Monday, December 16, 2019

தாயுமானவர் காட்டும் மோனம்

ஏகப்பட்ட தடாலடி அவசரம், வேர்ப்பு எல்லாம் பட்டு ஓய்ந்து ஒரு நாள் யாராய் இருந்தாலும் இப்படித்தான் நினைப்பார்கள். எல்லா அவஸ்தைக்கும் எது காரணம்? ஓடி ஓடி அடைந்ததுதான் என்ன? இந்தப் பாலை வனப்பொட்டல் வெளியில் கானல் நீர் குடிக்க கால்கடுக அலைந்து திரிந்து, அமர ஒரு நிழல் நாடி, போதும் போதும் .. எல்லாம் எங்கிருந்து ஆரம்பம்? எதை நோக்கி இந்த அவசரம்?

"எல்லாமே
மோன நிறைவு எய்துதலால்
எவ்விடத்தும் நல்லார்கள்
மோனநிலை நாடினார்;
பொல்லாத நான் என
இங்கு ஒன்றை
நடுவே முளைக்கவிட்டு
இங்கு ஏன் அலைந்தேன்
மோனகுருவே!"

எல்லாமே மோனநிறை வெய்துதலால், எவ்விடத்தும்
நல்லார்கள் மோனநிலை நாடினார்; -- பொல்லாத
நானென இங்கொன்றை நடுவே முளைக்கவிட்டிங்
கேனலைந்தேன் மோனகுரு வே.
(உடல்பொய்யுறவு 74 ஸ்ரீதாயுமானவசுவாமி பாடல்கள்)

இந்தப் பாட்டில் ஒன்று கவனித்தீர்களா? மோன நிறைவு. மோன நிலை. எல்லாமே மோன நிறைவு எய்துகிறது. எல்லாமே என்றால்? எல்லாமேதான். பார்க்கப்படும், கேட்கப்படும், உணரப்படும் அனைத்தும் மோனத்தில் நிறைவு எய்துகிறது. எவ்விடத்தும் நல்லார்கள் என்ன செய்கிறார்கள்? மோன நிலை எய்துகிறார்கள். ஏன்? நல்லவர்கள் என்போர் நிறைவை நோக்கிச் செல்லுபவர்கள். நிறைவு எங்கே இருக்கிறது? மோன நிலையில். ஏன்? எல்லாமே மோன நிறைவு எய்துதலால். எனவே இதை ஒரு பெரிய கான்ஸர்ட்டோ இசைச் சாரணியாக யோசித்துப்பாருங்கள். All the notes attaining fulfillment in silence. அப்பொழுது ஒரு பெரிய கண்ணாடி சாண்டலியரைப் போட்டு உடைத்தாற்போல் ஒரு விரசமான கலாட்டா ஏற்படுகிறது. The Harmony is broken into pieces. Or so it seems at least. Oh What a discord !

பொல்லாத நான் என
இங்கு ஒன்றை
நடுவே முளைக்கவிட்டு
ஏன் அலைந்தேன்?

பதில் என்ன? கேள்வியைக் காதில் வாங்கிய வண்ணம் வட ஆலின் கீழமர்ந்த செல்வரோ பூப்பது ஒரு குமிணகை!!! மோனத்தின் அணுக்கமானச் சொல்லே இந்தக் குமிணகையோ? மோன குருவே

இன்னும் ஒன்றைக் கவனியுங்கள். பொல்லாத நான் -- அப்பொழுது நல்ல நான் என்று இருக்கிறதா? சரி பொல்லாத நான் என்றாலும் ஒன்றை நடுவே முளைக்கவிட்டு என்றால்? யார் முளைக்க விட்டார்கள்? அதுவும் நடுவே? எதற்கும் எதற்கும் நடுவே? ஜீவனா? ஈச்வரனா? ஏன் அலைந்தேன்? என்கிறாரே.. அப்படியென்றால் இங்கு நடுவே (எங்கு?) இவரோ அவரோ முளைக்கவிட்டதால் அலைய நேர்ந்ததா? அல்லது அலைந்ததால் இங்கு நடுவே முளைத்ததா? மோனகுருவே

ஸ்ரீராமகிருஷ்ணரின் அருள்வாக்கு -- "இந்த 'நான்' அகன்றால்தான் மோட்சம். ஆனால் இந்த 'நான்' போவதில்லை. இந்த 'ராஸ்கோல் நான்' போகமாட்டேன் என்று அடம் பிடித்தால், 'தாஸ நான்' ஆக இருந்துவிட்டுப் போகட்டுமே". எனவே பொல்லா நான் என்னும் பொழுது நல்ல நான் என்று ஒன்றும் உண்டு என்று ஸ்ரீராமகிருஷ்ண உபநிஷதம் சொல்கிறது.

ஆனால் 'முளைக்க விட்டு' என்றால் யார் முளைக்க விட்டார்கள்? அதாவது ஏஜென்ஸியின் அடிப்படையே இந்த 'நான்' . இதை யாராவது முளைக்க விடுவது என்றால் சுய ஏஜென்ஸிக்கு வெளியிலிருந்து ஆளைக் கொண்டுவர வேண்டும். என்ன சொல்கிறார் ஸ்ரீதாயுமானவர் என்பது தத்வார்த்தமாக யோசிக்கவேண்டிய ஒன்று. இந்த மோனம் என்பது என்ன? சத்தம் போடாமல் இருத்தல் -- அதுதானா? மௌனம் என்பதன் நிருக்தம் என்ன? நிர்வசனம் என்ன? அவர் மௌனமாக இருக்கிறார். அப்படியென்றால் சப்தம் போடாமல் இருக்கிறார். அந்தப் புல்லாங்குழல் இசை மௌனமாக இருந்தது. -- சொல்லலாமா? அந்தப் பெரியவரின் குரலில் மௌனம் குடிகொண்டிருந்தது -- சொல்லலாமா? அந்த அழகான பெண் திடுதிப்பென்று என்னிடம் வந்து பேசினாள். எனக்கோ சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது -- மௌனமா? 'சத்தத்திலே சதாசிவம் காட்டி' என்று அந்தப் பாட்டி சொல்கிறாள். சதாசிவம் சத்தத்தின் கட்சியா? மௌனத்தின் கட்சியா? மோனாகாரம் என்றால் சத்தத்தில் எப்படித் தெரியும்? பாட்டி வாய் போன போக்கில் ஏதாவது சொன்னாளா?

மோனம் என்பது என்ன? ஓசை இல்லாமல் இருப்பதுதான் மோனம் என்பது சரியில்லை. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று மோனாகாரமான இறைவனைப் பாடமுடியும் என்றால் அப்பொழுது ஒலி, ஒலியின்மை ஆகிய அனைத்தையும் கடந்ததாகத்தானே மோனம் என்பது இருக்க வேண்டும். சூட்சுமமே இந்த 'நான்' என்பதில் இருக்கிறது என்று தோன்றுகிறது. இது இருந்தால் ஒரே இரைச்சல். ஒரு பொருளும் புரியாமல், திசை தெரியாமல், ஒரே குழப்பம். அலைச்சல். திகைப்பு. மௌண்ட் ரோடில் இருபது கார் ஹார்ன் ஒரே சமயத்தில் கன்னா பின்னா என்று அடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இரைச்சல் இந்த ஒரு 'நான்' காரணமாக. செயலில் இரைச்சல், சொல்லில் இரைச்சல், மனத்தில் இரைச்சல், பொருளில், நிகழ்வில் எங்கு பார்த்தாலும் இசைவு என்பதே அற்ற அலங்கோலமான பெரும் ஓலம், சத்தம். ஆனால் நான் என்பது அகன்றால் ஆனந்த மோன குரு வந்து ஆம் என்ற இசைவு தெரிவிக்க.. ஆனந்த மோன குரு வந்தால்தான் நான் என்பதும் அகலுமோ? யார் இந்த மோன குரு? எங்கிருந்து வருவார்? வந்தபின் எங்கே செல்வார்?

ஸ்ரீதாயுமானவர் வாய் பேசா மோனத்தைக் கருதியிருப்பார் என்று தோன்றவில்லை. ஏனென்றால்

"வாயினால் பேசா மவுனத்தை வைத்துஇருந்தும்
தாயிலார்போல் நான் தளர்ந்தேன் பராபரமே"

பொல்லா நான் என ஒன்றை நடுவே முளைக்கவிட்டு
என்றாரா? நாமும் யார் முளைக்கவிட்டது? எங்கே? என்றோமா? இங்கு பாருங்கள் இப்படி ஓர் பிட்டு போடுகிறார்.

"முக்குணத்தால் எல்லாம் முளைக்கப் பிரகிருதிக்கு
இக்குணத்தை நல்கியது ஆர் எந்தாய் பராபரமே"

சரி விட்டாரா! முக்குணத்தால் எல்லாம் முளைக்குது. மனம். பிரதம மனோவிருத்தியான அஹங்காரம் எல்லாம். -- அப்பாடா ஒரு பிரச்னை தீர்ந்தது. விடுவாரா அவ்வளவு லேசில் ஸ்ரீதாயுமானவர்? என்றைக்கைய்யா இருவினை வந்து ஏறியது? இன்றா நேற்றா? எந்த தேதி? என்னக் கிழமை? அதெல்லாம் எதற்கு? நான் என்று ஒன்று என்று தோன்றியதோ அன்றே அதன் முதுகில் வேதாளம் போல் இந்த இருவினை ஏறி உட்கார்ந்துகொண்டு விட்டது.

"இன்றோ இருவினை வந்து ஏறியது நான் என்றோ
அன்றே விளைந்தது அன்றோ ஆற்றேன் பராபரமே"

அப்பாடா! சரி நான் என்பதோடு உடன் பிறப்பு இருவினை. தீர்ந்தது. ஸ்ரீதாயுமானவர் சிரிக்கிறார். சரியப்பா! இந்த நான் என்பது என்ன? மனத்தில் ஓர் எண்ணம் அவ்வளவுதானே? எண்ணம் என்பதே பராபரமே உன்னைவிட வேறாக இல்லை என்றால் பிறகு...?

"எண்ணமும்தான் நின்னைவிட இல்லைஎன்றால் யான்முனமே பண்ணவினை ஏது பகராய் பராபரமே"

அடப்போங்கப்பா...! எதற்கும் நீங்கள் நடக்கும்போது எதிரில் இந்தத் தாயுமானவர் வந்தால் வேறு தெரு வழியாகச் சென்று விடுங்கள். ஆனாலும் இந்தப்பாடு படுத்தினா.. என்னத்துக்கு ஆறது? சரி அது என்னவேண்டுமானாலும் இருக்கட்டும். மோனம் என்பது ஆனந்த மோன குரு வந்து ஆம் என்று சொல்ல வேண்டுமா? அந்தக் குரு யார்? எங்கிருந்து வருகிறார் என்று கேட்டோம் நினைவிருக்கிறதா? அந்தக் குரு எங்கிருந்தும் வருவதில்லை. எங்கும் போவதும் இல்லை. அந்தக் குருவிற்குள் தான் நாம் இந்த விளையாட்டு விளையாடுகிறோம். நம் கண்ணை நாமே பொத்திக்கொண்டு நாமே நம்மிடமிருந்து ஒளிந்து கொண்டு ஐஸ் பாய் சொல்ல வழி தெரியாமல் திண்டாடுகிறோம். அந்த குரு ஆம் என்று சொல்லிவிட்டால் பின் நமது அறிவு மோனம் தனக்கு இசைய முற்ற வேண்டும். அப்படி நம் அறிவு மோனம் தனக்கு இசைய முற்றினால்தான் ஆனந்த குருவின் ஆம் என்பது வரும். எது முதலில் எது அதற்கப்புறம்? தெரியாது. ஆனால் ஒன்று. ஆனந்த குரு ஆம் சொல்லும் போது நம் அறிவு மோனத்திற்கு இசையும். நம் அறிவு மோனம் தனக்கு இசைய முற்றும் போது ஆனந்த குருவின் ஆம் பிரஸன்னமாகும். அந்தக் கணம் எப்படி இருக்கும்? கற்பனை செய்ய முடியுமா? ஸ்ரீதாயுமானவரின் கருணை இல்லையேல் எப்படி அந்தக் கணத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்? அந்தக் கணத்தில் என்ன நடக்குமாம்? ரசித்து ரசித்துச் சொல்கிறார் எங்க திருச்சி ஆளு.

ஆனந்த மோனகுரு ஆமெனவே, என்அறிவில்
மோனம் தனக்கு இசைய முற்றியதால்

என்ன நடந்தது!!!!

தேன் உந்து
சொல் எல்லாம் மோனம்;
தொழில் ஆதியும் மோனம்;
எல்லாம் நல் மோன வடிவே.

ஸ் ஸ் எல்லோரும் கொஞ்ச பேச்சு மனம். எல்லாத்தையும் நிறுத்திவிட்டு கொஞ்ச நேரம் மோனமாக இருக்கலாம்.

எல்லாமும் மோன வடிவே என்றார். எல்லா மோனமும் ஆனந்தமா? என்னது? மோனம் என்றாலே ஆனந்தம்தானே. அப்படியில்லை. வைசேஷிகன் சொல்வான் இந்த உயிர் அசைவற்றுக் கல் போல் இருத்தலே முக்தி என்று. ஆனால் ஆனந்தம் உண்டு என்று இசையமாட்டான். அந்த மோனம் ஆனந்தமா? சரி பிச்சல் பிடுங்கல் எல்லாம் ஓய்ந்து அப்பாடி என்று இருக்கிறோம். அவஸ்தை இல்லை. ஆனால் ஆனந்தமா? தொல்லையற்று இருப்பது வேறு. தொலையா இன்பப் பெருக்காய் இருப்பது வேறு. பின் எந்த மோனம் ஆனந்தம்? மோன குரு அளித்த மோனமே ஆனந்தம். அந்த மோனம் ஞானம் அருளும். அந்த மோனமே ஞான வடிவு. நான் என்று இருப்பதும் அது. அந்த மோனத்தில்தான் வான் ஆதி எல்லாம் நிற்பதுவே. நெஞ்சப் பிறப்பும் அந்த மோனமேதான். எங்கு கொண்டு வந்து சேர்க்கிறார் கவனித்தீர்களா? பொல்லா நான் என ஒன்றை இங்கு நடுவே முளைக்க விட்டு என்றாரே? அந்த நெஞ்சப் பிறப்பும் அந்த மோனமேதான். எது தொல்லையாகி துன்பம் அளித்ததோ அதுவும் உண்மையில் இந்த மோனமேதான் என்று உணர்வதுவே மோன குரு அளிக்கும் இந்த மோனம். எதிலிருந்தும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மீண்ட விச்ராந்தியன்று ஸ்ரீதாயுமானவர் கருதும் மோனம். இன்பம் துன்பம் நல்லது தீயது என்று அனைத்தும் உள்ளடக்கி விம்ம வளர்ந்த வானாகி நிற்பது மோன குரு அளிக்கும் மோனம். இதை அறிந்ததும் சதா ஸர்வ காலமும் கொப்பளித்துப் பெருகும் ஆனந்தம் அங்கு இங்கு எனாதபடி ஆனந்த பூர்த்தியாகி நிற்பது. அது அருளொடு நிறைந்தது. அது மட்டும் அன்று. தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும் படிக்கு இச்சை வைத்து தழைத்தது.

மோன குரு அளித்த மோனமே ஆனந்தம்;
ஞானம் அருளும் அது, நானும் அது -- வான் ஆதி
நின்ற நிலையும் அது, நெஞ்சப் பிறப்பும் அது
என்று அறிந்தேன் ஆனந்தமே.

மோனம் ஆனந்தம் என்றார். மோன குரு அளித்தது என்றார். ஞானம் அளிக்கும்; அருள் அளிக்கும் என்றார். அதோடு விடுவாரா ஸ்ரீதாயுமானவர்? அந்த மோனத்திற்குக் காணும் பார்வை உண்டு என்கிறார். ஆனால் ஊனக்கண்ணின் பார்வைபோல் பலவற்றைப் பார்க்கும் பேத தரிசனம் அன்று அந்த மோனத்தின் பார்வை. உலகத்தில் பார்வை என்பது பன்மையில் ஒப்புமை, பேதம், கூடுதல் குறைதல் போன்ற முடிவற்ற வேறுபாடுகளைக் காட்டுவதாய் இருப்பது. ஆனால் பரநிலையில் மோனம் என்பது வேறுபாடுகள் அனைத்தையும் அகலக் காணும் பார்வை.

பார்வையைப் பற்றித் திரிசிரபுர ஞானி கூறுகிறார் என்றால் ஒளியைப் பற்றிக் கூறுகிறார் ஸ்ரீபகவத் பாத சங்கரர். நிர்வாண நிலையில் இது என்ன புது விதமான ஒளி? சாதாரணமாக ஒளியில் பொருட்கள் பலவும் இருப்பது தெரியும். பேதங்கள் தெரியும். வித்யாசங்கள் தெரியும். ஆனால் இது என்ன ஆன்ம ஒளி? விசித்ரம். இந்த ஆன்ம ஒளி ஏற்பட்டதும் வேறுபாடுகள் மறைந்து விடுகின்றன. உலகம் காணவில்லை. உலகில் இருட்டில்தான் பொருட்கள் மறையும். ஒளியில் துலங்கும். ஆனால் இந்த ஒளியில் உலகம் மறைய ஆன்மா ஒன்று மட்டும் தானே ஒளிர்கிறது. அந்த ஒளியில் பார்க்கின்ற மோனமும் காண்பதுதான் எதை? பரம்பொருளை. பரம்பொருளைக் காண்கின்ற அக்கணத்தில்தான் வாக்கும் மனமும் மவுனம் உறுகின்றது. ’வாக்கும் மனமும் மவுனம் உற எந்தை நின்னை நோக்கும் மவுனம்’ என்கிறார் ஸ்ரீதாயுமானவர்.

ஆக மோனத்திற்குப் பார்வை உண்டு என்று தெரிகிறதன்றோ? இந்தப் பார்க்கும் மோனம் எப்படி உண்டாகும்? நூலறிவாலா?

வாக்கும் மனமும் மவுனம் உற எந்தை நின்னை
நோக்கும் மவுனம் இந்த நூலறிவில் உண்டாமோ?
(13, பலவகைக் கண்ணி)

சரி! நூலறிவால் உண்டாகாது மோனம் என்றால், அந்த மோனமும் பார்வை என்றால் எந்த அறிவு மோனத்தைத் தரும்? ஒரு ஜோதி. சாதாரணமாக ஒரு ஜோதியில் மற்ற பொருட்களையும் அந்த ஜோதியையும் பார்க்கலாம். ஆனால் இந்த ஜோதியோ கண்ணிற்குத் தான் இலக்காவதோடு கண்ணை நிறைத்து நிற்கிறது. என்ன அர்த்தம்? கண்ணாகவே நிற்கிறது. அப்படியென்றால்?
காண்பது, காணப்படுவது, காண்போன் என்னும் திரிபுடி இன்றி கண், காட்சி, காண்போன் மூன்றும் ஆகி நிற்கும் ஒரு ஜோதி. என்ன ஆச்சரியம்!

ஜோதி அதுவே கண்ணாகவும் ஆகிறது. காணப்படும் காட்சியாகவும் ஆகிறது. கண்ணைக் கொண்டு ஒளியில் காணும் காண்போனாகவும் ஆகிறது. அப்பொழுது அங்கு நான் என்ற காண்போன் கரைய வேண்டும். அதற்கு அந்த நான் ஒருப்பட வேண்டும். அப்படி நான் கரைந்து காண இசையும் அறிவு நல்லறிவு. அந்த நல்லறிவு பிரார்த்தனையால் ஏற்படுவது. எனவே நமக்கு பிரார்த்திக்கச் சொல்லிக் கொடுக்கிறார் ஸ்ரீதாயுமானவர்.

எண்நிறைந்த மேன்மை படைத்து எவ் உயிர்க்கும் அவ் உயிராய்க்
கண்நிறைந்த ஜோதியை நாம் காணவா நல்லறிவே
(1, நல்லறிவே என்கண்ணி)

நல்லறிவை ப்ரார்த்தித்துத்தான் பெறவேண்டும் என்பது வேதாந்த ப்ரக்ரியை. காயத்ரி மந்த்ரமே நல்லறிவை ப்ரார்த்தித்தல் தானே. நம் நல்லறிவைப் பரம்பொருள் தூண்டி நடத்த ஒருப்படவில்லையேல் அனைத்தும் பாழ் ஆம். ஆரம்பத்தில் முரண்டு பண்ணும் மனமே கடைசியில் குருவாகிவிடுகிறது என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

முதலில் ஆரம்பத்தில் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்கவொட்டாத மனம் பின்பு கருக்கல் வந்ததுமே தூங்கவொட்டாது. நாம ஜபம் பண்ணுவதற்கு இல்லாத சால்ஜாப்பு சொல்லும் மனம் பின்பு மறந்தறியேன் என்று பினாத்திக்கொண்டிருக்கும். இத்தனைக்கும் மனம் ஜடம்தான் நம் வேதாந்த ரீதியாக. ஆனாலும் நமக்கு பாரமார்த்திக போதம் விளைக்கும் பெருந்துணையாகிப் போனபின்பு மனத்தை ஜடம் என்று சொல்ல மனம் வருமா? குழந்தையிடம் போய் அதனுடைய டெட்டி பேர் வெறும் பொம்மை என்று சொல்லிப் பாருங்கள். அப்புறம் நீங்கள் அந்தக் குழந்தையின் ஜன்ம எதிரி. ஸ்ரீதாயுமானவர் என்ற ஆனந்த பரவசத்துக் குழந்தையும் ஒரு டெட்டி பேர் வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த டெட்டி பேரை (Teddy Bear) யாரோ ஜடம் என்று சொல்லிவிட்டார்களாம். ஸ்ரீதாயுமானவருக்கு ஒரே அழுங்குகின்றது. தாயும் ஆனவர் அவரைத் தேற்றுகிறார்.

ஏன் அழுங்குகின்றாய்? நீயே யோசித்துப் பார். பொறிபுலன்களால் பழகிவரும் இவ்வுலகில் இந்த உலகம் தானே உண்டாகியிருக்காது. இதனை ஆக்கி அழித்துக் காக்கும் ஒரு முதல் உண்டு என்று முதலில் யூகம் வைத்தது யார்? சரி அதே யூகத்தைப் பிடித்துக்கொண்டு போய் மெய்ஞ்ஞான நிலையில் அந்தப் பரம்பொருளைக் காட்ட தான் ஒரு காலும் வல்லமை உள்ளது அன்று என்று தானே உணர்ந்து மௌனமாக ஆகியதும் யார்? மோனம்தான் காட்டும் காணும் என்று.? மனம்தானே. பின் ஏன் அதை ஜடம் என்று சொன்னதை மனத்தில் வைத்து அழுங்குகிறாய்? உண்மை அறிவித்த இடம் குரு -- இதனை நன்கு தெரிந்துகொள். அருள் இல்லாமல் எதுவும் உண்மையைக் கிஞ்சித்தும் காட்டிவிட மாட்டாது.

"தானேயும் இவ்வுலகம் ஒருமுதலும் ஆகாத் தன்மையினால் 
படைத்து அளிக்கும் தலைமையது ஆன
கோன் ஆக ஒருமுதல் இங்கு உண்டு எனவும் யூகம் கூட்டியதும், 
ஜகமுடிவில் குலவுறும் மெய்ஞ்ஞான வான் ஆக அம்முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே!
ஆனாலும் மனம் ஜடம் என்று அழுங்காதே!
உண்மை அறிவித்த இடம் குரு ஆம். அருள் இலது ஒன்று இலையே."
(17, நினைவு ஒன்று, பாடல் 9)

*** 

No comments:

Post a Comment