Monday, December 23, 2019

ஒன்றப் படைத்த பதினான்கு வெண்பா

ஒன்றப் படைத்தே இரட்டையில் வைத்திட்ட
உன்னை உரைத்தாலும் யாதுபயன்? - முன்னை
வினையகல மூண்ட புதுவினைக்கே கன்னம்
தனைவைக்கும் என்மடமை யே!

இரண்டாற்றின் நன்நடுவே என்பிறப் பென்றால்
புரண்டுவிழ வாழ்ந்தேன் கடலி -- லரண்டுபோ
யென்னரங்கா கூவுவனே ஏற்றெடுக்கும் கைநீட்டி
உன்னடிக்கீழ் வைத்திடுவாய் காப்பு

முக்காலும் என்னுள்ளே நீயிருக்க நான்மறந்தே
இக்காலம் என்கதறி என்னபயன்? -- மொக்குள்
எனமறையும் தோற்றரவுக் கேயென்னை விற்றால்
அனவரதம் உன்னுறவென் னாம்.

நான்மறையும் காலம் நனிநல்ல காலமெனில்
நான்மறையும் காணா நயத்தக்கோய் -- ஊன்மறைய
உன்னி உணர்வெழுமோர் காலமதே உத்தமமாம்
மன்னும் அருளால் உவந்து.

அஞ்சுதரும் இப்பவநோய் அண்டாமல் காத்தருளே
விஞ்சுதரும் கன்மம் விளையாமல் கார்வண்ணம்
கொஞ்சும் குழலழகர் கெஞ்சுபுகழ் ஆய்ச்சியவள்
தஞ்சமெனத் தானடையும் நெஞ்சு.

ஆறே எனக்கு நினபாதம் ஆயர்கோன்
வேறெதுவும் நானறியேன் வித்தகமாய் -- கூறியசொல்
காப்பெனவே காலமெலாம் கண்ணுறங்கா கைகாட்டில்
கோப்புண்டுக் கண்வளரும் யான்.

எழுந்த திருக்கோலம் எங்கினியான் காண்பன்
விழுந்த அவக்கோலம் காண்பாய் -- அழுந்த
உனபாதம் என்தலைமேல் ஊன்றுவையேல் தோன்றும்
மனத்தகத் துள்ளுன் முகம்.

எழுந்தமுக மெண்ணித் திளைப்பன் அழுவன்
தழுவத் துடித்தே அயர்வன் -- வழுவிலா
ஆர்வத்து வந்தகுறை என்னெனவே ஆகாமல்
மார்வத்துள் முட்டுவன் யான்.

ஆறியிரும் பிள்ளாய் எனநீயும் ஆற்றுவையேல்
தேறாதென் னாவி தெளிந்திடுக -- மாறாத
அன்புனபால் வேண்டும் அரங்கா அருளாயேல்
என்வழியில் பொன்றவிடு நீ.

அஞ்சுபொருள் தானறிந்தார் ஆறறிந்தார் ஏழ்பாரும்
துஞ்சாமல் காக்கின்ற தன்மையினார் -- விஞ்சுபுகழ்
நான்மறையின் முப்பொருளை ஈரரசு தான்குலைய
ஆன்றகுணத் தொன்று மவர்.

நாற்றிசையும் போற்றும் திருமா லவன்நாமம் கூற்றைக் கடிந்தோச்சும் குன்றாமல் காத்துநிற்கும்
சேற்றில் கயல்பாயும் ஆற்றின் இடைக்குறையில்
தோற்றும் பிறவியே காப்பு

முந்நீர் உலகும் மகிழப் புலரியெழ
நன்னீர்மை கொண்டவுயிர் தாம்பொலிய -- எந்நீர
வானாலும் எப்பொருளும் என்றும் திருமாற்கே
தானாகும் சேடமாய்த் தாம்.

இருநிலத்தே வந்துதித்து இன்புதுன்பு கற்பீர்
கருவில் திருவற்றீர் காலக்கூ ழானீர்
திருவில் லெனத்தோன்றித் தான்மறையும் தன்மை
வெருவித் தொழீர்திரு மால்

ஒன்ற நினைத்தக்கால் உள்மனத்தே வந்துதித்து
கன்றுக் குகந்தவென் காளாய் எனும்குரலே
மன்றில் நடமாடி மாலாக்கும் மாலவர்க்கே
ஒன்றடிமை ஓர்திறமாய் ஓர்.

(ஒன்றிலிருந்து ஏழு மீண்டும் ஏழிலிருந்து ஒன்று என்று முதல் சொற்கள் அமைந்து வரும்)

***

No comments:

Post a Comment