Monday, December 23, 2019

கொள்ளிடத்து மேட்டுமணல்

யாரதிங் குள்ளம் தான்புகுந் திட்டு
சிந்தனைக் குள்தனை நானாய்
வேர்பிடித் துள்ளே ஆழ்ந்திடக் கண்டு
வந்தனைக் குற்றது போலே
நேர்நடித் துள்ளும் சார்புறத் தெங்கும்
சொந்தமாய்க் கற்றது தானோ
தீர்ந்தலை கின்ற தானடங் குற்று
நின்னையே உற்றடை யாதோ.

*
ஒய்யார மாய்க்குளித்துக் கொள்ளிடத்து மேட்டுமணல்
எய்த கணையாகி எங்கும் கதிர்தைத்துப்
பொய்க்காத வானின் சிரிப்பாகிப் பொக்கைவாய்ப்
பையவேறிப் பானாளின் உச்சியிலே போந்த
பரிதியார் பொன்பூத்த புன்மாலைப் போழ்தில்
கருதியாம் உள்குளிரக் காட்டுமெழில் ஆகத்தில்
உற்ற திருவுருவே ஓங்கும் உணர்வடிவே
கற்ற கலையாகிக் கற்பித்த நின்மருங்கில்
பற்றாய் எனைவைத்துப் போயினவால் பூமாதின்
உற்ற பரிந்துரையை உத்தமனாய்க் கேட்டுவந்தே
சற்றே எனக்குச் சகிப்பாக எண்ணுவிரேல்
இற்றைவரை எற்றுக்காய் என்னை இருவினைக்கே
விற்றிருந்தீர் என்றே வியனுள்ளம் நோவாதோ
பெற்றம் உகந்தாய்ப் பிரானாய் எனையிகழ்ந்தால்
சுற்றத்துன் அன்பர்தாம் மெச்சுவரோ சற்றேநீ
உற்றெண்ணிப் பார்ப்பாய் உகந்து.

***

No comments:

Post a Comment