Monday, December 23, 2019

சைவ சித்தாந்தமும் திருவருட்பயனும்

சைவ சித்தாந்தம் இந்திய தத்துவ வளத்திற்குத் தந்திருக்கும் கருத்துகளில் சிறந்தது ஆணவ மலம் பற்றிய கருத்து. இஃது உயிரோடு உடன் தோன்றி என்று சொல்லப்படுவது. இதனை இருளோடு ஒப்பிடலாம். ஆனால் இது இருளை விட மோசமானது என்று கூறும் சித்தாந்தம்.

ஏன் இது இருள்? மெய்ப்பொருளை இது காட்டாது மறைப்பதால். ஏன் இது இருளை விட மோசம்? இருளாவது பொருள்களை மறைக்கும். ஆனால் தான் இருப்பதைக் காட்டிக் கொள்ளும். ஆனால் ஆணவ மலம் என்னும் இருள் மெய்ப்பொருளையும் மறைக்கும்; தன்னுடைய இருப்பையும் கட்டாமல் மறைக்கும்.

ஆன்மாவிலிருந்து இந்த இருளை நீக்கத்தான் உயிருக்கு ஆதிமுதல் கர்மம், மாயை என்னும் இரண்டு மலங்களையும் இறைவன் கூட்டி வைக்கிறான் என்று கூறுகிறது சித்தாந்தம். அதனாலேயே அவை இரண்டையும் ஒரு விதத்தில் ஒளிக்குச் சமம் என்றும் நயம்பட உரைக்கிறது. ஆம். இருளை நீக்கும் எதுவோ அது ஒளிக்குச் சமம்தானே !

இந்த நுட்பமான கருத்தின் பரப்பை ஒரு சிறிய குறட்பாவில் அமைத்துவிடுகிறார் உமாபதி சிவாசாரியார், தமது திருவருட்பயன் என்னும் நூலில்.

விடிவாம் அளவும் விளக்கனைய மாயை
வடிவாதி கன்மத்து வந்து.

உயிருக்கு என்று விடிவு காலம்? இறைவனோடு அஃது ஒன்றாம் காலத்து. அது வரையில் ஆணவ இருளில் மூடிக் கிடக்கும் உயிர். அந்த விடிவு காலம் வரும்வரை உயிருக்கு ஒளியாக உதவுவது கன்மத்துடன் சேர்ந்த மாயை. கன்மம் என்பது சாஃப்ட்வேர். மாயை என்பது ஹார்ட்வேர் என்று ஒரு வழியாகப் புரிந்து கொள்ளலாம். ஆன்மாக்களின் கன்மத்துக்கு ஈடாக மாயை தனு கரண புவன போகங்களாய் வந்து பொருந்தும். தனு -- உடல், கரணம் - இந்திரியம், புவனம் - போகங்கள் இருக்கும் உலகம், போகம் - வினைக்கு விளைவான துய்த்தல். ஆதி கன்மம் என்று ஒன்று உண்டு. அதையும் இந்தச் சிறிய குறட்பாவில் வடிவு ஆதிகன்மத்து என்று பிரித்தறியும் படியாக வைத்த உமாபதியாரின் புலமை வியத்தற்குரிது.

***

No comments:

Post a Comment