முதலாழ்வார்கள் மூவர் - பொய்கையார், பூதத்தார், பேயார். ஓடித்திரியும் யோகிகளாய் இருந்த இவர்கள் ஓங்கி உலகளந்த உத்தமனின் பக்தி நெறியைத் தமிழில் நன்கு நிறுவினார்கள். அவர்களுக்கும் முன்னால் திருமால் நெறி தமிழர்தம் இதயத்தில் பூத்துக் குலுங்கியதைச் சங்கப் பாடல்கள் பலவும், சிறப்பாகப் பரிபாடலும், சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையும் உணர்த்துகிறது. திருமாலைப் பற்றிய ஆகமங்களின் கருத்துகள் சிறப்புறக் கற்கப்பட்டமையை நாம் உணர முடிகிறது. பாஞ்சராத்திர ஆகமங்களின் கருத்துகளும், அவரவர்கள் தாய்மொழியில் பகவானைப் பாடும் ஊக்கமும் பிரம்மவைவர்த்த புராணத்துக் கைசிக புராணப்பகுதியில் நம்பாடுவானின் கதையின் மூலம் தெரிகிறது. ஆழ்வார்களின் காலம் தொட்டோ அல்லது அதற்கும் பழங்காலம் தொட்டோ கைசிக புராணம் படிப்பது திருமால் கோவில்களின் உற்சவப் பகுதியாக இருந்திருக்க வேண்டும். பாகவதர்கள் என்னும் திருமால் அடியார்களின் பெருமையை ஆணித்தரமாக நிறுவுவது நம்பாடுவானின் கதை.
வேதங்களும், புராணங்களும், ஆகமங்களும் வளர்த்த திருமால் பக்தியில் பெருகிய பரபக்தியும், சங்கப் புலவர்கள் கண்ட இலக்கியச் செந்நெறியின் இலக்கணமும் ஒன்றுறக் கலந்த அமுதத் தடாகங்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்கள் கண்ட ஆன்ற செந்நெறியாக மலர்ந்தது பிரபத்தி மார்கம். இன்னார் இனையார் என்ற வேறுபாடின்றி அனைவருக்குமான பொதுநெறி பிரபத்தி நெறி. ஆசையும், சிரத்தையும் தகுதி என்ற பிரபத்தி நன்னெறியை நாட்டிய நல்வேதங்களாக எழுந்தவை பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களான நாலாயிர திவ்ய ப்ரபந்தங்கள். காலத்தால் முந்தியவர்கள் முதலாழ்வார்கள். அவர்கள் இயற்றியவைகள் மூன்று திருவந்தாதிகள். அடுத்து திருமழிசையாழ்வார். அவர் இயற்றியவை நான்முகன் திருவந்தாதியும், திருச்சந்த விருத்தமும்.
நம்மாழ்வார் பிரபன்ன குலத்தின் நடுநாயகமானவர் என்ற முக்கியத்துவம் வாய்ந்தவர். அவர் மொழிந்தவற்றை மதுரகவி ஆழ்வார் ஏடுபடுத்தியவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு. தேவு மற்று அறியாராய் நம்மாழ்வாரையே தெய்வமாகக் கொண்டு மதுரகவி ஆழ்வார் பாடியது கண்ணிநுண் சிறுத்தாம்பு.
பெருமாள் என்னும் ஸ்ரீராமனின் கதையான ஸ்ரீராமாயணத்தில் நெஞ்சாழ்ந்த பெற்றியரான குலசேகர ஆழ்வார் இயற்றியது பெருமாள் திருமொழி. கடவுளுக்கே பல்லாண்டு பாடிக் காப்பு செய்யத் துடிக்கும் பரிவால் பெரியவர் என்று போற்றப்படும் பெரியாழ்வார் இயற்றியது இரண்டு. தமிழ் வேதத்திற்கே ஓம் என்னும் பிரணவத் தொடக்கமாக அமைந்த திருப்பல்லாண்டும், கண்ணன் கதையமுதாய்ப் பெருகிய பெரியாழ்வார் திருமொழியும். அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் அனைவரையும் விஞ்சிய பக்திநலம் மிக்கவளான பெரியாழ்வாரின் பெண்பிள்ளையான ஆண்டாள் பாடியது இரண்டு. உபநிஷதங்களின் சாரமான திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும். திருவரங்கம் அன்றி வேறு எதையும் பாடாதவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடியது இரண்டு. நம்பெருமாளின் திருப்பள்ளி எழுச்சியும், திருவரங்கத் திருமாலைப் பாடும் திருமாலையும். பாண் பெருமாள் என்று போற்றப்படும் திருப்பாணாழ்வார் இயற்றியது அமலனாதிபிரான்.
நம்மாழ்வார் அருளிய நான்கும் நான்கு வேதங்களின் சாரம் என்றால் அந்தத் தமிழ் வேதங்கள் நான்கிற்கும் ஆறங்கங்கள் போலே அமைந்தவை திருமங்கையாழ்வாரின் ஆறு திவ்ய ப்ரபந்தங்கள். பெரிய திருமொழி, பெரிய திருமடல், சிறிய திருமடல், திரு எழுக் கூற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம். ஆழ்வார்களுக்கெல்லாம் கடைசியில் வந்த ஆழ்வார் கலியன் என்னும் திருமங்கையாழ்வார்.
இவை அத்தனைக்கும் வியாக்கியானம் எழுதியவர் பெரியவாச்சான் பிள்ளை. பெரியாழ்வார் திருமொழிக்கு அவர் எழுதிய வியாக்கியானம் பெரும்பகுதி கிடைக்காமல் போனதால் அதற்கு மட்டும் உரை வரைந்தவர் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள். திருப்பாணாழ்வாருடைய அமலனாதிபிரான் என்னும் பிரபந்தத்திற்கு ஸ்ரீவேதாந்த தேசிகர் முநிவாஹன போகம் என்று வியாக்கியானம் இயற்றியுள்ளார்.
திருவாய்மொழிக்கு 5 வ்யாக்யானங்கள், இரண்டு அரும்பதங்கள், ஈட்டின் பிரமாணத்திரட்டு இன்னும் 7 துணைநூல்கள் சேர்ந்து மொத்தம் 15 ஒன்றிற்கொன்று தொடர்புடைய நூல்கள் அனைத்தும் சேர்த்து தெலுங்கு லிபியில் 1877ஆம் வருஷம் பகவத் விஷயம் பெரிய புஸ்தகம் வெளிவந்தது. திருவாய்மொழிக்கான ஐந்து வியாக்கியானங்கள், மூன்று அரும்பதங்கள், ஈட்டில் உதாஹரிக்கப்பட்ட மற்ற மூவாயிரங்களின் பாசுரங்களுக்கான வியாக்கியானங்கள், ஒவ்வொரு தசகச் சுருக்கமான த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, அதன் வியாக்கியானம், திருவாய்மொழி நூற்றந்தாதி, அதன் வியாக்கியானம் என்று மொத்தம் 15 நூல்கள் அடங்கிய ஸ்ரீபகவத்விஷயம் பெரிய ஸெட் புத்தகம், முதல் பத்துக்கான நூல் ஆகஸ்டு மாதம் 1871 ஆம் வருடம் சென்னையில் வெளிவந்தது. 1876 ஆம் வருடம் 10 ஆம் பத்து வெளிவந்து நிறைவடைந்தது. மணிப்ரவாள மொழியில் தெலுங்கு லிபியில் அச்சு. சென்னைப் பட்டணம் சூளை வேப்பேரி ரொட்டிக் கிடங்கு திருவேங்கடமுதலி தெருவில் ஸ்தாபிக்கப்பட்ட முத்ராக்ஷர சாலையில் பதிப்பிக்கப்பட்டது. 4800 சொச்சம் பக்க பத்து வால்யூம்களில் மொத்தம் அச்சுப் பிழை இரண்டு இலக்கத்தை எட்டவில்லை. அதாவது அதிகபட்சம் 7 அல்லது 8. அவ்வளவுதான்.
இன்றைக்கு விண்டோஸ் கான்ஸப்ட் சொல்லுகிறோமே, ஏதாவது ஒரு லிங்கைப் பார்க்க அங்கேயே ஒரு சன்னல் திறக்கும்படியாக, அதைப்போல அந்த நூலில் ஒரு பாசுரம் எடுத்துக்காட்டாக வந்தால் அதன் பொருள், அதற்கான வியாக்யானத்துடன் அங்கேயே கட்டம் போட்டுக் கொடுக்கப்படும். 1916ல் அந்தத் தெலுங்குலிபி பதிப்பை, (அதாவது மொழி தமிழ்தான் ஆனால் அது தெலுங்கு எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தது), அந்தப் பதிப்பை முதல் இரண்டு பத்துகள் தமிழ் எழுத்தில் வெளியிட்டார்கள். மார்ச் 1880 கி பி ஒரு விஷயம் நடந்திருக்கிறது. நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி, பன்னீராயிரப்படி, ஈடு என்னும் மூன்று வியாக்கியானங்களும், ஜீயர் அரும்பதமும், திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியும், திருவாய்மொழி நூற்றந்தாதியும் அடங்கிய மூன்றாம் பத்து, ஸ்ரீஆழ்வார்திருநகரி வடபத்ரசாயி அரையர் ஸவாமி அவர்களாலும், ஸ்ரீ கா ராமஸ்வாமி நாயுடு அவர்களாலும் மார்ச் 1880 சென்னை ஆதிகலாநிதி அச்சுக் கூடத்தில் அச்சடிக்கப்பட்டு வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.
ஆயிரமாண்டுகளுக்கும் மேலான பயிரின் விளைச்சல் 1877ல் அச்சில் ஏறியது செவ்வையாக. பின்னர் பகவத் விஷயம் சே கிருஷ்ணமாசாரியார் பதிப்பு நெடுங்காலம் திகழ்ந்தது. நம் காலத்திலோ பலரும் இந்த அருந்தனத்தை அச்சிட்டுக் காத்த அரும்பணியைச் செய்துள்ளார்கள் எனினும் ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் ஸ்ரீ உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்களின் ஆன்ற பெரும்பணி நம் அனைவருடைய வணக்கத்திற்கும், நன்றிக்கும் உரியதாகும்.
திருவாய்மொழிக்கு திருக்குருகைப்பிரான் பிள்ளான் இயற்றிய ஆறாயிரப்படி, நஞ்ஜீயர் இயற்றிய ஒன்பதினாயிரப்படி, வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் இயற்றிய பன்னீராயிரப்படி, பெரியவாச்சான்பிள்ளை இயற்றிய இருபத்தி நாலாயிரப்படி, நம்பிள்ளை அருளிய ஈடு முப்பத்தாறாயிரப்படி போன்ற பல உரைகளும், தம் காலத்தில் பல்கியிருந்த பல அரும்பத உரைகளை ஒருங்குற அடைய வளைத்து ஆத்தான் ஜீயர் என்னும் மகான் இயற்றிய அடையவளைந்தான் அரும்பத உரை, குணகரம்பாக்கம் ராமாநுஜ ஜீயர் அதைச் சுருக்கியும், எளிமையாக்கியும் தந்த ஜீயர் அரும்பத உரை போன்ற துணை உரைகளும் வாய்ந்தது போலவே திருப்பாவைக்கும் பலருடைய உரைவளங்களும், அரும்பதங்களும் அமைந்து திகழ்கின்றன. அருள்வெள்ளமிட்டுப் பெருகிய ஒரு கால கட்டத்தை இந்த உரைவளங்கள் நமக்குக் கதவம் திறந்து உள்ளழைத்துக் காட்டுவதால் இந்த அரும் நிதியை, கடவுள் உணர்வே அருளாட்சி செய்யும் இந்த அறிவுப்புலத்தை ஸ்ரீபகவத் விஷயம் என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தம்.
ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வாதும் இல்குரவர் தாம்வாழி - ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம்வாழி
செய்யமறை தன்னுடனே சேர்ந்து
(ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள்)
பொய்கைமுனி பூதத்தார் பேயாழ் வார்தண்
பொருநல்வரும் குருகேசன் விட்டு சித்தன்
துய்யகுல சேகரன்அம் பாண நாதன்
தொண்டரடிப் பொடிமழிசை வந்த சோதி
வையமெலாம் மறைவிளங்க வாள்வேல் ஏந்து
மங்கையர்கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்யதமிழ் மாலைகள்நாம் தெளிய ஓதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின் றோமே.
(ஸ்ரீவேதாந்த தேசிகர்)
இன்றுவரை இந்த அருஞ்செல்வத்தைப் போற்றிப் பெருக்கி வளர்த்துவரும் குணவாளர் தாம்வாழி என்று இறைஞ்சுவோமாக!
***
No comments:
Post a Comment