Monday, December 23, 2019

’ரஹஸ்ய த்ரயம்’ பொருள் விளக்கம்

ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் குறிப்பிடப்படும் சரம ச்லோகம் என்பது என்ன?. இங்கு சரம ச்லோகம் என்பது ஸ்ரீமத் பகவத் கீதையின் நிறைவு அத்யாயமான 18 ஆம் அத்யாயத்தில், ஸ்ரீகிருஷ்ணன் கூறும் அனைத்து யோகங்களுக்கும் முடிந்த கருத்தாக வரும் சுலோகமான

சர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
மாசுச: ||

என்பதை 'சரம ச்லோகம்' என்று குறிப்பிடுவது சம்ப்ரதாயம். இதன் பொருள் -

'என்னை அடைவதற்கு அனைத்து நெறிகளையும் விட்டு என் ஒருவனையே சரணமாகப் பற்று. நான் உன்னை என்னை அடையவிடாமல் தடுக்கும் ஸர்வ பாபங்களிலிருந்தும் விடுவித்து என்னை அடைய வைப்பேன்'

என்பதாகும். அதேபோல் திருமந்திரம் என்பது ஸ்ரீ அஷ்டாக்ஷர மந்திரமாகிய நாராயண மந்திரம் ஆகும். எட்டு எழுத்துக்கள் கொண்டமையால் அதற்குத் தமிழில் திரு எட்டெழுத்து என்று பெயர். (அஷ்ட அக்ஷரம் - எட்டு எழுத்து). இந்த மந்திரத்தின் உட்பொருள் கடலைனைய ஆழமும், விண்ணொத்த விரிவும் கொண்டது. இந்த ரஹஸ்யத்தை பத்ரிகாச்ரமத்தில் நர ரிஷிக்கு நாராயணனாய் நின்று பகவான் வெளிப்படுத்தினார்.

த்வயம் என்பது ஈரடி கொண்ட மந்திரம். பெருமாளையும், பிராட்டியையும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத திவ்யதம்பதிகள் ஆகிய தத்துவமாகக் கண்டு சரண்புகுதலும், கைங்கரிய ப்ரார்த்தனையும் வடிவான மந்திரம்.

இந்த மூன்று மந்திரங்களும் சேர்ந்து ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் ரஹஸ்ய த்ரயம் என்று சுட்டப்படும். இங்கு ரஹஸ்யம் என்பது அதற்கான தீக்ஷை பெற்று, உரிய ஆர்வமும், ஈடுபாடும் கொண்டோர் தம் உடல், உள்ளம், உயிர், உரை என்ற அனைத்தையும் திருமால் நன்னெறியில் அர்ப்பணித்துக் கொள்ளுதலைக் காட்டும். Mystical secrets என்றபடிப் பொருள் கொள்ள வேண்டும். சாத்திரங்களுக்கான பொருளை முதல்நிலைச் சொற்பொருள், ஆழமான பொருள், ஆழ்ந்திருக்கும் உட்சாரமான மெய்ப்பொருள் என்ற ஆழ்படித்தரங்களில் பொருள்கண்டு அடையப்படும் கருத்தின் உறுதிப்பாட்டை ‘ரஹஸ்யம்’ என்ற சொல் குறிக்கிறது.

***

No comments:

Post a Comment