தாகத்திற்குத் தவிக்கும் மனிதன் காதில் தண்ணீர் பற்றிய செய்திதான் முதலில் விழும். தருமனுக்கு உயிரின் பிரிவு என்பது என்றோ நடக்கப் போகும் ஒன்று. ஆனால் பாட்டனுக்கு அது நிகழ்காலம். அதுவும் நீட்டிவைத்த நிகழ்காலம். The moment of dying extended to obey his wish but still remains a moment. புறத்திலும் அம்புப் படுக்கை. அகத்தின் மர்ம ஸ்தானத்திலும் அம்புப் படுக்கை. அம்புகளின் கூரிய முனைகளாகிய மலர்களால் தன் வாழ்வு என்னும் படையலைக் கண்ணனுக்கு ஆக்குகிறான் காங்கேயன். உண்மையில் அவன் ஒருவனே வீரன். ஆனால் அவன் உபதேசம் செய்வதோ ஆன்ம தீரத்தைப் பற்றி. அவனைச் செய்ய வைக்கிறான் அச்சுதன். ஆகாதவற்றை ஆக்குவோன். கூடாதவற்றைக் கூட்டுவோன். பேசாதவற்றைப் பேச வைப்போன்; பாராதவற்றைப் பார்க்கவும் அவன் அருளல்லால் நமக்கு ஏது கதி?
வென்று வேலெடுத்த விரை திண் தோளையும், வரையன்ன உடலையும் வீழ்ச்சியின் ஆயிரம் நாவுகளாகச் சுவைக்கின்றன ஆயிரம் அம்புகள். ஆனால் மடியும் உடலின் ஒற்றை நா உரைப்பதோ மடியாத உயிருக்கு ஆயிரம் நாமங்கள். அம்புகளின் தாகம் தீரக் கிடந்தவன் தன் அம்பு தாகம் தீர விழைந்தக்கால், அம்பால் நீரூட்டித் தாகம் தீர்த்தவனின் தேர்ச் சாரதியை அன்பால் பரவுகிறான் புனிதநீர்ப் புதல்வன். தவித்த உயிர்த்தாகத்திற்குக் காதில் முதலில் விழுவதோ ஆறாவது கேள்வி. 'எதை ஜபித்தால் உயிர் முத்தி பெறலாகும்?' அவன் அளித்த விடையை அருந்த நமக்கு அளிக்கிறார் ஆதிசங்கரர். --
"நிலைப்பன திரிவன என்று உருவான உலகத்திற்கு உடையவன்; படைப்பின் கடவுளருக்கும் படைக்கும் பெருங்கடவுள்; இடம் காலம் பொருள் ஆகியவற்றால் அளவிட முடியாதவன்; புருஷோத்தமன், அவனையே சிறிதும் சோர்வில்லாமல் அவன் விஷயத்திலேயே முயலும் மனிதர் எல்லாவிதத் துக்கத்திலிருந்தும் நீங்கியவர்கள் ஆகிறார்கள்"
பராசர பட்டரின் உரை பேசுகிறது --
"திரிவன நிலைத்தன என்னும் ஜகத் என்பதற்கு உடையவனாகிய ஸ்வாமி; தேவர்களுக்கும் பெருந்தேவன்; அளவிடக்கூடாத பெருமையுள்ளவன்; தன்னையும் அளிக்கும் பரம வள்ளல்தன்மை கொண்டவன்; அத்தகைய அவரை ஆயிர நாமங்களால் எக்காலமும் முயன்று துதி செய்வதனால் மனிதர் எல்லாத் துன்பங்களையும் கடந்தவர் ஆவர்."
அம்பின் நுனி குளிக்க அம்பின் துளி குளிரக் கிடந்து உரைத்தவனின் அன்பு மொழி நம் வாழ்வின் வறட்சியைப் போக்காதோ! வீரர்களின் வாழ்க்கை வில், அம்பு, வேல், கவசம், போர், அழிவு, காப்பு என்றிருப்பது. வீரர்களின் பிதாமகன் இங்கு மரணத்தின் முற்றத்தில் கிடந்தபடி அழியா உயிருக்கு ஆக்கம் தேடுகிறான். இந்த உயிரை நலியும் அறியாமை, உலக ஆசைகள், மாயை என்னும் பகை முடிக்கும் ஆயுதத்தைப் பேரனுக்குப் போதிப்பதுபோல் உலகிற்கு அளிக்கிறான். உயிரின் இந்த ஓயாப் போரில் கைகண்ட ஆயுதம், வாய்கண்ட ஆயுதமாக இருக்கிறது. வினைகளின் கட்டை அவிழ்க்கும் மர்மம் பெயர்ச்சொல்லில் இருக்கிறது. அந்த ஆயுதத்தை தன் வீர வாழ்க்கையின் பழக்கத்தில் விளக்குகிறான்.
'தருமா! எந்த ஆயுதத்திற்கும் தேவதை உண்டு, பீஜம் உண்டு, சக்தி என்பது உண்டு, இதயம் என்பது உண்டு. அந்த ஆயுதத்திற்கான பிரயோஜனம் என்பதும் உண்டு. சாதாரணமாக போர் ஆயுதங்களுக்கு எஃகு என்பதை பீஜம் என்று கூறுவோம். ஏனெனில் காரணம் ஆகிய எஃகிலிருந்துதான் ஆயுதம் உருவாகிறது. ஆயுதத்தின் அழிக்கும் திறன் அதன் முனையின் கூர்மையில் இருக்கிறது என்ற காரணத்தால் ஆயுத முனையைச் சக்தி என்று சொல்வது வழக்கம். ஆயுதத்தின் மையப் பகுதியானது அதன் இயக்கம் வேகம் இலக்கு நாட்டம் முதலிய அம்சங்களுக்கு முக்கியமாக கேந்திரம் என்பதால் இதயம் என்று சொல்லப்படுகிறது. ஓர் ஆயுதம் என்றால் அது என்றும் வெறும் அலங்காரமாகவும் பொழுது போகவும் செய்யப்படுவது அன்று. ஆயுதம் என்று ஒன்று உருவானால் அதற்குப் பிரயோஜனம் என்று ஒன்று கண்டிப்பாக உண்டு. பொதுவாக நாம் அறிந்து பழகிய ஆயுதங்கள் சத்ரு வதம் என்னும் பயனை நோக்காக உடையன. ஆனால் தருமா! நான் சொல்லப்போகும் இந்த புருஷோத்தமனின் ஆயிர நாமங்கள் என்பதும் ஒரு வகையில் ஓர் ஆயுதம்தான். சத்ரு வதம் என்பதையும் நோக்காக உடையதுதான். இந்த ஆயுதத்திற்கும் கண்டறிந்த ரிஷிகள், தேவதை என்று உண்டு. இந்த தேகம் நிலையில்லாதது. அதை அழிக்க வரும் எதிரிகளே சத்ருக்கள் என்று ஆயுதங்களை எறிந்து அழிக்கத் தக்கவர்கள் என்றால், இந்த ஆத்மாவிற்கு எதிரிகள் ஆக வரும் அறியாமை, உலக ஆசைகளின் வேகம், மாயை, காமம், குரோதம் லோபம், மதம், மாச்சரியம், மோகம் ஆகிய சத்ரு கூட்டங்கள் மாயாவிகளிலும் மாயாவிகளான பகைகள்.
மற்ற புறப்பகைகள் உன் உடைமைகளைக் கைப்பற்றி, உன் இருப்பிடத்தைக் கைப்பற்றிப் பின் உன்னை அழிக்கும். ஆனால் இந்த கொடிய அகப்பகைகளோ முதலில் உன்னை அடிமைப் படுத்திப் பின்னர் உன் நிதய வாழ்வு, அளவிலா ஆநந்தம், எல்லையற்ற ஞானம் ஆகிய உன் சொந்த இயல்புகளாகிய செல்வங்களை உன்னைக் கொண்டே தங்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்துவிடும். இவற்றுக்கு அழிவு என்பது ஒரே ஆயுதத்தினால்தான். அதுதான் பகவானின் நாமஜபம். இந்த ஆயுதத்திற்கு யார் ரிஷி? சந்தஸ் என்ன? தேவதை எது? பீஜம் எது? சக்தி எது? இதயம் எது? பிரயோஜனம் எது? என்கிறாயா, சொல்கிறேன் கேள்.
வேத வியாசர்தாம் இதைக் கண்டறிந்த ரிஷி. பாதம் ஒன்றுக்கு எட்டு உயிரெழுத்துக்களால் ஆன அனுஷ்டுப் என்னும் சந்தம் தான் இதற்கு சந்தஸ். தேவதை யார் என்றால் பகவானான விஷ்ணு. பீஜம் என்பது அம்ருதாம்சூத்பவ: என்பது. தேவகீநந்தன: என்பது சக்தி. திரிஸாமா என்பது இதயம். அனைத்துக் குற்றங்களையும் களைந்து ஆழ்ந்த நிலைத்த சாந்தி என்பது இதன் பிரயோஜனம். பாற்கடலில் பள்ளிகொண்ட மாய மணாள நம்பியை தியானித்தபடியே இந்த ஆயுதத்தை நீ நாவினால் ஏவினாலே போதும், போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும். எனவே மனத்தால் ஓர்ந்து திடநம்பிக்கையுடன் செப்பு.' என்கிறான் பீஷ்மன் மரணத்தின் வாயிற்படியில் அமர்ந்தபடி. அவனைவிட வீரனும் இருந்ததில்லை. அவனுடைய சொற்களைவிட தீரமும் இருந்ததில்லை.
'வேதாந்தம் கற்பதால் என்ன பலன்?' என்ற கேள்விக்குப் பதிலாக விவேகாநந்தர் கூறிய கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது. வேதாந்தம் கற்றால் அனைவரும் வீடு வாசல் என்று எல்லாம் விட்டுவிட்டு ஆண்டிகளாகப் போய்விடுவார்களோ என்ற அச்சமும் பலர் நினைவில் தொனிப்பதுண்டு. ஆனால் விவேகாநந்தர் கூறுவது என்னவெனில் வேதாந்தம் கற்பதால் ஒரு மெக்கானிக் இன்னும் சிறந்த மெகானிக்காக ஆகிறான். ஒரு தொழிலதிபர் இன்னும் சிறந்த தொழிலதிபராக ஆகிறார். பேராசிரியர் ஒருவர் முன்னிலும் சிறந்த ஆசிரியராக ஆகிறார். அலுவலகத்தில் வேலை செய்பவர், பட்டறையில் வேலை செய்பவர், துறைமுகத்தில் வேலை செய்பவர், வண்டி ஓட்டுபவர் என்று அவரவர் தம்தம் சூழ்நிலையிலேயே முன்னிலும் மிகச் சிறந்து விளங்க ஆரம்பித்துவிடுகின்றனர் என்பது விவேகாநந்தரின் கருத்து. பீஷ்மரும் இதையே கூறுகிறார் ஆயிர நாமங்கள் ஓதுவோர் தம்தமக்கு விருப்பமான தொழில், படிப்பு, ஈடுபாடு என்ற சூழ்நிலைகளிலேயே மேலும் சிறந்து விளங்கத் தொடங்குகின்றனர் என்று. இந்த ஆயிர நாமங்களைக் கேட்பவனும் கீர்த்தனம் செய்பவனும் சரி அனைவருமே இம்மையிலும், மறுமையிலும் யாதொரு கெடுதலையும் அடைவதில்லை என்று அடித்துச் சொல்கிறார் பீஷ்மர், தாம் மரணம் அடையும் தருவாயிலும் கூட.
இன்று நேற்று அன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எத்தனை எத்தனை மக்கள் இந்த வார்த்தைகளில் மிகுந்த விசுவாசம் வைத்து இவற்றைக் கற்கின்றனர்! 'ரோகார்த்தோ முச்யதே ரோகாத்' அதாவது ரோகம் ஆகிய வியாதியினின்று விடுதலை அடைய வேண்டுபவன் நோயினின்றும் விடுதலை அடைகிறான் என்ற சொல் தொடரின் 'ரோகார்த்த:' என்பது ஒரு பழைய கணித முறைப்படி எண்ணினால் 632 என்ற எண்ணிக்கையைக் கூறும். அதாவது கடபயாதி சங்க்யை - என்ற கணக்கு முறையின் படி இவ்வாறு 'ரோகார்த்த:' என்ற சொல்லுக்கு 632 என்ற எண்ணிக்கை வருகிறதாம். எனவே பிணியாளர்கள் 632 தடவை இதை ஜபித்து ஹோமம் செய்வது உண்டென்றும், இது கேரள தேசத்தில் நடக்கிறது என்றும் 1928ல் ஸ்ரீ மணலூர் எம் வி ராமானுஜாசாரியார் (மஹாபாரதம் முழுதும் தமிழில் கொண்டுவந்த மகான்) எழுதுகிறார். அன்றைய நாளில் விஜ்ஞாந சிந்தாமணி என்னும் இதழுக்கு ஆசிரியராக இருந்த வைத்ய சாத்திர நிபுணரான புன்னசேரி ப்ரஹ்மஸ்ரீ நீலகண்ட சர்மா தமக்குச் சொன்னதாகவும் எழுதுகிறார்.
கீழ்க்கண்ட 3 செய்யுட்களும் எனக்குப் படிக்கும்தோறும் கேட்கும்தோறும் கண்களை நனைத்துவிடுகின்றன.
துர்க்காணி அதிதரதி ஆசு: புருஷ: ப்ருஷோத்தமம்|
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நிதயம் பக்தி ஸமந்வித:||
வாசுதேவ ஆச்ரயோ மர்த்த்யோ வாசுதேவ பராயண:|
ஸர்வ பாப விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம சநாதனம்||
நவாசுதேவ பக்தாநாம் அசுபம் வித்யதே க்வசித்|
ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம் நைவ உபஜாயதே||
இந்த மூன்றுக்கான தமிழாக்கம் --
பத்தியுடன் என்றும் பொருந்தி
பகவானின் நாமங்கள் ஆயிரமும்
போற்றுபவர் கடந்திடுவர் விரைவாகப்
பொல்லாத துன்பங்கள் எவற்றையுமே.
மரிக்கும் மனிதர் வாசுதேவனை அண்டி
வாசுதேவனையே புகலாகக்கொண்டு வழுத்தினால்
பாபங்கள் அனைத்தினும் விடுபட்ட தூய ஆன்மாவாய்
நிலையான பரம்பொருளில் சென்று சேர்வர்
வாசுதேவ பக்தர்களுக்கு என்றும்
சிறிதும் அசுபம் என்பது ஏற்படுவதில்லை
பிறப்பு மரணம் முதுமை வியாதி பயம்
ஒரு நாளும் உண்டாவதுமில்லை.
யாருக்கு உண்மையில் புருஷோத்தமனிடம் அந்தத் தூய பக்தி இருக்கிறது? இதைக் கண்டுபிடிக்க ஒரு சூத்திரம் சொல்கிறார் பீஷ்மர். 'யாரிடம் கோபம் இல்லையோ, பகையில்லையோ, பொருளாசை இல்லையோ, கெட்ட எண்ணம் இல்லையோ அவர்கள் புருஷோத்தமனின் பக்தர்கள் என்று உணரலாம். யாரும் சொல்ல வேண்டியதில்லை.'
***
No comments:
Post a Comment