Tuesday, December 24, 2019

தமிழும் வடமொழியும் போற்றும் ஸ்ரீவைஷ்ணவம்

திருமால் நெறியின் பெரியவர்கள் வஞ்ச முக்குறும்புகளை அகற்றிய பெற்றியராய்த் திகழ்ந்ததோடன்றியில், வடமொழி, தமிழ் என்ற இரு மொழிகளையும் இருகண்களாகப் போற்றி நிறைவாழ்வு வாழ்ந்தமைதான் பெரிதும் காலக்கலங்கரை விளக்காக இருக்கிறது. காரணம் அன்றைய அனைத்திந்திய சூழல் வடமொழியின் உற்சாகம்தான். ஸ்ரீராமானுஜர் பிரஹ்ம சூத்திரங்களுக்குத் தாம் பாஷ்யம் இயற்ற வேண்டி முன்னோர் உரைகளைக் காணவேண்டிச் செல்ல வேண்டியிருந்ததுவும் காஷ்மீர தேசத்திற்கேதான். - போதாயன விருத்திக்காக. எங்கும் புதிய சித்தாந்தம் என்பதை நிறுவ வடமொழித் திறமையே சால வேண்டுவதாயிருந்தது. தமிழ் நாட்டில் இருந்த பல வித்வான்களும் தம் கருத்துகளை அனைத்து பாரத வித்வத் சமூகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிச் சம்ஸ்க்ருதத்தில் வெளியிட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த மகனீயர்களின் பெருங்கூட்டம் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக எப்படித் தமிழ் தமிழ் என்று ஆழ்வார்களின் திவ்ய நன்மொழிகளுக்கு மிக மிக உயர்ந்த முக்கியத்வத்தைக் கொடுத்தார்கள்? அது மட்டுமின்றி வடமொழி அறிவுகள் அனைத்தையும் ஆழ்வார்களின் தீந்தமிழ் ஈரச்சொற்களுக்குச் சேவகம் பண்ண எப்படிப் பொங்கும் ஊக்கத்துடன் நியமித்து வைத்தார்கள்?

ஸ்ரீராமானுஜர் பாஞ்சராத்திர ஆகமங்களைக் கோயில்களில் பிரதானமான சாஸ்திரங்களாய் ஆக்க முனைந்தார். ஆழ்வார் பாடல்களைக் கோயிலில் முழங்கச் செய்ய வேண்டும். அதற்குப் பாஞ்சராத்திர ஆகமங்கள் வேண்டும். அந்த மாமுனிவனின் தெய்வத்தமிழ்த் தாகம் மிகவும் வியப்பான ஒன்று. ப்ரஹ்மசூத்ரங்களுக்கு அவர் இயற்றியது ஸ்ரீபாஷ்யம். சூத்ரங்களின் பொருளை அவர் எந்தத் துணை கொண்டு ஒன்றிற்கொன்று பொருந்தவிட்டு நிர்வாகம் செய்து ஒருங்கவிட்டார்?

விடை தருகிறார் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் குமாரர்களில் ஒருவரும், பிள்ளை லோகாசார்யரின் திருத்தம்பியுமான ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார். "பாஷ்யகாரர் இதுகொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்கவிடுவர்." எதுகொண்டு? ஸ்ரீஸ்ரீ மணவாளமாமுனிகளின் வியாக்கியானம் விளக்குகிறது.

"அதாவது -- பாஷ்யகாரர் ஸ்ரீபாஷ்யம் பண்ணியருளும் போது ஸூத்ரவாக்யங்களில் ஸந்திக்தங்களான அர்த்தங்கள் எல்லாம் இப்பிரபந்தத்தில் (திருவாய்மொழியில்) ஸூக்திகளைக் கொண்டு நிர்ணயித்து ஒருங்கவிட்டருளுவர் என்கை"

வடமொழி வேதாந்த நூற்பாக்களின் பொருளை விளக்குவதற்கு எதைக் கொண்டு விளக்கம் தருகிறார் ஸ்ரீராமானுஜர்? நம்மாழ்வாரின் திருவாய்மொழி கொண்டு. அதைச் செய்தது மட்டுமன்று. முழு சம்ப்ரதாயமே அவர் அவ்வாறு செய்தார் என்பதை நினைவில் போற்றி வழிவழியாக எழுத்துப்படுத்தி வைக்கும் என்றால் இதற்கு என் சொல்வது? ’ந பூதோ ந பவிஷ்யதி’ -- முன்னும் இருந்ததில்லை; இனியும் இருக்கப் போவதில்லை.

சரி. ஸ்ரீராமானுஜர் தானாக ஏதோ செய்தாரா என்றால் அவர் இவ்வாறு செய்ததற்கு அவருக்கு வழிகாட்டியவர் அவருடைய ஆசிரியர்க்கு ஆசிரியரான ஸ்ரீஆளவந்தார். "விதயச்ச வைதிகாஸ் த்வதீய கம்பீர மநோநுஸாரிண:" -- இவ்வாழ்வார் போல்வார் நினைவை சாஸ்த்ரங்கள்தாம் பின்செல்லும் -- என்பது ஆளவந்தார் அருளிச்செய்த வாக்கு. தெய்வப்புலவன் தீந்தமிழ் கொண்டு வடமொழி மறைக்கு விளக்கம் கண்டார் என்றால், அதனோடும் நில்லாது நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு வடமொழி நூற்கடல் அனைத்தையும் கொண்டு பெருப்பெருத்த சம்ஸ்க்ருத வித்வான்களைப் பணித்து ஆழ்வாரின் தமிழுக்குத் தொண்டு செய்யவைத்து நெடும் உரைமரபையே தோற்றுவிக்கிறார்.

ஆழ்வாரின் பாடல்கள் எவர் ஒருவராலும் முழு ஆழமும் காண அரிது என்று தாமேகூட அதற்கு உரையிட்டால் எங்கேனும் பின்வருவோர் அதற்கு மேல் ஆழ்வாரின் பாடல்களுக்குப் பொருள் இல்லை போலும் என எண்ணிப் பேதைமைப்படுவர் என்று அஞ்சி, தாம் எழுதாது மற்றவர்களைக் கொண்டு எழுதவைக்கிறார். அவர்க்கு அடுத்து வந்தோரெல்லாம் சொல்லிவைத்தது போல் இந்தத் தமிழ் வேதத்தைப் பேணுதலே தம் தலையாய கடன் என்று எண்ணி வாழ்கின்றனர். மாறன் மறையை ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோம் என்று கூறுகிறார் ஸ்ரீமத் வேதாந்த தேசிகர்.

ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளின் ஆசிரியரான திருவாய்மொழிப்பிள்ளை ஸ்ரீமாமுனிகளிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறார், ’வடமொழி வேதாந்தம் கற்று எங்கும் வாதம் பிரதிவாதம் என்று வித்வத் விஜயமாகப் பொழுதைக் கழிக்காமல் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் திருவாய்மொழியாகவே கோயில் ஆகிய ஸ்ரீரங்கமே நிரந்தர வாசமாகத் தொண்டு புரிவேன்’ என்று. எனக்கு ஒன்று புரியவில்லை. ஏதோ ஒரு வித்வான், மகனீயர் இவ்வாறு தமிழ்க்காதல் பிடித்து அலைந்தால் புரிந்துகொள்ள முடியும். இப்படி ஒரு வழிவழியான குழாமாகவேவா, அதுவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ், தமிழ், என்று நம்மாழ்வாரையே தம் பிரபந்நகுலத்திற்குத் தலைவராக ஆக்கி, அவர் வாயது தங்கள் வாழ்வாக, வடமொழி நூற்கடலைக் கரைகண்டவர்கள் இப்படித் தீந்தமிழின்பால் காதலாகிக் கசிந்து கன்ணீர் மல்கும் விந்தையைப் புரிந்த நாதமுனிகள், ஸ்ரீஆளவந்தார், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவேதாந்த தேசிகர், ஸ்ரீமணவாள மாமுனிகள் நமக்கும் அந்த மனப்பாங்கை அருளட்டும்.

***

No comments:

Post a Comment