Monday, December 23, 2019

கவிதையின் ஒலிப்பண்பு

கவிதை என்பது ஒலிப்பண்பைத் துறந்துவிட்ட வெற்றிடம் அன்று. அனைத்துப் பண்புகளையும் தன்னகத்தே செறித்து தான் அவற்றிலும் மிக்கதாய் ஓர் சுய வெளி காட்டும் அழகு அல்லவோ கவிதை!

ஓர் நாடு. பாண்டவரின் இராசதானி. மாபாரதம் முடிந்த பிற்றைய காலம். தரும புத்திரன் ஆட்சி நடக்கிறது. - இந்தச் செய்தியைக் காலக் குரலாய் பேரி கொட்டுவோர் செயலில் வைக்கின்றார் கவிஞர். எப்படி? வெறுமனே செய்தியாக அன்றி, கொட்டு பேரியின் முழக்கும், தளுக்கும், மூரித்த பிலுக்கும் சொற்கள் உறழ்ந்து குழைந்து கெழுமி எழும் வாய்ப்பில் வைத்துக் காட்டுகின்றார்.

அதைப் படிக்கும் போது முதலில் செவிதான் அந்த பேரி முழக்கத்தைக் காண்கிறது. பெரிய பேரி முகம். வந்து முத்தமிட்டு எழுந்து படியும் கோல்களின் காட்சியும், அதன் த்வனிப் ப்ரவாகங்களாய்ப் பிறங்கும் உறுமல்களும் கேவல்களும்....... படித்தாலே பாரத காலத்திற்குக் காலக் கப்பல் கொண்டு போய் இறக்கி விடுகிறது.

கொட்டு பேரி கொட்டு பேரி
கொட்டு பேரி கொட்டடா !
கொட்டு பேரி கொட்டு பேரி
கொட்டு பேரி கொட்டடா!

பேரி முழங்க ஆரம்பித்து விட்டதா நம் செவிகளில்? அடுத்து...

எட்டுகின்ற திசைகள் எட்டும்
எதிரிலா வலத்தினால்

கொட்டு பேரி கொட்டு பேரி
கொட்டு பேரி கொட்டடா!

மட்டிலா புகழ்மணக்க
மண்டலத்து மன்னர்கள்
கொட்டுகின்ற திறைகள் கொண்டு
குடை நிழற்றும் கோமகன்

கோல்கள் அடித்துக் கொண்டே இருந்தால் போதுமா கார்வைகள், உறழ் ஓசைகள், நிரல்தெரி நிமிட்டல்கள் என்னும் ட்ரம் பீட்டர்ஸின் சாகசங்கள் பலவும் உண்டே! அவற்றையும் தமிழ்க் கவிதை ‘ஒலிபலிக்குமா?’ ஏன் மாட்டாது.? வல்லார் வாய்மாட்டே வாக்கின் வாழ்ச்சியன்றோ!

தருமமே தழைத்துயர்ந்த
தருமபூபன் ஆட்சியில்
பெருமைகொண்ட நாளிதென்று
பெரிய பெரி கொட்டடா!

கொட்டுபேரி கொட்டுபேரி
கொட்டுபேரி கொட்டடா !

நெடுநேரம் காதுகளில் பேரியின் முழக்கம் கார்வைகள் கோலின் சிவிறல்கள் குற்றொலிக் குமிழ்கள் நுரையிட்டுப் பொங்கிப் பையவே ஓயும்படியான மாயம் கவிஞர் திருலோக சீதாராம் அவர்களின் வரிகளில் கப்பிக் கிடக்கிறது என்பது அனுபவ சித்தம் அன்றோ!

***

No comments:

Post a Comment