Monday, December 30, 2019

கணினி, நெஞ்சென்னும் உட்கண், ஆயர்தேவு

கணினி, ஆபரேடிங் ஸிஸ்டம், இன்டெர்நெட் தொடர்பு, பிரௌஸர், ஸர்ச் பொறி, எச்டிடிபி முகவரி என்று இந்தச் சூழலில்தான் வெப் தளம் பிரத்யக்ஷம் ஆகிறது. நாம் இருக்கு என்கிறோமே அந்த வெப் தளம் எங்கே பார்ப்பது? கணினியில் நாம் காட்டுவது திரையில் ஏதோ தெரியும் சலன சித்திரங்கள். ஆனால் நாம் சொல்வதோ ஏதோ வெப் உலகம் என்று மின் அலை அமைத்த பொதுவெளி. அது இதுதான் என்பதும் அதைக்காண இத்தனை வாங்கியாக வேண்டும், இவற்றை ஒருங்கிணைக்கும் நெறிமுறைகளை வேறு கற்க வேண்டும். – ஆக மொத்தம் ஒரு நம்பிக்கைவாதியைப் போல் நம் பேச்சுகள், செயல்கள் ஆகிவிடுகின்றன ஹைடெக்கான கணினி நெட் சூழ்நிலையில். ஆனால் இயல்பான வாழ்க்கையே இப்பொழுது நமக்கு வித்யாசமான கோணத்தில் தெரிந்துகொண்டிருக்கிறது.

ஐம்புலன்கள், ஐம்பொறிகள், ஐம்பூதக் கோவையான உலகம், மனம், மொழி என்று இத்தனை இருந்துதானே எனக்கே பிரத்யக்ஷமான இந்த உலகம் இயன்றுகொண்டிருக்கிறது. எனவே இந்தப் பிரத்யக்ஷம் எனக்கு இந்தச் சூழலின் கூட்டரவைச் சார்ந்து தோன்றும் சத்யம் அதுதானே? இந்தச் சூழலை விட்டுப் பிரிந்து நின்று பார்த்தால் இதன் சத்யத்வம் என்ன ஆகும்? அப்படி ஒரு நிலை முடியாது என்ற காரணம் இதன் சார்பு நிலையைப் பற்றிய என்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்துவிடவில்லையே! அசாத்தியம் ஒன்றைப் பற்றித் தெரிவிப்பது இந்த சத்யம் பாதிப்பே அற்றது என்று உறுதியளித்தது ஆகாதே! அப்படியே பார்த்தாலும் தூக்க நிலையில் ஓரளவிற்கு இதுவும் சாத்யம் என்றுதானே ஆகிறது. ஸ்வப்னம் வெறுமனே நனவு நிலையின் தலைமீது பறக்கும் நீராவிதான் என்று கழித்துக்கட்டிவிட முடியுமா? ஓர் ஆபரேடிங் ஸிஸ்டத்தின் பிரத்யக்ஷத்தை இன்னொரு ஆபரேடிங் ஸிஸ்டத்தின் பிரத்யக்ஷம் கொண்டு கொள்ளவோ தள்ளவோ முடியாது என்பதைத்தானே இப்பொழுது கணினியும், இணையமும் எனக்கு ஜீவனின் ஸ்திதி பற்றிய புதிய கோணத்தையல்லவா திறந்துவிடுகிறது.

இது ஒரு பக்கம் என்றால், 'என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே' (3162) என்று பாராங்குச நாயகிப் பாசுரம் முற்றிலும் புதுப்பொருள் கொண்டு அன்றோ என் நினைவில் எழுகிறது. இப்பொழுது நான் நம்மாழ்வாரிடம் எப்படி நெஞ்சின் பொதுமையைப் பற்றி வாதம் செய்வது? கணினி முதலிய சூழல்கள் இருந்தால்தான் வெப் உலகத்தைப் பார்க்க முடியும் என்று சொன்ன வாய் உலர்வதற்குள் இந்த நினைவை எதிர்நோக்கும் போது திகைப்படைகிறேன். அவரோ தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணில்லாமல்தான் பேசுகிறார்.

'மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே' (3082)

'ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே' (3365)

'காண்மின்கள் அன்னையர்காள்! என்று காட்டும் வகை அறியேன்' (3409)

பொதுமையாக ஆக்குவதற்கு இதில் ஒன்றுமில்லை என்று நான் அவருக்குச் சொல்லும் போது அந்த வார்த்தைகள் சரியாக விலாசம் விசாரித்துக்கொண்டு வந்து எனக்கே பொருந்துகின்றன. நானே ஒரு நூறு வருஷங்களுக்கு முன் இருந்தால் யாராவது என் மாதிரி சொல்லியிருந்தால் நானும் ஏதோ நம்பிக்கைகளின் உலகம் என்று போயிருப்பேன். ஆனால் விஞ்ஞானம் உபகரணங்களின் மூலமான ஒரு நுண் அனுபவத்தை எனக்குப் பலாத்காரமாக என் வாழ்க்கையில் திணித்துவிட்டதால் இது என்னைப் பொறுத்தவரையில் யதார்த்தம் ஆகிவிட்டது. அதுபோல் பக்தி உலகு என்பதையும் ஏதாவது விஞ்ஞானம் பலாத்காரமாகப் பொதுமைப் படுத்துமேயானால் அப்பொழுது நம் யதார்த்தக் கணக்குகள் வேறு மொழியைத்தானே பேசும்!
அதைத்தான் திருதராஷ்ட்ரன் கேட்கிறான் ஸஞ்சயனிடம்.

"ஸஞ்சயனை நோக்கி திருதராஷ்ட்ரன், நீயும் நானும் ஒக்க சாஸ்த்ர வாசனைகள் பண்ணிப் போந்தோம். இங்ஙனே இருக்கச் செய்தே எனக்கு உன்பக்கலிலே கேட்டு அறியவேண்டும்படி உனக்கு இவ்வர்த்தத்தில் வைசத்யம் (அறிவு விளக்கம்) உண்டானபடி எங்ஙனே? என்ன ---

ஸஞ்சயன்:- எனக்கு வாசி கேளாய்! ....
சுத்தபாவங்கத: பக்த்யா சாஸ்த்ராத் வேத்மி ஜநார்த்தனம் -- நினைவும் சொலவும் செயலும் ஒருபடிப்பட்டிருப்பன். பக்தி ஸஹக்ருத சாஸ்த்ரத்தாலே அவனை அறிந்தவன் என்றானிறே"
(ஈடு பகவத் விஷயம் 5.5.2).

சஞ்சயா! நீயும் நானும் ஒன்றாகத்தான் படித்தோம். ஆனால் தத்வார்த்தங்களை நீ சொல்ல நான் கேட்க வேண்டியிருக்கிறதே? இது எப்படி? படித்தது ஒரே ஆசிரியரிடம். படித்ததும் ஒரே நூல்களை. ஆனால் உனக்குப் பிரத்யக்ஷமாக ஆவது ஏன் எனக்கு நீ எடுத்துச் சொல்லிக் கேட்டுக்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது? பாவம்! கல்வியின் ஓர் ஆணிவேரைத் தடவித் தடவிச் சுண்டிப் பார்க்கிறான் திருதராஷ்ட்ரன்.

'மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே' (3082)

'ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது? என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே' (3365)

'காண்மின்கள் அன்னையர்காள்! என்று காட்டும் வகை அறியேன்' (3409)

பக்த்யா ஸஹக்ருத சாஸ்த்ரம் -- பக்தியின் உதவியோடு கூடிய சாஸ்த்ரம். இந்தப் பின்புலத்தில் இனிவரும் சம்பவத்தைப் பாருங்கள்.-
ஸ்ரீராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் சொல்லச் சொல்ல ஏடுபடுத்தினவர் கூரத்தாழ்வான். நடுவில் உபாதைகள் வந்தபின்பு ஏடுபடுத்தும் பணிக்குத் தகுந்த ஒருவர் வேண்டியிருந்தது. அந்தத் திருப்பணிக்கு ஏற்றவரென தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிள்ளை எங்களாழ்வான். வேதாந்தம் கரைகண்டவர். இவருக்கு இருந்த அபரிமிதமான ஞானத்தெளிவைக் காட்டும் நிகழ்ச்சிகள் பல. சாஸ்த்ரத்தில் கரை கண்டவர். ஸ்ரீவிஷ்ணு புராணத்துக்கு உரை எழுதியவர். அவர் தூங்கப் போகும் பொழுது, தூக்கமும் அழுத்தாமல் நனவும் கலையாமல் இருக்கும் முன்னிலையில் கனவில் 'எனக்கு நாவல் பழம் வேண்டும்' என்று ஒரு சிறுபிள்ளை கேட்கிறது. சரி ஏதோ கனவு என்று நனவின் பகுதி தள்ளியவாறே தூங்கப் புக மீண்டும் மீண்டும் சிறுபிள்ளையின் தொந்தரவு அதிகமாகிறது.

'யாரப்பா நீ?' என்கிறார் பிள்ளை எங்களாழ்வான்.

"நான்தான் சீயர்மகன் ஆயர்தேவு" என்று பதில் சொல்கிறது சிறுபிள்ளை.

விழித்தெழுந்து பிள்ளை எங்களாழ்வான் நேரே போனார் நஞ்சீயரிடம்.

"சீயரே! உம்முடைய மகன் ஆயர்தேவு எங்களை இங்கே குடியிருக்கவும் ஒட்டுகிறானில்லை, தூங்கவும் விடுவதில்லை" என்று படும் தொல்லையைச் சொன்னார்.

உடனே நஞ்சீயர் திருப்பள்ளியறைக்குச் சென்று "நாயந்தே! இப்படிச் செய்தல் கூடாது" என்று கடிந்துகொண்டார்.

ஆயர்தேவா? எங்கள் கண்ணுக்குப் படவில்லையே என்கிறது என் யதார்த்த அளவுகோல். என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்கிற பாசுரப் பகுதியும், கணினி - வெப் உலகமும் ஒன்றுக்கொன்று சங்கேதமாகப் பேசிக்கொள்கின்றன. என்னதான் நடக்கிறது இந்த உலகத்தில்? கட்டங்கள் கிழித்து வைத்திருக்கிறோம். உண்மைகள் கீழ்ப்படிய மறுக்கின்றன. துயிலின் சுகம் போனதுதான் மிச்சம். பாவம் நீங்களாவது நன்றாக உறங்கிக் கொண்டிருந்தீர்கள்! உங்களையும் தொந்தரவு படுத்தி ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment