Wednesday, December 18, 2019

பஜனை சம்பிரதாயங்கள்

’தகுதி’ ’தகுதி’ என்று ஜதி பேசும் மிருதங்கங்களின் ஓசை பெரும் மயக்கம் தரக் கூடியது. விட்டல விட்டல ஜய் ஜய் ஹரி ஹரி விட்டல என்று பஜனை பத்ததிகள் ஒவ்வொன்றாக சுருள் அவிழும் போது ஏற்படும் ஆனந்தமும் அலாதி. ஸ்ரீகிருஷ்ண சைதன்யரோ ஹரி போல் ஹரி போல் என்று நாம சங்கீர்த்தனம், ராதா மாதவ முரளி மனோகர என்று ஆடிப்பாடி கிருஷ்ணனைத் தொழும் பஜனையினாலேயே மக்களைப் பெரும் உலகியல் துயிலிலிருந்து எழுப்பினார். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரோ பஜனைகள், பக்திப் பாடல்கள் என்று அழுது, தன் வசம் இழந்து, அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியபடியே, விவேகாநந்தர் மூலம் புதிய உலகிற்கான செய்தியையும் வழங்கிவிட்டுப் போய்விட்டார்.

எனக்குப் பொதுவாகவே பஜனைகள் என்றால் ஒரு மயக்கம்தான். அந்தப் பத்ததிகளைப் பார்ப்பதில் ஒரு தனி நேர்த்தி இருக்கும். அதில் எவ்வளவோ, ஒரு மூன்று நான்கு பத்ததிகளாவது, அதாவது முறைகளாவது சொல்கிறார்கள். அவை என்ன என்ன பத்ததி என்று கொஞ்சம் ஆழமாக அலசிப் பதிய வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனாலும் அந்தப் பத்ததிகளைப் பற்றி அவ்வளவு விஷயம் தெரியாது. இத்தனைக்கும் என்னுடைய பெரியப்பாவின் மகள் பெரிய பண்டிதை இந்த பஜனை விஷயங்களில். அவளால் பயிற்சி அடைந்தோர் பலர் உண்டு. அவளிடம் கொஞ்சம் இவை பற்றியெல்லாம் கேட்க வேண்டும் என்று ஒரு நாள் அவளிடம் நேரம் காலம் சொல்லிவிட்டுப் போய் உட்கார்ந்தேன். ஒரு அரைமணி நேரம் ஆயிற்று அவளுக்கு என்னுடைய ஆர்வம் உண்மையானதுதான் என்று நம்பிச் சொல்ல ஆரம்பிப்பதற்கு. ஆனாலும் அவளுக்கு ஆச்சரியம்தான், உனக்கு எப்படி இவற்றில் ஆர்வம் ஏற்படுகிறது? நீ ஒரு வறட்டு வேதாந்தியாச்சே? என்று இப்பொழுதும் அவள் என்னைக் கிண்டலடிக்காமல் இருப்பதில்லை. ஆனால் பஜனைகள் என்பன ஓர் அரிய பண்பாட்டு நிகழ்வாய் நம் சமுதாயங்களில் இருந்து வந்திருக்கின்றன. நெடுங்காலமாக. பல சம்பிரதாயத்தவர்களும் இந்த பஜனை பத்ததிகளில் அரிய பங்கு செலுத்தியுள்ளனர் என்றாலும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில். தென்னிந்தியா என்று பார்த்தாலும் அனைத்து தத்துவ சம்ப்ரதாய மக்களும் உண்டு என்றாலும், ஆதிசங்கரரின் அத்வைத சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு மிகவும் போற்றப்பட வேண்டியதும், மிகவும் தொடர்ந்து வரும் ஒன்றும் ஆகும்.

இந்த பஜனைகளில் பார்த்தால் அதில் கலந்து கொள்ளும் மக்கள் இன்னார் என்று வகுப்புப் பிரிவினைகள் இன்றி, பக்தி என்ற ஒரே ஆர்வம் என்பதை முன்னிட்டு, நாம ஜபம் என்பதில் ஈடுபாடு கொண்டவர்கள் என்னும் அடையாளத்துடன் தங்கள் உற்சாகத்தை மனம் கனிந்த பாடல்களின் மூலம், நாம சங்கீர்த்தனத்தின் மூலம் ஒரு கூட்டு வழிபாடு என்ற முறையில் உணர்ச்சி கெழும ஒன்று சேருவது பார்க்க மிக இனிமையாய் இருக்கிறது.

பஜனையின் போது ஒன்று கவனித்திருக்கிறேன். மெயின் லீட் எடுத்து பாடுகின்றவரும், மற்றவர்களும் ஒரு கட்டத்தில் ஸ்தாயி உயர்ந்து ‘கோவிந்தா’ என்று கூவும் போது அங்கு அனைவரது கண்களும், உணர்ச்சிகளும், குரல்களும் ஒரு மையத்தை நோக்கிக் குவிகின்றன. அங்கு கோவிந்தன் என்ற நபர் இல்லை. அங்கு இருப்பது படம் தான். ஆனால் கண்களில் கண்ணீரும், குரலில் ஏக்கமும், முகமெல்லாம் ஆர்வமும் கொண்டு கூவும் போது ஒன்றை நோக்கிய விளியாக எழுகிறது. அப்படி என்றால் ஏதோ ஒரு பிரஸன்னம், அதை நோக்கியபடி, அதைக் குறித்து விளிக்கும் உணர்ச்சியின் கணம், அவ்வளவு உணர்ச்சிகள், நெகிழ்ச்சிகள், அவரவர் தங்களை, தங்களுடைய அந்தஸ்து, வேலை, தங்களுடைய லாப நஷ்டக் கணக்கு, அடுத்து செய்ய வேண்டிய காரியம் எல்லாவற்றையும் விட்டு இப்படி ஒன்றித்து ஒருமித்து நினைத்து ஏங்குகின்றோம்.

பஜனையில் பாடப்படுவது பரம்பொருள்தான். ஆனால் பார்க்கவும், கொஞ்சவும், கெஞ்சவும் ஆகலாம் அளவிற்கு அது உருவமும் கொண்டு நிற்கிறது என்று சிந்திக்கும் பொழுது ... அவ்வாறு சிந்திப்பது நம் தோல்விதான் என்றாலும் அந்தத் தோல்வியின் மூலம் நாம் ஏதோ ஜயித்துவிடுகிறோம். அப்படிப்பட்ட பரம்பொருள் நாம் பார்க்க, பழக, கொஞ்ச, கெஞ்ச வந்து விளையாடுவதா என்று நினைத்தார் நம்மாழ்வார். ஆறுமாசம் இந்த ஆச்சரியத்தால் அடிபட்டு மோஹித்துக் கிடந்தார். அந்தப் பாசுரத்தை விளக்க என்று முற்பட்டார் கூரேசர். அந்தக் கணமே பேச்சு நின்று, கண்ணீர் பெருகி நெடுநேரம் தன்னிலை இழந்து அமர்ந்திருந்தார் கூரத்து ஆழ்வான். தேரா...தேரா...தேரா... (உனக்கு உனக்கு உனக்கு) என்று தானியத்தை அளந்தவர் இன்னும் அளந்துகொண்டிருக்கிறார், சுய நினைவு இல்லாமல். எனவே இதில் நான் கண்ட கடவுள்தான் சரி, நீ கண்டது பொய் என்று சொல்வதற்கு என்ன பொருள் இருக்கிறது? எனவேதான் வேதாந்தத்தின் விசாரம் நிறைந்த மனப்பக்குவத்தை, பக்தியின் பார்வையில் கலந்தார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

குழந்தைகளின் விளையாட்டு. பெரும் பூதம் ஒன்று வந்து குழந்தை பாபுவை மிரட்டுகிறது. இதோ உன்னை உண்ணப் போகிறேன் என்று வந்து கவிந்து உண்ணப் பார்க்கிறது. ஐயோ என்ன கொடுமை! ஆனால் குழந்தை பாபுவோ சிரித்துக்கொண்டிருக்கிறான். அந்தப் பூதம் குனிந்ததும் அதன் முகமூடியைப் பிடித்துக் கழட்டிவிட்டு, ‘கேசவ் அண்ணா! தெரியும் நீதான்’ என்று கைகொட்டிச் சிரிக்கிறது. கேசவ் அண்ணா குழந்தை பாபுவைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறான். இந்த உலகமே பரம்பொருள் போடும் முகமூடி என்கிறது வேதாந்தம். நாம் குழந்தை பாபுவா?

*** 

No comments:

Post a Comment