Thursday, December 19, 2019

எப்படி வாழ்வது?

எப்படி வாழ்வது? கைமாத்தாகப் பணம் வாங்கிக் கல்யாணம் முடித்துக் குடும்பம் ஒரு நிலைக்கு வருவதற்குள் படாத பாடெல்லாம் பட்டு, ஏதோ ஒரு சமயம் வந்த பணத்தில் ஒதுக்கிப் பட்ட கடனை அடைத்துவிட்டு நிம்மதி அடையும் நண்பர்கள்தாம் எத்தனை பேர்! பிறந்தது முதல் பண நிழலில் வாசம் என்ற நண்பர்களும் உண்டு. வரும் வரையில் காத்திருந்து விடை பெறுவதுபோல் செல்வம் ஏக, வந்த விருந்து நயப்பதுபோல் வறுமை வரவேற்கும் நிலையும் எத்தனை பேருக்கு உண்டு!

காதல் கனிந்து கூவும் பிஞ்சாகிக் காய்ந்திடும் வாழ்விலும் இலைமறை நிழலாகி இன்பம் பெருகும் நிம்மதியும் உண்டு சிலருக்கு என்றாலும், காதலும் கசந்து, முந்தைய மன அமைதியும் போக, முற்றாத இன்ப வாழ்வின் முறிந்த கனவுகளிடை யாமப் பொழுதுகளாய் இலையுதிர் காலமாய்ப் போகும் வாழ்வும் சிலருக்கு. இவர்கள் அனைவரையும் கேட்டால் ஒரு விஷயத்தில் ஒத்துப்போகக்கூடும். அது ‘எப்படி வாழ்வது?’ என்ற கேள்வி. என்னன்னவோ செய்து பார்க்கிறோம். துணிந்து முடிக்கிறோம். ஆனால் கடைசியில் இப்படித்தான் வாழும் வழி -- தெரிகிறதா? --- ம்ம் அது தெரிந்தால் ஏன் இப்படி? என்ற இழுவைதான் மிச்சம்.

‘செப்படி வித்தைகள் செய்த பின்னும் --கோடி
சென்மம் எடுத்துச் சிறந்த பின்னும்
எப்படி வாழ்வது என்பதே இங்கு
யார்க்கும் விளங்காது அதிசயமே.’

என்று வியக்கிறார் திருலோக சீதாராம் என்னும் கவிஞர். எங்கள் திருச்சிக் காரர். இந்தத் தத்துவச் சிந்தனை திருச்சி மண்ணில் கூடப் பிறப்பது போலும். ஒரு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அதே திருச்சியில் ஒருவர் சொல்கிறார் பாருங்கள்.

‘ஒருவர் எவ்வளவு ஆசை வேண்டுமானாலும் படலாம். அதற்கு அளவு ஏதும் இல்லை. பெரும் பன்னாட்டு நிறுவனத்தின் ஏக போக அதிபதியாய் இருப்பார். ஆனால் அவதி அவதி என்று எங்கோ விமானத்தைத் தவறவிட்டுச் சிகரெட்டை ஊதி ஊதி அணைப்பார். இவர் எங்கு போய் என்ன சாதித்து என்ன அடைய வேண்டும்? உங்களுக்கு என்ன சார் தெரியும் என் வேதனை?

‘ஆசைக்கோர் அளவில்லை.
அகிலம் எல்லாம் கட்டி ஆளினும்
கடல் மீதிலே ஆணை செலவே நினைவர்;
அளகேசன் நிகராக
அம்பொன் மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;

நெடுநாள் இருந்த பேரும்
நிலையாகவே இனும்
காயகற்பம் தேடி நெஞ்சு புண்ணாவர்;

எல்லாம் ..
யோசிக்கும் வேளையில்
பசிதீர உண்பதும்
உறங்குவதும் ஆக முடியும்;’

இந்தப் போடு போட்டவர் யாரென்று பார்க்கிறீர்களா? சிரகிரி விளங்க வரு தட்சிணாமூர்த்தியைப் பாடிய ஸ்ரீதாயுமானவர்தான். ஒரே வரியில் அத்தனையையும் மூடிவிட்டார்.

‘யோசிக்கும் வேளையில்
பசி தீர உண்பதும்
உறங்குவதும் ஆக முடியும்’

நினைச்சா என்ன டெரிபிள் கருத்து!!! இந்தப் படு யதார்த்தமான அடித்தரைத்தனமான இந்தக் கருத்தை இன்றைய இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் நிஜத்தின் வெப்பம் தாங்காதவன் எழுத முடியும். ஆனால் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு திருச்சிக்காரன் தொட்டுவிட்டானே, மெய்மையின் இயல் முரணின் ஏளன உச்சத்தை!!!

நீ என்ன வேண்டுமென்றாலும் செய். என்ன குதியாட்டம் போட்டாலும் போடு. நோட்டுக் கட்டுலயே கட்டில் போட்டுப் படுத்துப் புரளு. டாய்லட்டு சிங்கு முதற்கொண்டு தங்கத்தில் செய்து வைத்துக் கொண்டாலும்,

’யோசிக்கும் வேளையில்
பசிதீர உண்பதும்
உறங்குவதும் ஆக முடியும்’

சரி என்னதான் செய்வது? ஸ்ரீதாயுமானவர் சொல்றது நமக்கு இன்று விளங்கலாம். இல்லை இன்னும் சில காலம் கழித்து விளங்கினாலும் விளங்கலாம்.

‘உள்ளதே போதும்
நான் நான் எனக் குளறியே
ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல்
மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய்;
பார்க்கும் இடம் எங்கும்
ஒரு நீக்கம் அற நிறைகின்ற
பரிபூரணானந்தமே!’

ஆம். எப்படி வாழ்வது என்பதே இங்கு யார்க்கும் விளங்காது அதிசயமே !

***

No comments:

Post a Comment