Thursday, December 19, 2019

பரம்பொருளும் அவதாரமும்

பரம்பொருள் என்றால் பரம் + பொருள். பரவஸ்து என்பதன் தமிழ். வஸ்துத்வம் என்றால் என்ன? என்பது துறை செறிந்த மெய்யியலில் பெரும் கேள்வி. நாம ரூப பா(4)க்த்வம் எனப்படும் பெயர் உருவம் என்ற தனிப்பட்ட மெய்மையை அடையும் ஒன்றிற்கு வஸ்து என்று பெயர்.

ஒவ்வொரு வஸ்துவுக்கும் அறுதியிடும் எல்லைப் பண்புகள் எனப்படும் பரிச்சேதம் என்பது உண்டு. தற்கால கணித விஞ்ஞானத்தில் boundary conditions என்பார்கள். இடம் எனப்படும் தேசம், காலம், வஸ்து எனப்படும் பொருள்தன்மை ஆகியவற்றின் அடிப்படையாக பரிச்சேதங்கள் மூன்றைச் சொல்வார்கள். இடம் அல்லது தேசம் அடிப்படையாக வரும் பரிச்சேதம் தேச பரிச்சேதம். காலம் அடிப்படையாக வரும் பரிச்சேதம் கால பரிச்சேதம். வஸ்து என்ற விதத்தில் வருவது வஸ்து பரிச்சேதம்.

ஒரு பொருள் ஒரு இடத்தில் இருக்கும் போது அதே நேரத்தில் மற்றொரு இடத்தில் இருக்காது. அந்த வஸ்து தேசம் என்பதால் பரிச்சேதிக்கப்பட்டது. எனவே தேச பரிச்சேதம். பரிச்சேதம் என்றால் பொருள் எல்லையடக்கம்.

ஒரு பொருள் ஒரு காலத்தில் இருக்கும் மற்ற ஒரு காலத்தில் இல்லாமல் போகும். ஒன்றுமில்லை. நாமே சாட்டில் பேசுகிறோம் அமெரிக்காவில் இருப்பவருடன். நமக்கு நள்ளிரவில் நாம் பேசினால் அதே நேரத்தில் அவர்களுக்குக் காலை. ஒரே நாம் நம் நள்ளிரவிலும் அவர்களின் நள்ளிரவிலும் ஒரே சமயத்தில் பேச முடியாது. ஒரு பொருள் ஒரு காலத்தில் இருந்து ஒரு காலத்தில் இல்லாமல் போகும். காலத்தால் எல்லையடக்கம் படும் இந்த பரிச்சேதம் காலபரிச்சேதம்.

ஒரு வஸ்து ஒரே சமயத்தில் மற்ற வஸ்துவாக இருக்க முடியாது. தான் ஏதேனும் ஒரு வஸ்துவாக இருந்தால் அதனாலேயே அது மற்ற வஸ்துக்களாய் இருக்க முடியாத எல்லையடக்கத்திற்கு உள்ளாகி விடுகிறது. இந்த பரிச்சேதம் வஸ்து பரிச்சேதம். மூன்று வித பரிச்சேதங்களான இவற்றிற்குப் பெயர் த்ரிவித பரிச்சேதங்கள் என்பது. ஸர்வ வஸ்துக்களும் இவ்வாறு த்ரிவித பரிச்சேத சஹிதமாகவே இருப்பன. இந்த த்ரிவித பரிச்சேதங்கள் அற்ற வஸ்து ஒன்று உண்டா?

அதாவது தேசத்தால், காலத்தால், வஸ்துத்தன்மையால் எல்லையடக்கம் அடைந்துவிடாத வஸ்து ஒன்று உண்டென்றால் அந்த வஸ்து யாது? அதுதான் பரவஸ்து. அதாவது பரம்பொருள். அதற்குப் பெயரே த்ரிவித பரிச்சேத ராஹித்யம் என்பது. ராஹித்யம் என்பது ரஹிதமாய் இருப்பது, ரஹிதம் -- அற்று இருப்பது, இல்லாமல் இருப்பது. த்ரிவித பரிச்சேதங்கள் இல்லாமல் இருக்கும் வஸ்து பரம்பொருள்.

அந்தப் பரம்பொருள் உலகில் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்து வருவது அவதாரம். அந்தப் பிறப்பு கர்மங்களின் காரணமாக ஏற்படாமல் கருணையின் ப்ரபாவத்தால் ஏற்படும் பிறப்பு. ஏதோ ஒரு காரணத்தால் ராஜகுமாரனுக்குத் தண்டனை. சிறையில் இருக்கிறான். அவனைப் பார்த்து ஆறுதல் சொல்லித் தேற்றிவர அரசனும் சிறைக்குள் போகிறான். அரசன் போனது கருணையால். ராஜகுமாரன் போனது கர்மத்தால்.(ஸ்ரீராமகிருஷ்ணரின் பொன்மொழி) பரம்பொருள் இவ்வாறு மன்னுயிர்க் குலம் வாழ இன்கருணை பூண்டு எடுக்கும் அவதாரம் சற்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் என்கின்றன சாத்திரங்கள். ராஜவிதயா ராஜகுஹ்யம். இதுவே விசித்திரமானது.

இதனிலும் விசித்திரம் அவனைப் பற்றி உரைக்கும் சாத்திரமும் அவன் எடுக்கும் அவதாரத்திற்கேற்பத் தானும் அவதாரம் எடுக்கிறதாம். பிரமாணம் எனற சாத்திரத்தால் மட்டுமே உணரக் கிடைப்பவன் அவன். அவனுக்குப் பெயர் பிரமேயம், பிரமாணத்தால் அறியப்படும் பெரும்பொருளாக இருப்பவன் என்பது பிரமேயம்.

பிரமேயமான அவன் அவதாரம் செய்வது போலவே பிரமாணமான சாத்திரமும் அவதாரம் செய்கிறது என்கிறது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம். வேதங்களால் அறியப்படும் பரமபுருஷன் தசரதனின் மகனாக அவதாரம் செய்த பொழுது அந்த வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது. அந்த பரமபுருஷனாகிய பரவாஸுதேவன் வ்யுஹ மூர்த்தியாக விஷ்ணுவாக அவதாரம் செய்த பொழுது அந்த சாத்திரம் ஆகமங்களாக அவதாரம் செய்தது. அந்தப் பரம்பொருள் பல யோனிகளிலும் பிறந்து நடையாடிய பொழுது சாத்திரமும் இதிகாச புராணங்களாய் அவதாரம் செய்தது. அதே பரம்பொருள் பக்தருக்கும், பின்வரும் மனித குலத்திற்கும் என்றென்றும் கண்காண வேண்டிக் கோயில்களில் அர்ச்சா ரூபமாக அவதாரம் செய்த பொழுது அந்தச் சாத்திரமும் திவ்ய பிரபந்தங்களாய் அவதாரம் செய்தது. இது பிள்ளை லோகாசாரியர் கூறும் கருத்து. என்ன ஒரு விசித்திரமான அவதாரம் !

***

No comments:

Post a Comment