரு பெரியவர், முக்கோல் பகவர் வந்து 'என் கண்ணினால் நோக்கிக் காணீர்' என்று உரிய கண்ணால் அந்தக் குழந்தையைப் பார்க்கிறார். பக்கத்தில் இருப்போர் அவர் குழந்தையை எடுக்கும் லாகவத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர். ஸ்ரீராமானுஜரிடம் அந்தக் குழந்தையைக் காட்ட வேண்டுமே! அதுவரை ஐயோ குழந்தைக்கு ரட்சையிட வேண்டுமே. முக்கோல் பகவர் தாயாகி விடுகிறார். வலுவான ரட்சையாக இட்டவாறே கொண்டுசென்று ஸ்ரீராமானுஜரிடம் காட்டுகிறார். அவரோ குழந்தைமையைப் பார்க்கத் தெரிவதில் பரிபூரணர். விந்தை! என்ன இது த்வயம் கமழ்கிறது! என்று வியந்து கூறுகிறார். ஸ்ரீவைஷ்ணவத்தின் நாபியான தத்துவக் கருவூலங்கள் மூன்று மந்திரங்கள்.-- பெரிய திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம்.

கொணர்ந்து கொடுத்த எம்பார் தயங்கியபடியே 'அடியேன்தான் வரும்போது ரக்ஷையாக இருக்கட்டுமே என்று த்வயம் ஓதினேன்' என்றார்.

'அப்படியா! ஆஹா குழந்தைக்கு ஸ்வாபாவிகமாகவே நீர் பரிவர் ஆனீர் அன்றோ! இந்தக் குழந்தைக்கு நீரே ஆசாரியராய் இரும்' என்றார். (ஸ்வாபாவிகமாகவே - இயற்கையாகவே)

குழந்தை யார்? கூரத்தாழ்வான் குமாரரான பராசர பட்டர். ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு இந்தப் பெரியவர்கள் படுத்தும் பாடு! நாமாக இருந்தால் உடனே ஜாதகம் கணிப்போம். இல்லையா குழந்தை பேரில் எவ்வளவு டெபாஸிட் செய்யலாம் என்று யோசிப்போம். அதுகூட இல்லை. அவன் குழந்தை பிறந்தபோது நாம் மெனக்கெட்டுப் போய் பார்க்கவில்லை.? எட்டிப் பார்த்தானா அவன்? என்று மணல் சோற்றில் கல் பொறுக்கிக் கொண்டிருப்போம்.

பிறந்த குழந்தைக்கு பக்தி வருமா என்று ஜோஸியம் பார்க்கும் பெற்றோர் தோன்றுகிற அன்றிலிருந்து கிருத யுகக் கணக்கு ஆரம்பம்.

***

No comments:

Post a Comment