Monday, December 16, 2019

’நான்’ புராணம்

இந்த அகங்காரத்தை மாதிரி கவன ஈர்ப்பு தீர்மானம் போட யாராலும் ஆகாதுயா சாமீ! எப்பப் பாரு, என்னைப் பார் என் அழகைப் பார், என்னைப் பார் என் அழகைப் பார்...ஓயரதே இல்லை... நான் இதைச் செய்தேன் நான் அதைச் சொன்னேன் நான் அங்க போனேன் நான் அதைச் செய்யலை ...நானாவது அங்கப் போறதாவது...நான் என்ன நினைக்கிறேன் என்றால்.... நான் சொல்ற மாதிரி செய்ங்கோ, நான் தான் அப்பவே சொன்னேனே, நான் அதெல்லாம் கரெக்டா இருப்பேன், நான் கொஞ்சம் அசந்துட்டேன்,.. இல்லன்னா..

ஊனக்குரம்பையின் உள்ளெலும்பிற்குள் ஒரு சட்டி கவித்த வெண்பொதிக்குள் இந்த நான் தான் சதா அரி ஆசனம் (அரி ஆசனம் - வினைத்தொகை,) வீற்ற ஒரே சக்ரவர்த்தி. குட்டை ராஜாங்கம், தூங்கினாலும் விட்றதில்ல.....கனவுல வேட்டைக்குப் போவாரு, கண்டதைக் கண்டு பயந்து தலை தெறிக்க ஓடி எங்கயோ விழுந்து, பறந்து, அண்டத்தின் ஆதி ஆந்தை அலறும் போது, சகிக்காம போய் அதன் வாயைப் பொத்துவாரு... பார்த்தா....நனவுல....அலாரம் டைம் பீஸ் உருண்டு கீழ விழுந்து ஓடும். அப்பவும்...அடடா கையைச் சரியாத்தான் நீட்டினேன்...என்ன ஒட்டுல இருந்துது போல இருக்கு...கொஞ்சம் தவறிடிச்சு....அதெல்லாம் தூக்கத்துலயும் சாக்கிரதையா இருப்பமுல்ல... பாருங்க... இதனோட கேவல கம்பீரம் இருக்கே... எதுவும் இதுக்கு ஈடாகாது.... அடி சுருண்டு விழுந்தா, அம்பேல் தூக்கத்துல ஆழ்ந்தா, கை ஒரு பக்கம் கால் ஒரு பக்கம்....

எனக்கு என்னமோ...என்னதான் சொலுங்க... இந்த அகங்காரத்தை ரொம்பவே பிடிக்கும்.... பாவம் அதனோட இயல்பு அப்படி...அது என்ன பண்ணும் பாவம்..... கண்ணு தெரியாது காது கேட்காது ஆனால் எல்லாம் அதுக்குத் தெரியும் போல ஒரு நினைப்பு.... அதுல மட்டும் அகங்காரத்துக்கு சந்தேகம் வரதே இல்லை... நாமதான் கொஞ்சம் அனுசரணையா அதைச் சொல்லி, மெதுவா பல விஷயங்களில் மூட்டி, நல்ல வழிகளில் கொண்டு போய் விட்டு, பாவங்க.. என்னதான் இருந்தாலும் நம்ம கூட்டு ஜீவன்... நாமே வெறுத்தா ஆவுமா? என்னதான் அடக்கம், நைச்சியம், தன்னை முன்னிறுத்தாமல் பின்னாடித் தள்ளிக் கொள்ளும் பான்மை என்றெல்லாம் எவ்வளவு முக்கினாலும் கடைசியில் தாய்ச்சிக் கோட்டை முந்திக் கொண்டு வந்து தொட்டு விடுவது ஒவ்வொருவருக்கும் அவரவர் 'நான்' தான். சதா சர்வ காலமும் ஒவ்வொருவரும் குளிப்பாட்டி, போஷணை பண்ணி, அலங்காரம் செய்து, போற்றுவது இந்த ‘அகங்காரம்’.

இது தவறா என்று கேட்பதை விட இதைத் தவிர்த்து விட்டு ஒருவரால் இருக்க முடியுமா? என்று கேட்பது உத்தமம். அதாவது இந்த 'நான்' என்பதற்கு நாமெல்லோருமே முழு நேரப் பணியாள் என்பதுதான் நடைபெறும் செய்தி.

ஒருவேளை இந்த ‘நான்’ என்பதை அமைதியாக முழு கவனத்தில் நிறுத்தப் பழகுவது என்பது ஞான சாதனத்திற்கு வழிவகுக்குமோ!

***

No comments:

Post a Comment