சப்தம் எப்படிப் பிரமாணமாகும் என்று என்றோ ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாசாரியாரைக் கேட்டுப் பேசிக் கொண்டிருந்த ஞாபகம் ஒரு பக்கம். சப்தத்தின் முக்கியத்துவம் பற்றிப் படிக்கும் போது அந்த ஞாபகம் வருகிறது.
ஸதாசார அனுஸந்தானம் என்று ஒரு பிரகரண க்ரந்தம் அத்வைதத்தில். அதில் வரும் இரண்டு ச்லோகங்கள் கவனத்திற்கு உரியவை.
வேதாந்த ச்ரவணம் குர்யாத் மநநம் சோபபத்திபி: |
யோகேநாப்யஸநம் நித்யம் ததோ தர்சநம் ஆத்மந: || (18)
வேதாந்தத்தைச் செவி ஓர்தலே சிரவணமாகும். அந்த ச்ரவணமே செய்யப்பட வேண்டியது. (ஏவகாரம் தொக்கி நிற்கிறது). பலவித யுக்திகளால் அந்த வேதாந்த ச்ரவணத்தில் செவி ஓர்ந்ததையே ஒன்றுக்கொன்று பொருத்தத்தை நன்கு செய்யும் மனனமானதே செய்யப்படவேண்டும். ஐயம் திரிபறச் சிந்தித்துத் தெளிந்ததை மன ஒருமைப்பாட்டுடன் நன்கு தொடர்ந்த நினைவாக ஆக்குதலாகிய யோக அப்யாஸமானது செய்யப்பட வேண்டும். அதன் பிறகு அதிலிருந்து ஆத்மாவினுடைய தர்சனமாகிய அனுபவம் ஏற்படும்.
சப்த சக்தேர் அசிந்த்யத்வாத் சப்தாத் ஏவ அபரோக்ஷதீ: |
ப்ரஸுப்த: புருஷோ யத்வத் சப்தேன ஏவ அவபுத்யதே || (19)
சப்தத்தின் சக்தியானது சிந்தனைக்கு எட்டாததாய் இருப்பதால் சப்தத்திலிருந்தே ஆத்மானுபவ விருத்தியானது ஏற்படுகிறது. எதைப்போல என்றால் தூங்கும் மனிதன் விழித்துக்கொள்வதே சப்தம் கேட்டு அன்றோ?
***
No comments:
Post a Comment