Monday, December 16, 2019

சத்சங்க மஹிமை - ஸ்ரீ ரமண மஹரிஷி

யார் எதைக் கேட்டாலும் பல விளக்கங்கள் கூறும் அருளாளர்களும் உண்டு. விரிவான நூல்கள் எழுதி உபகரித்தவர்களும் உண்டு. ஆனால் யார் வந்து எதைப் பற்றிக் கேட்டாலும் ஒரே ஒரு கேள்வியையே விடையாகத் தந்து சிந்திக்க வைத்தவர் ஸ்ரீரமண மஹரிஷி. சிறுவயது முதற்கொண்டே என் சிந்தனைத் துணையாக நின்றிலங்குபவர் ஸ்ரீரமணர். சிறுவயதில் படித்தது சுத்தாநந்த பாரதியார் எழுதிய ஸ்ரீரமண விஜயம். எவ்வளவு முறை கணக்கில்லை. அந்தப் பழைய அச்சுப் புஸ்தகம், தந்தையின் நூல். அதைப் பார்த்தாலே எனக்கு ஓர் உள்ள எழுச்சி.

அந்தக் காலத்தில் ஸ்ரீரமணரைப் பார்க்கப் போனதைப் பற்றித் தந்தையாரின் விவரிப்பு இன்றும் காதில் ஒலிக்கிறது. ஷேக்ஸ்பியர் நாடகங்களை எந்தையார் திரு வேணுகோபால் அவர்களும், திருச்சி ஆங்கிலப் பேராசிரியர் திரு சி எஸ் கமலபதி அவர்களும் Shakespeare Head Players என்ற அமைச்சூர் அமைப்பு வைத்துக் கொண்டு பல நாடகங்களைப் பல முறை மேடையேற்றியிருக்கிறார்கள். அதில் மெர்சண்ட் ஆஃப் வெனிஸ் நாடகத்தில் வரும் பிரின்ஸ் ஆஃப் மொராக்கோ நடிப்பின் போது Pluck the young sucking cubs from the she-bear என்ற ஒரு வரி வரும். அதற்கு அபிநயம் பிடித்த போட்டோ ஒன்று எந்தையின் மணிபர்ஸில் அலங்கரிக்கும். தலைக்கிரீடம், கடும் மீசை, முகத்திற்கு இடப்பக்கம் மறித்து கையை மடக்கி, முட்டியை மூடியபடி இருக்கும் போஸ் அந்தப் படம். ஆச்ரமத்திற்கு முதலில் போயிருக்கிறார் எந்தை. சரியாக அமையவில்லை. சரி முடிந்தால் பார்ப்பது. இல்லையென்றால் கிளம்புவது என்று மறுநாள் ஆங்கில சோல்ஜர் கணக்காக தொள தொளா அரைநிஜாருடன், காலில் பூட்ஸ் சகிதமாக, தூரத்தில் இருந்தே சேவித்துவிட்டுக் கிளம்புவது என்று போயிருக்கிறார். ஆனால் ஆச்சரியம் பக்கத்தில் போய் சேவிக்கும் பேறு கிடைத்தது என்று மகிழ்ந்து சொல்வார். அப்பொழுது எதற்கோ எடுப்பதற்குத் தம் மணிப்பர்ஸைத் திறந்திருக்கிறார் தந்தை. அதில் இந்த பிரின்ஸ் ஆஃப் மொராக்கோ போஸ் படம் இருக்கிறதா! அந்தப் படம் மகரிஷிகளின் கண்ணில் பட்டுவிட்டதாம். ‘இங்கே கொடு’ என்று வாங்கிப் பார்த்திருக்கிறார். சிறிது நேரம் படத்தை உற்றுப் பார்த்துவிட்டு அதைப் போலவே முகபாவம், கை அபிநயம் எல்லாம் ஒரு கணம் செய்து காட்டியவண்ணம் மணிபர்ஸைத் திருப்பித் தந்தாராம் ஸ்ரீரமண மகரிஷி. அது தமக்குக் கிடைத்த மிகப்பெரும் ஆசிகள் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தது இன்றும் நினைவில் எழுந்தவண்ணம் இருக்கிறது.

வேதம், புராணம், வேதாந்தம், சம்ஹிதை, ஆகமம் எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் இதையெல்லாம் அறிய வேண்டும், கேள்வி கேட்க வேண்டும், பதில் அறிய வேண்டும், வாழ்க்கையில் இது வேண்டும் அது வேண்டும் என்று சதா உள்ளே கேட்டுக் கொண்டிருக்கும் அந்த ஆள் யார் என்று கண்டுபிடி. விசாரித்தால் 'நான்' 'நான்' என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டே இருக்கிறான். அந்த 'நான்' யார்? அதை முதலில் விசாரித்துக் கொண்டே உள்ளே போ. அந்த 'நான்' ஒடுங்கும் இடத்தில் நில். மனத்தின் 'நான்' என்ற பிரதம விருத்தியும் அடங்கிய அந்த இடமே சகஜம். அதுவே 'உள்ளது'. -- இவ்வாறு சொன்னால் ஸ்ரீரமணரின் மொத்த உபதேசமும் அடங்கிவிடும். இதைவிட ஒற்றை வரியில் அடக்க வேண்டும் என்றால் --- 'நான்' யார் என்று விசாரி.

இந்த அளவிற்குக் கச்சிதமாக அத்யாதம விசாரத்தை down to essentials சுருக்கினவர் கிடையாது. மதுரையில் யதேச்சையாக உடலும் உயிரும் வேறான ஓர் அனுபவ நிலையை உணர்ந்து மாறிய வேங்கடராமன் என்னும் சிறுவன், அண்ணாமலை என்ற க்ஷேத்திரத்தின் பேரைக் கேள்விப்பட்டதும் காதலாகிக் கிளம்பி, உடைமைகள் அனைத்தும் கழல, கௌபீனதாரியாய் திருவண்ணாமலையில் அமர்ந்து ஆழ்ந்த நிஷ்டையின் விளைவு மனித குலத்திற்குக் கிடைத்த ஒற்றைக் கேள்வி -- நான் யார்?

(பகவான் ஸ்ரீரமணரைப் பற்றிய விவரணையை எழுதிக் கொண்டிருந்தேன். தந்தையின் ஞாபகமும், அவரது குரலும் மிகத் தெளிவாக நினைவில் எழுகிறது. அவர் தாம் ஸ்ரீரமண மஹரிஷியைச் சந்தித்த அனுபவத்தைச் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள்.... போனவர்களை மீண்டும் சந்திக்க முடியாதா.... முடியாது என்றுதான் அறிவு சொல்கிறது. ஆனால் நான் இப்படி எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்பது ஸ்ரீரமணருக்கோ, எந்தைக்கோ ஏதாவது விதத்தில் கம்யூனிக்கேட் ஆகுமா, ஆனால்.. ஏன் ஆகக் கூடாது... என்று இதயத்திற்கு என்று ஒரு தாபம். Heart hitting a blind alley? Don't know... may be... but....) 

***

No comments:

Post a Comment