Thursday, December 19, 2019

நிழல் - கவிதை

நடந்தேன்;
நடந்துகொண்டிருந்தேன்;
என் நிழல் பின்னால்
தொடர்ந்து கொண்டிருந்தது.
வா வா பார்த்து,
வலப்பக்கம் போகாதே;
இடப் பக்கம் வளையாதே;
கண்ட சாக்கடை குப்பை மேட்டில் எல்லாம்
விழுந்து எழுந்திருக்காதே;
ஒழுங்காக என் பின்னோடேயே வா.

சொன்ன பேச்சைக் கேட்டால்தானே.
இருந்தாலும் என் நிழல்
என் பின்னால் தொடர்ந்து வர
ஓர் இருள் கலப்பின் பரப்பு
என் வடிவத்தில் அமைந்தது
தொடர்ந்து வருகிறது;
என் காலடிக் குதியைப் பற்றியபடி.
இது போதாது?
இப் போதைக்கு.
பின் தொடர ஒன்று ஆச்சு.
தலைக்கு மேல் குடை பிடிக்க
அந்தச் சூரியனே இருந்தால் நல்லது.
அப்படியும் நடந்தது.

பின்னால் தொடர்வதாகச் சொல்லிச்
சேட்டை பண்ணிக்கொண்டு வந்த நிழல்
ஓடி வந்து என் காலடிக்குள்
ஒளிந்துகொண்டது.
அடேயப்பா!
அப் போதைக்குக் கிறுக்கேறி
முப்போதும் முட்டிக்கொண்டது.
என் நிழல் என் காலுக்கடியில்.
பின் என்ன நினைத்தோ

நிழல் எனக்கு முன்னால்
வெளியேறி, நகர்ந்து, நீண்டு
நெடுந்தோலை போய்
மீண்டும் என் கண்ணுக் கெதிரிலேயே
சேட்டை.
ஏய் என் பேரைக் கெடுத்து விடாதே
அங்கெல்லாம் போகாதே
அங்கு போய் எட்டிப் பார்க்காதே
அந்த இடத்தில் தலையை நுழைத்துக்கொண்டு
உனக்கென்ன வேலை?
வா இங்கே.
இல்லை இது என்னைச் சேர்ந்தது இல்லை.
என்னை விட்டு இல்லை என்னைத் தொட்டு
எங்கோ போகிறது.
திரும்பி வரவில்லை.
மறையும் போல் இருந்தது.
பதறினேன்.
என்னதான் இருந்தாலும் என் நிழல்.

சிரித்தது.
‘நான் உன் நிழலன்று’
பின்?

‘நான் ஒளியின் நிழல்;
நீ எனக்கு ஓர் உபாதி;
அவ்வளவே;
ஒளி இல்லையேல்
உனக்கு நிழலில்லை;
ஒளி இருந்தால்
உனக்கென்ன?
ஒட்டுக் கம்பத்தில் ஊசலாடும்
கயிற்றிற்கும் நிழலுண்டு.
நீ ஒளியானால்
உனக்கு நிழலுண்டு;
ஆனால் அப்போதைக்கு உனக்கு
அதைப் பற்றி ஒன்றும் தெரியாது’

சிரித்துக்கொண்டுதான்
மறைந்து கொண்டும் இருந்தது.
நான் எங்கோ மோட்டு வானைப்
பார்ப்பவன் போல்
கேட்டும் கேளாதது போல்
பாவனையில் வந்து விட்டேன்,
சிரிப்பின் நிழல் பின் தொடர.

என் நிழல்....
வேண்டாம்.
வேறு ஏதாவது பேசுவோம்.

*

No comments:

Post a Comment