Saturday, December 21, 2019

பாரளந்த நூற்றந்தாதி முதல் வெண்பாவும் அதன் உரையும்

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வெண்பா ஊக்கத்தில் தொற்றிக்கொண்ட வேகம். திரு செல்வப் புவியரசு தம்முடைய கல்லூரிநாள் வெண்பா முயற்சியை எழுதப் போகக் கடைசி வார்த்தை ’பார்’ என்பதைப் பார்த்ததும் ஓர் ஊக்கம், பின் அதுவே வேகமாக மாறியது. ஆனால் தொடக்கத்திலிருந்தே காவியம் சாத்திரம் இரண்டையும் கலந்த உபயகவியாக எடுத்துவிட்டேன். அதனால் நடுவில் வேகம் பொறுப்பு யாப்பு படுத்திய பாடு, எல்லாம் காலம் முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டது அப்பொழுது. இருந்தாலும் 2 நாட்களில் ஒரு நூற்றந்தாதியாக வெண்பா பாடமுடிந்தது உள்ளே சொட்டும் களிபேருவகை. யாருக்கு என்று இல்லாமல் பொதுவாக நன்றி என்றுதான் மனத்தில் தோன்றுகிறது. இதற்குத் திருவரங்கத் திருவந்தாதி, மின்னரங்கத்தந்தாதி, பாரளந்த நூற்றந்தாதி என்று பல பெயர்களை நண்பர்களும் நானுமாக அப்பொழுது இட்டோம். அந்த நூற்றுசொச்சம் பாடல்கள் அந்தாதியில் பாடிய நூலை அர்த்தத்துடன் தனி நூலாகப் போட வேண்டும் என்று ஓர் எண்ணம். அது இருக்கட்டும். அந்த அந்தாதியில் முதல் வெண்பாவிற்கு உரையும் எழுதியிருந்தேன்.

பாரளந்த செம்மல் பனிக்குமென் நெஞ்சத்தைக்
காரளந்த மேனிகொண்டு காவானேல் -- தேரளந்த
வீதியெலாம் சென்று வியன்விண் பெருமானார்
மேதினியில் ஊர்வேன் மடல்.

உரை :--

பாரளந்த செம்மல் - பார் என்பது பூமி, உலகம். உலகை அளந்த பெருமான். அளந்த -- அனுபவித்த, அளவிட்டுக் கணக்கிட்ட, கருதின என்ற பொருட்கள். திருவிக்கிரமனைக் குறித்துப் பாரளந்த செம்மல் என்ற சொற்றொடர். அதுமட்டுமின்றி, பார் என்னும் பூமியைத் தன் கோட்டிடைக் கொண்ட எந்தையாய்க் கிளர்ந்த பூவராகன். செம்மல் --- தலைமை, பெருமை, பெருமையில் சிறந்தோன், எப்பொருட்க்கும் இறைவன், பரிபக்குவம் என்னும் பல பொருளாயது செம்மல் என்னும் சொல்.
எனவே பாரளந்த செம்மல் என்பது பார் என்னும் பூமியைக் கருதினவனாய்க் காக்கவேண்டி மானமிலாப் பன்றியாய் நிலம் கீண்டு கோட்டிடைக் கொண்ட கோலமாய் எழுந்த செம்மல். இந்த பூமிக்காகத் தான் எவ்வுருவும் ஏற்கும் பரிபக்குவம் அடைந்த தலைவன்.

அமிழ்ந்த பூமியைத் தன் கோட்டிடைக் கொண்டு எழுந்த கோல வராக மூர்த்தி என்பதுவே அன்றிப் பின்னும் இந்த பூமி வேறொருவர் திறத்தது அன்று என்பதை இலச்சினை இட்டுப் பொறிக்குமாப் போலே ஈரடியால் மூவுலகும் முறைதிறம்பா வகை அளந்த செம்மல். திருவிக்கிரமாவதாரத்தை நினைத்தாலும் நெஞ்சு கரைந்துருகும். கோலவராகனை நினைந்தால் உள்ளம் படுகுலைப்பட்டுப் பெரு வெள்ளமிடும். காலாழும்; நெஞ்சழியும்; கண்சுழலும். அப்படிப் பனிக்கும் என் நெஞ்சத்தை, பிரிவேக்கத்தால் நடுங்கும் என் நெஞ்சத்தை, அவனுடைய நீர்மைக்கே நெஞ்சு கரைந்துருகும் என் நெஞ்சத்தை, அவன்பால் காதல் துளிர்க்கும் என் நெஞ்சத்தை அவன்தானே காக்கவேண்டும்? அவனை நான் கேட்டேனா? அவனுடைய சௌலப்ய குணங்களாலே என்னை ஆட்படுத்திக்கொள்ள? நான் பாட்டுக்கு உண்டியே உடையே என்று நிம்மதியாய் இருந்ததைக் கெடுத்தது அவன் தானே?

'உன்னை யார் என்னைப் புரிந்துகொள்ளச் சொன்னார்கள்? நீ பாட்டுக்கு உன்வழியே போக வேண்டியதுதானே?' என்று கூறுகிறாயோ? அது பொருந்தாது. ஏனெனில் உன்னைப் புரிந்துகொள்வதும் உன் அருளே அல்லவா? என் காரணமாக ஏதோ ஒன்றினால் அருள் பாய்ந்தது என்று என் தலையில் நீ ஏறிட ஒண்ணாது. ஏனெனில் எவ்விதக் காரணமும் இன்றி அவ்யாஜ கருணாமூர்த்தி நீ அன்றோ? பசியை மிகுத்துவிட்டுச் சோறிட மறுப்பாரைப் போலேயோ உன் செய்கை? நீ செம்மல் அல்லவா? பெருமைக்கு அடையாளம் என்ன? பரிபக்குவம் அல்லவா? பக்குவமில்லாதார் வார்த்தையைச் செம்மல் பேசலாமோ?

சரி எதிலும் ஓர் அளவு இல்லையா? நீர்மையையும், பெருமையையும் அனுபவித்தீர் எனில் நல்லது என்று ஓர் அளவிற்கு நிறுத்திக்கொண்டு வேறு வேலையில் ஈடுபட வேண்டியதுதானே?

ஆம் அது கூடும். எப்படி.? நீ நெஞ்சத்தை எதுவும் செய்யாமல் இருந்திருந்தால் நாங்களும் மாறிப்போவோம். ஆனால் நீ முதலில் படுகுலையடிப்பது எங்கள் நெஞ்சத்தை அல்லவா? பின் எதை வைத்து நாங்கள் உன்னை விட்டு விலகிப் போகவாவது நினைப்பது.? கைப்பொருளை எல்லாம் பிடுங்கிக்கொண்டு வெளியில் விரட்டுவாரைப் போலன்றோ இருக்கிறது உன் வார்த்தை? எங்களைக் காப்பது இருக்கட்டும். உன்னால் நிலைகுலைந்த என் நெஞ்சத்தை நீயன்றோ காக்கவேண்டும்.

பாரளந்த செம்மல் பனிக்குமென் நெஞ்சத்தை

சரி. காக்கவேண்டும் என்றால் எப்படிக்காப்பது? நானோ திருவிக்கிரமனாய்க் கோல வராகமாய் அனைத்துலகப் பொதுவாகத்தானே என் பெருஞ்செயல்களைச் செய்தேன். அப்படி இருக்கும் பொழுது நீ நெஞ்சம் உடைகுலைப் பட்டால் அதற்கு நானோ பொறுப்பு?

இல்லை. இனி நான் உன்னோடு பேசப்போவதில்லை. நீ வெறுமனே கேள். நான் இனிப்பேசப்போவது உன்னால் காக்கப்பட்ட, அளக்கப்பட்ட, கருதி அளிக்கப்பட்ட மேதினியாகிய பூமி தேவியைப் பார்த்துத்தான்.

'அம்மா பூமி! நீயே கேட்டுக்கொள். இவரால் என் நெஞ்சம் நிலைகுலைந்தது. அந்த நெஞ்சத்தை, இவரை நினைத்து பிரிவில் நடுங்கும் என் நெஞ்சத்தை, இவர் காக்க வேண்டும். இப்படியே இவர் காப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனெனில் உலகப் பொதுவானவன் நான், ஊருக்கெல்லாம் அரசன் நான் என்று ஏதேனும் கூறிக் கைவிட்டாலும் விடுவார். அம்மா! காரளந்த மேனியனான ஸ்ரீகிருஷ்ணனாக இவன் என்னைக் காவானேல்..

அவர் காத்தால் போதாதா? ஏன் காரளந்த மேனியனாகக் காக்க வேண்டும்?

பெண்ணின் மனமறியாத பெருந்தேவராய் அவர் இருக்கும் அவசரம் நமக்கு என்ன பிரயோஜனம்? கடமை, நாடு, பொதுவான அறம் நியாயம் என்று ஏதாவது பேசி நம்மையே நம்பவைத்து விடுவார். ஆனால் பெண் ஒருத்திக்காகத் தன் பெருமை, செல்வாக்கு, மன்னர்களிடையே தனக்கு மதிப்பு என்ற அனைத்தையும் தூர எறிந்துவிட்டு ஒருத்தி குழல் முடிக்க ஊரைப் பகைத்த உத்தமன் அவன் தான் நம்பிக்கைக்குரியன். அவன் செய்யும் கள்ளம் அன்றோ நம் கதிப்பேறு! அவன் கூறும் பொய்யன்றோ நம் வாழ்வு! கண்ணனே நமக்கு இங்கே வேண்டுவது. அருளுக்கும், கருமைக்கும், பெருமைக்கும் அவனே அளவுகோல். அந்தக் காரளந்த மேனிகொண்டு காவானேல் என் நெஞ்சத்தை, சொல்லிவிட்டேன் அம்மா பூமி!

காரளந்த மேனிகொண்டு காவானேல் ?

தேரளந்த வீதியெலாம் சென்று -- தான் ஸர்வஸ்மாத்பரன், அனைத்துப் பொருட்கும் இறைவன், அனைத்துலகும் முறைதிறம்பாது காக்கும் பரம்பொருள், அனைத்து தேவர்களினும் மிக்கோன், ஒப்பாரும், மிக்காரும் இல்லாத பெருமை உடையோன், சிறியதைப் பெரியது நலியாதபடியும், ஒவ்வொரு உயிரினுள்ளும் நின்று அவ்வுயிரைப் புரக்கும் இயல்பான அருளின் உருவானான் என்றும் பெரும் விருதுகள் ஊதிச் செல்கிறானே தேர் உற்சவம் என்னும் வடிவில், அந்தத் தெருவெங்கும் சென்று, 'இதோ பாருங்கள் ஓரபலை! அவன் நீர்மைக்கே நெஞ்சம் இழந்தாள், கைமுதலும் இழந்து கைவிடப்பட்டாள்; அவனையன்றி நினையாத நெஞ்சும், அவனால் காக்கப்படாமல் கைவிடப்பட்ட பனிக்கும் நெஞ்சும், அவன் காப்பன்றி வேறு எதுவும் அறியாத, தன் காப்பு என்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் நெஞ்சு தன் திறத்தது அன்றி அவனுக்கே உருகுமாலோ என்று அற்றுத்தீர்ந்த இந்த அபலையைப் பாருங்கள்! அவரோ வியன் விண் பெருமானார்! இமையாத நாட்டத்து நல்லமரர் புடைசூழ வீற்ற பெருமானார்.!
நெஞ்சம் துடிக்க, உருகும் உள்ளம் கண்ணாஞ்சுழலையிட, மற்றவர் ஏசாமலாவது தன்னைத்தான் காத்துக்கொள்ள, மூலமான கைச்சொத்தான நெஞ்சத்தையே அவன் கெடுத்து அதனால் திரிகின்ற நிலைக்கு வந்துவிட்ட இந்த அபலையைப் பாருங்கள்! இந்த வியன்விண் பெருமானார்தாம் திருவிக்கிரமனாய்ப் பாரளந்தது! இந்த வியன் விண் பெருமானார்தான் கோல வராகமாய் பூமியைக் காத்துத் தன் கோட்டிடைக் கொண்டது! அன்பர்களே! திருமாலின் அடியார்குழாங்களே! இனி நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவள் முடிவது அவனுக்குப் பெருமையா? அல்லது இந்த அபலையைக் காரளந்த மேனிகொண்டு காப்பது அவனுக்கும் உங்களுக்கும் ஏற்றதா?.

காரளந்த மேனிகொண்டு காவானேல் ...

தேரளந்த வீதி எலாம் சென்று
வியன் விண் பெருமானார்
மேதினியில்
ஊர்வேன் மடல்.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

*

No comments:

Post a Comment