Tuesday, December 24, 2019

திருநெடுந்தாண்டகத் தொடக்கம்

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்ட எம்பெருமானார் அந்தி முடித்து அணுக்க முதலிகளை அழைத்து கூரத்தாழ்வான் மகனாரை அழைத்துவரும்படிக் கூறுகிறார். பராசர பட்டர் வந்ததும், வாஞ்சையோடு அவரிடம் வார்த்தையாடி, அருகில் உள்ளாரை நோக்கி, 'இவரை நம்மை நோக்குவதுபோல் நோக்கிக் கொள்ளுங்கோள்' என்று ஆணையிடுகிறார்.

பராசர பட்டரிடம், 'குழந்தாய்! என் தள்ளாத வயது. ஒரு பணி இன்னும் முடியவில்லை. நீதான் அதை முடிக்க வேண்டும். மேல்நாடு எனப்படும் மைசூர் பிராந்தியத்தில், மாதவ வேதாந்தி என்று ஒரு வித்வான். ஆறு தர்சனங்களும் அவருக்குக் கையிலங்கு நெல்லிக்கனி. மாயாவாதத்தில் மிகுந்த ஊற்றம் உடையவர். அவரை எப்படியாவது நம் தர்சனத்திற்கு அழைத்துவர வேண்டும். உனக்கு இது நான் விட்டுச் செல்வது.'

நாரணன் தன் தனிமையைப் போக்கிய நல்லவர் இட்ட கட்டளையைச் சுமந்தபடிப் பட்டர் தகுந்த காலம் வாய்க்கக் கருதிக் காத்திருந்தார். ஒரு நாள், ஒரு தீர்த்தவாஸி பிராம்மணன் ஒருவர் பட்டரிடம் வந்து தாம் மைசூர் பிராந்தியமெல்லாம் போய் வந்திருப்பதாகவும், அங்கு மாதவ வேதாந்தி என்னும் மஹா வித்வானைக் கண்டதாகவும், அவரிடம் பராசர பட்டரைப் பற்றி பிரஸ்தாபித்ததாகவும் கூறினார். பெயரைக் கேட்டதும் பட்டர் கூர்ந்து கேட்கத் தொடங்கினார்.

தீர்த்தவாஸி அந்தணர் கூறினார், 'வித்வானிடம் ஸ்ரீரங்கத்தில் பராசர பட்டர் என்னும் மிகப்பெரிய வித்வான் வசிப்பதாகக் கூறினேன். அதற்கு மாதவ வேதாந்தி 'அப்படியா? அவர்க்கு என்னென்ன சாஸ்திரங்கள் போரும்?' என்று கேட்டார். நானோ நியாயம், மீமாம்ஸை, காவ்யம், ஸகல வேத வேதாந்தங்கள் என்று சொன்னேன். ' என்றார்.

அதற்குப் பட்டர், 'அதெல்லாம் இருக்கட்டும் ஸ்வாமி. நீர் பல நகரங்களைக் கண்டு பல ஸ்தலங்களில் இருக்கும் விசேஷங்கள் எல்லாம் அறிந்தவராய் இருக்கும் நாகரிகராய் இருக்கிறீர். ஒருவரைப் பற்றிச் சொல்லுமிடத்தே அவருக்குத் தெரிந்த சாதாரண சாஸ்திரங்களைச் சொல்லியா அறிமுகப் படுத்துவது? அவருக்குத் தெரிந்த விசேஷ சாஸ்திரம் பற்றிச் சொன்னால் அன்றோ கேட்பவருக்கு விசதமாகத் தெரியவரும். அதைவிடுத்து ஸாமாந்ய க்ரந்தங்களை நமக்குத் தெரிந்ததாகச் சொல்லிவந்தீரே!' என்று கூறினார்.

தீர்த்தவாஸியாருக்கோ ஆச்சரியம். கற்போர் கற்கும் உயர்ந்த பட்ச சாஸ்திரங்களை எல்லாம் தாம் சொல்லாநிற்க, பட்டர் தமக்குத் தெரிந்த விசேஷம் பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்கிறாரே! நாட்டில் நடையாடும் வித்யைகளைத்தானே ஒருவர் கற்றிருக்க முடியும்? இதையெல்லாம் விடுத்து வேறு என்ன விசேஷ சாஸ்திரமாக இருக்கக் கூடும்? என்று நெடுநேரம் சிந்தித்துப் பட்டரையே கேட்டுவிட்டார்.

பட்டர், 'ஸ்வாமி நமக்குத் திருநெடுந்தாண்டகம் போரும் என்று சொன்னீரோ?' என்று கேட்டார்.
(போரும் போரும் என்றால் நன்கு தெரியும், கைவரும் என்று பொருள்.)

தீர்த்தவாஸி திகைத்தார். அப்படி ஒரு சாஸ்திரம் இருப்பதாகத் தாம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. 'சரி அடுத்த முறை போகும் பொழுது நிச்சயம் சொல்கிறேன்' என்று சொல்லிப் போய்விட்டார். தேசங்களைச் சுற்றி வருமிடத்தே மைசூருக்கு வந்த அளவில் மாதவ வேதாந்தியைச் சந்தித்துப் பேசினார். மாதவ வேதாந்தியே, 'பராசர பட்டர் எப்படி இருக்கிறார்?' என்று கேட்டார்.

தீர்த்தவாஸி, 'அவர் நலமே உள்ளார். சென்ற முறை நான் அவருடைய வித்வத்தைப் பற்றிக் கூறுமிடத்தே, முக்கியமாக அவருக்குத் தெரிந்த விசேஷ சாஸ்திரம் ஒன்றைக் குறிப்பிடத் தவறிவிட்டேன். அந்த சாஸ்திரத்தின் பெயர் திருநெடுந்தாண்டகம் என்பது' என்றார்.

மாதவ வேதாந்தியோ பெரிதும் மனம் கலக்கம் உற்றார். 'அடடா! சாஸ்திரத்தின் பெயர் கூட நாம் கேள்விப்பட்டதில்லை. அதில் அவரோ பெரும் நிபுணர். அவர் எத்தகைய வித்வானாய் இருக்க வேண்டும். நாமோ எல்லாரும் அறிந்த சாஸ்திரங்களையே அறிந்துவிட்டு, ஆறு தர்சனங்களுக்கு ஆறு ஆஸனம் இட்டு அமர்ந்திருக்கிறோம்.' என்று.

சில மாதங்கள் கழித்துப் பராசர பட்டர் மேல்நாட்டிற்குப் பயணமானார். அப்பொழுது மாதவ வேதாந்தியைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் சிலர் கூறினர்: 'ஸ்வாமி! நீர் இப்படியெல்லாம் வெளிப்படையாகப் போனால் ஒரு நாளும் மாதவ வேதாந்தியைச் சந்திக்கவே முடியாது. காரணம் நீர் வாதத்திற்கு வந்திருப்பதாகத் தெரிந்ததும் அவருடைய சீடர்களின் குழாங்கள் உங்களைச் சூழ்ந்துகொண்டு நாட்கணக்கில், மாதக்கணக்கில் வாதம் செய்தே நோக அடித்து விடுவர். அவர்களைத் தாண்டிப் போக முடியாது' என்றார்.

பட்டரோ அவர்களையே பதிலுக்குக் கேட்டார். 'சரி அப்படியானால் எப்படித்தான் சந்தித்து அவரோடு வாதம் செய்து நம் தர்சனத்திற்குக் கொணர்வது?'

அவர்கள் சொன்னார்கள், 'ஸ்வாமி! அவரிடம் நேரே போகவேண்டும் என்றால் தினமும் அவர் அன்னதானம் செய்வார். அந்த வரிசையில் சென்றால் யாரும் தடுத்து நிறுத்த மாட்டார்கள். அங்கு அவரே நேரில் வந்து நின்று கவனிப்பார். அப்பொழுது பார்க்க முடியும்.'

பராசர பட்டர் தமது உடன்வந்தவர்களை ஊருக்கு வெளியிலேயே இருக்கச் சொல்லிவிட்டுத் தாம் மட்டும் ஒரு தடுக்கு இலையைக் கையில் சுருட்டிக் கொண்டு பிக்ஷைக்கான வரிசையில் பொறுமையாய்ச் சென்று கொண்டிருந்தார். மாதவ வேதாந்தியை வரிசை நெருங்கியதும் பட்டர் வரிசையை விட்டுப் பிரிந்து நேரே மாதவ வேதாந்தியை நோக்கிப் போனார்.

ஸ்வாமி! வரிசை அங்கே அங்கே என்றார்கள்.

மாதவ வேதாந்தி அருகில் வந்தவரிடம் 'கா பிக்ஷா?' என்று கேட்டார்.

பட்டரோ 'தர்க்க பிக்ஷா' என்று பதில் சொன்னார்.

ஒருகணம் துணுக்குற்ற மாதவ வேதாந்தி கூர்ந்து நோக்கி 'நீவிர் பராசர பட்டரோ?' என்று கேட்டார்.

ஆம் என்றதும் ஆஸனங்கள் இடப்பட்டன. வாதம் வெகுநாள் தொடர்ந்தது. மாதவ வேதாந்தி நஞ்சீயராய் ஆவதற்கான மனநிலையை அடைந்தார்.

பராசர பட்டருக்கு ஒரு பழக்கம். தாம் எங்கு வெளியூர் சென்றாலும் திருவரங்கம் திரும்பியதும் முதலில் ஸ்ரீரங்கநாதன் சந்நிதி சென்று மகன் தந்தையிடம் விவரிக்கும் பாவனையில் தாம் சென்ற செய்தி, நடந்த விருத்தாந்தங்கள் ஒன்றுவிடாமல் சொல்லிக் களிப்புறுவார். அது போலவே இப்பொழுதும் உள்ளம் களிநடம் பொங்கச் சென்று புகும் போது அர்ச்சக ஆவேசத்தில் அருளரங்கன் அருளப்பாடு ஆயிற்று.

'மேல்நாட்டில் நீர் வேதாந்தியை வென்றவிதம் எங்ஙனே’ என்று.

மகனை விட தந்தைக்கு suspense தாங்கவில்லை போலும். பராசர பட்டர், 'நாயன் தே! திருநெடுந்தாண்டகத்தால் தேவரீர் ஆக்ஞை நிறைவேறியது' என்று சொல்லித் திருநெடுந்தாண்டகத்தின் அர்த்த விசேஷங்களைப் 'பெற்றோர்' முன்பே சொல்லிக்காட்டினார்.

தாயும் தந்தையும் தனயருமாய், அவர் தயவால் பின்வந்த மகவுகளாய் நாமும் கூடிக்களிக்க இன்றளவும் பகல்பத்து தொடங்குவதற்கு முந்தைய நாள் ராத்திரி 'திருநெடுந்தாண்டகம்' என்று அந்தத் திருவோலக்கம் கொண்டாடப்பட்டு வருகிறது. பராசர பட்டருக்குப் பிடித்த சாஸ்திரமே இந்தத் திருநெடுந்தாண்டகம்.

திருமங்கை மன்னனின் இந்தத் தாண்டகம் 30 கொண்டே மேல்நாட்டு அத்வைத வேதாந்தியை வென்றார் என்றால் அந்த முப்பதிலும் 'மைவண்ண நறுங்குஞ்சி' என்று தொடங்கும் பாடல் பட்டருக்கு உயிர். அவர் எந்நேரம் கேட்டாலும் அதன் அர்த்தப் பிரபாவத்தில் ஆழ்ந்து பரக்க உபந்யஸிக்கத் தொடங்கிவிடுவார் என்கிறது குருபரம்பரா ப்ரபாவம். 'இவ்வண்ணத்து இவர்நிலைமை கண்டும் தோழீ! நம்மை நாம் ஓர்பொருட்டாய் எண்ணினோமே.'

"மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ
மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்
கண்ணிணையும் மரவிந்த மடியு மஃதே
அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ!
அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே."
(திருநெடுந்தாண்டகம் 21)

***

No comments:

Post a Comment