Friday, December 27, 2019

பெரிய என்பதன் விளக்கம்

கோயில் என்றாலே ஸ்ரீரங்கம் என்று பார்த்தோம். இன்னும் விசேஷமாக ஸ்ரீரங்கம் சம்பந்தமான பல விஷயங்களைப் 'பெரிய' என்று அடைமொழியிட்டு வழங்குவது பரிபாஷை. 'பெரிய கோயில்' என்றால் ஸ்ரீரங்கம். பூலோக ஸ்ரீவைகுண்டம் எனப்படுவது அதுவே. அரங்கனுக்கு ஈடளித்த வள்ளலான கோயில் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகளுக்குப் 'பெரிய ஜீயர்' என்று பெயர். ஸ்ரீரங்க நாயகித் தாயாருக்குப் 'பெரிய பிராட்டியார்' என்று பெயர். 'ஓடும் புள்ளேறி' அவசரமே உருவாய் வந்து தோன்றி அடியார் இடர் களையும் அரங்க நகரப்பனுக்கு வாகனமான புள்ளரையனுக்குப் பெயர் 'பெரிய திருவடி'. ஆஞ்சநேயன் 'சிறிய திருவடி'. பெருமாளோ 'பெரிய பெருமாள்'. அவரது திருத்தேரோ பெரிய திருத்தேர். கோயிலில் ஆகும் பிரதானமான பிரசாதத்திற்குப் 'பெரிய அவசரம்'. என்று பெயர். இப்படி 'பெரிய' பெரிய' என்ற பிரயோகம் ஏன் வந்தது.? இதற்கு ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை அவர்கள் திருமாலை உரையில் விளக்கம் தருகிறார்.

'ஒருவில்லால் ஓங்கு முன்னீர் அடைத்து உலகங்கள் உய்ய' என்ற திருமாலைப் பாட்டில், 'மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னாது, கருவிலே திருவிலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே!' என்ற அடியில், 'மருவிய பெரிய கோயில்' என்பதற்குப் பொருள் சொல்லும் வாய்ப்பில், 'பெரிய' என்று ஏன் சொல்லுகிறது? கோயிலின் பரப்பை வைத்தா? என்ற கேள்வியைத் தாமே எழுப்புகிறார்.

"பெரிய கோயில் -- கோயில் பரப்பை நினைத்தன்று; ராஜா இன்னவிடத்திலே இருந்து நினைப்பிட்டான் என்றால், பின்னை அவன் தன்னாலும் மாற்ற நினைப்பிட ஒண்ணாதிருக்கும் தேச கௌரவத்தைப்பற்றச் சொல்லுகிறது. அதாகிறது ஸம்ஸாரிகள் கார்யம் வீடறுக்கையிறே. '(பவித்ரம் பரமம் புண்யம்) தேசோயம் ஸர்வ காமதுக்' (காருட புராணம்); 'வைஷ்ணவாநாம் விசேஷோஸ்தி விஷ்ணோராயதநம் மஹத்' (லைங்கம்)"

அதாவது சம்ஸ்க்ருதத்தில் 'மஹா' என்ற முன்னொட்டின் பயன்பாட்டின் இடத்தில் 'பெரிய' என்ற அடைமொழி வருகிறது. உபநிஷதங்களில் சில வாக்கியங்களை 'மஹாவாக்கியங்கள்' என்பர். ஏன்? அனைத்து தத்துவ அம்சங்களையும் தன்னுள் அடக்கியவையாய், முழுமையடையாத காரணத்தால் வேறொரு வாக்கியத்திற்குச் சென்று பொருள் காண வேண்டாதபடி நிறைவு பெற அமைந்த வாக்கியம் 'மஹாவாக்கியம்'. அது போல் ஸம்ஸாரிகளின் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் இடமாக இருப்பது; ஜீவர்களின் அனைத்து கார்யங்களும் 'வீடறுக்கும்' இடமாக இருப்பது ஸ்ரீரங்கம் என்பது பற்றிப் 'பெரிய கோயில்' என்று பெயர் ஏற்பட்டது.

இந்த 'வீடறுக்கும்' என்ற பதம் என்ன? வீடு அறுத்தலா? இஃது ஓர் அருமையான பழந்தமிழ்ச் சொற்கோவை. to resolve the issues, to solve the problems, to satisfy the demands என்றபடி பொருள் செறிவு மிகுந்த சொற்றொடர். ஸம்ஸாரிகள் காரியம் வீடறுக்கை என்றால் உலகங்களில் உள்ள ஜீவர்களின் பிரார்த்தனைகளைப் பூர்த்தி செய்துதருதல் என்று பொருள். இது நான் தேடியவரை பொருநராற்றுப்படையின் உரைப்பகுதியில் ஆளப்பட்டிருக்கிறது. (அடி 188) பொருநராற்றுப்படை 188ன் உரையில் 'அரசன் தம்முள் முரண்பட்டு வரும் வழக்குகளை வீடறுப்பான்' என்ற பொருளில் ஆளப்படுகிறது. இது நிற்க.

மதிள் திருவரங்கம் என்னாது கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே! -- என்றாரே ஆழ்வார். அதற்கான வியாக்கியானத்தில் ஒரு ரசமான நிகழ்ச்சி உதாரணம் காட்டப்படுகிறது. நிகழ்ச்சி சாதாரணமாக வீடுகளில் நடைபெறக் கூடியது. ஒரு வயதானவர் கடைசி காலத்தில் உயிர் பிரியும் தருவாயில் கிடக்கிறார். இன்றா நாளையா தெரியவில்லை. அவரிடத்தில் போய் ஒரு பெரியவர் 'ஸ்வாமின்னு! போங்காலத்திற்குக் காப்பாக அஷ்டாக்ஷரம் சொல்லுமே' என்றார். கிடக்கும் பெயர்வழியும் 'ஆகட்டும் சொல்லிப்பார்க்கிறேன்' ஆகட்டும் சொல்லிப்பார்க்கிறேன்' என்று இத்தையே மீண்டும் மீண்டும் சொன்னாரே அன்றி திரு அஷ்டாக்ஷரம் வாயில் வரவில்லை.

திரு அஷ்டாக்ஷரம் என்பதற்கும் எட்டு எழுத்தே தான். 'ஆகட்டும் சொல்லிப் பார்க்கிறேன்' என்ற மறுமொழிக்கும் எட்டு எழுத்தேதான். இந்த வெறும் எட்டு எழுத்தைச் சொன்னவனுக்குத் திருவெட்டெழுத்தைச் சொல்லும் பாக்கியம் கிட்டவில்லை. வெறும் எட்டு எழுத்தைச் சொல்ல முயற்சி கம்மி. திருவெட்டெழுத்தைச் சொல்வதென்றால் முயற்சி அதிகம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. இதுவும் எட்டு எழுத்து. அதுவும் எட்டு எழுத்து. எப்படியோ எட்டு எழுத்து சொல்கிறான். சொல்வதுதான் சொல்கிறோம் என்று திருவெட்டெழுத்தைச் சொல்லாதோ பைத்தியம்? 'கருவிலே திருவிலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே!' என்று போக வேண்டியதுதான். வெறும் எட்டெழுத்தை மீண்டும் மீண்டும் சொன்ன வாய் திருவெட்டெழுத்தைச் சொல்ல வாய்க்கவில்லையே! என்ன பாக்ய ஹீனம்! 'கருவிலே திருவிலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே!' என்கிறார் ஆழ்வார்.

*

No comments:

Post a Comment