'நான் உனக்கு முன்னின்று அளிக்கலாம் அப்பா! ஆனால் உனக்கு பாக்கியம் வேண்டுமே! உனக்கு விதி இல்லை என்றால் என் செய்வது?'
சின்மயாநந்த குருவே! சிறிதே சிந்தித்துப் பாரும். நான் இதுவரை வந்தது என் பாக்கியம் ஏதாவது இருந்ததனாலா? ஏனென்றால் என்னுள் என்ன என்ன இருக்கின்றன? -- நான் அடையாது போனாலும் அடுத்தவன் அடைந்துவிடக்கூடாதே என்று ஒரு மண்டலம் விரதம் இருக்கும் அளவிற்கு அழுக்காறு அவ்வியம் இருக்கிறது. அது ஒன்று போதுமே அனைத்து பாக்கியங்களையும் காலி பண்ணுவதற்கு!
அது மட்டுமா? அதைவிட மோசம். சகஜ மலமாய், உயிரோடுதோன்றி என்று பெயரும் பெற்று இருக்கும் ஆணவம்! தான் இருப்பதையும் காட்டாது, உண்மையையும் மறைக்கும் படு மோசமான இருள்! அதற்குப் பதிலாக நடுக்காட்டின் அந்தகாரமான காரிருள் எவ்வளவோ மேல் ஆயிற்றே! இந்த இருள் பொருளை மறைக்கும். ஆனால் தான் இருப்பதைக் காட்டிவிடும். அதனால் ஒளி ஏற்றி நாம் பொருளைக் காண வசதியாய் இருக்கும். ஆனால் ஆணவமோ... ஐயோ....தன்னை ஒளிபோல் அல்லவா காட்டி என்னைப் பாழில் தள்ளும். யார் சொன்னாலும் புரியவும் விடாது. கண்ணுக்கு நேரே ஒளி தெரிகிறது. அப்புறம் இருளாவது ஒண்ணாவது என்று வழி காட்ட வந்தவரையும் இருள் மயமாகக் காட்டும். இந்த ஆணவம் ஒரு சூது செய்துவிடுகிறது முதலிலேயே. நான் நான் என்று ஒன்றைச் சொல்ல வைத்துவிடுகிறது. பிறகு தான் சென்று ஹாயாகச் சாய்ந்துகொண்டு டிவி பார்க்கிறது.
ஒப்புக்கொண்டாலும் அதன்கட்சிதான் ஜயிக்கும். எதிர்த்தாலும் அதன்கட்சிதான் ஜயிக்கும். பிறகு என்ன கவலை? நான் என்பதை கிளப்பிவிட்ட பிறகு ஆணவம் 'அடைந்திட்டு' இருக்கிறது.
அவ்வியம் இருக்க, நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க
இது போதாதென்று லோபம் என்ற ஒன்று. மமகார சாம்ராஜ்ய அதிபதி. எந்த தூசி துப்பட்டையானாலும் என்னுடையது என்று ஆன பின்பு எவர்க்கும் இல்லை. யார் உயிருக்கே மன்றாடினாலும் ஒளித்து வைத்துவிடும். போனால் வராது தெரியுமா? நம்மிடம் இருந்து மற்றவர்க்கு ஒரு நன்மை நிகழ்ந்துவிட்டால் தெரியாத் தனமாக பத்துநாள் பட்டினி கிடக்கும். அந்த லோபத்தனம் தனியாகவா ஆட்சி செய்கிறது? கூட ஒரு மதியூகி மந்திரி போல் அருள் இன்மை. மந்திரிக்கும் அரசனுக்கும் ஏதாவது சண்டை வராதா? ம்ம் அவ்வளவு அந்நியோந்யம். லோபம் கொடுக்க மாட்டேன் என்று ஒளிக்கும். அருள் இன்மை போய் எங்காவது கொடுத்துவிடுவானோ என்று அருளில்லாமல் செய்துவிடும். இவை மேம்போக்காக இருக்குமோ என்றால் இல்லை. எவ்வளவு வேரோடி இருக்கிறதோ தெரியாது. ஆணவம் முந்தியா இது முந்தியா என்று பிரமிக்கும் அளவிற்கு அந்தரங்கமாக இருக்கிறது.
லோபம் அருளின்மை கூடக் கலந்து உள் இருக்க
இதற்கு மேல்தான் பிரதானிகளின் கொட்டம் போல் ஆசா பிசாசங்களின் ஆட்டம் பாட்டம். அவை தினப்படி தங்கள் திறமை போதாதென்று அப்பியாசம் பழகும் போல் இருக்கின்றன கொடுமை என்ற குணத்தில்.
ஆசாபிசாச முதலாம் வெவ்விய குணம் பல இருக்க
இதெல்லாம் பரவாயில்லை. தன்னூடே அந்த பரம சத்யப்பொருள் வீற்றிருக்கவும் சிறிதும் கூச்சமின்றி, ஐயம் தயக்கம் இன்றி மெய்யனான உன்னை இல்லவே இல்லை என்று எனக்குச் சபதமடித்து நிரூபித்துத் தரும் என் அறிவு இருக்கிறதே! அடாடா ஆணவமே பரவாயில்லை என்று தோன்றும் படியாக அல்லவா செய்துவிடும்.
இவ்வளவு இருந்தும்
என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருந்தும் ------
விதி இல்லை என்னிலோ --
பாக்கியம் பற்றியோ பேசுவது. பாக்கியம் என்று பார்த்தால் முதலிலேயே ஓரடியும் எடுத்துவைக்க யோக்கியதையே இல்லையே. இவ்வளவும் வர என்னை நகட்டிக் கொண்டு வந்தது எதுவோ அதைத்தானே அப்பா நான் இப்பொழுதும் நம்பி இருக்க முடியும்.? நீ பூரணன் என்பதில் அன்றும் இன்றும் என்றும் மாற்றம் ஏற்படப் போவதில்லையே?
பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ?
அவ்வாறு நீ பூரணன் என்ற பெயருக்குப் பொருந்திய வகையில் அருள் பெருக்காய் இல்லையென்றால் பின் எப்படி இந்த நிகழ்ச்சிக்குக் காரணம் சொல்ல முடியும்? - நானாவது மலம், ஆணவம், அருள் என்று பேசுகிறேன். ஆனால் என் இனத்தவரைப் பார்.! உயிர்க்கூட்டங்களைப்பார்.! சிறிதும் எந்தச் சலனமும் இன்றி ஸ்ரீராம ஸைந்நியத்தில் நாக பாசத்தினால் மயங்கிக் கிடந்த வானர வீரர் போன்று கிடப்பதைப்பார்! அங்காவது உயிர்பிழைக்க ஒரு நாடியாவது மிஞ்சியது. இங்கு எந்த விதத்திலும் பிழைக்க வழியில்லாது எல்லாப்பக்கத்தும் மூடிக் கவ்வியதுபோல் மலத்தினால் மூர்ச்சையடைந்துள்ள இந்த உயிர்கள்! இவை இப்படி இருக்கின்றனவே என்று எனக்கு இப்பொழுது லேசாகத் தென்படுவதும் அதனால் நான் ஒரு கணத்திற்காகவேனும் ஐயோ என்று நெகிழ்வதுவும் உன் அருள் தானே? இந்த உயிர்களோடு ஒன்றாய் இருந்த உயிர் ஒன்று தான் உணர்த்தி பெறுவதும், மற்ற உயிர்கள் பால் அருள் சுரப்பதும் அதனதன் முயற்சியாலா நடந்துவிடுகிறது? இந்த மலமென்னும் நாகபாசத்தினால் கவ்வப்பட்டு மூர்ச்சையான உயிர்கள் எழுவதும் ஞான சஞ்சீவியான உன் அருள்காற்று அன்றோ? அன்று வானர உயிர்கள் மூர்ச்சை தெளிய வந்த ஊன சஞ்சீவி மாருதி சென்று கொண்டு வந்ததால் ஆனது. ஆனால் கவ்வு மலமென்னும் நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சையினின்று எழுவது தானே வலிய வந்து எழுப்பும் ஞான சஞ்சீவியான நின் அருள் அன்றோ! இத்தகைய திவ்ய குணமே ஒரு மேருமலையாக செவ்விதாக வளர்ந்து ஒங்கி நிற்பது நீயல்லவா?
அவ்வியம் இருக்க நான் என்கின்ற ஆணவம்
அடைந்திட்டு இருக்க, லோபம்
அருள் இன்மை கூடக் கலந்து உள் இருக்க, மேல்
ஆசா பிசாச முதலாம்
வெவ்விய குணம்பல இருக்க, என் அறிவூடு
மெய்யன் நீ வீற்றிருக்க
விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர்
விரிக்கில் உரை வேறும் உளதோ?
கவ்வுமலம் ஆகின்ற நாகபாசத்தினால்
கட்டுண்ட உயிர்கள் மூச்சை
கடிது அகல வலியவரும் ஞானசஞ்சீவியே!
கதிஆன பூமிநடுவுள்
செவ்விதின் வளர்ந்தோங்கு திவ்யகுண மேருவே!
சித்தாந்த முக்திமுதலே!
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே!
சின்மயா நந்தகுருவே!
(ஸ்ரீதாயுமான சுவாமி பாடல்கள், சின்மயானந்த குரு)
***
No comments:
Post a Comment