Monday, December 30, 2019

திவ்ய ப்ரபந்தம் ஏன் தோன்றியது?

சிருஷ்டி ஏன் நடைபெறுகிறது? உலகம் ஏன் உண்டானது? உயிர்கள் ஏன் பிறக்கின்றன? நமக்கு வாழ்க்கை என்பது ஏற்பட்டிருக்கிறது. அந்த வாழ்க்கையின் பொருள் என்ன? இது போன்ற கேள்விகளுக்கு உலகில் காலம் காலமாகப் பலரும் பல விதங்களில் விளக்கம் தந்திருக்கிறார்கள். இந்த விளக்கங்களைப் படிக்கும் பொழுது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ரசமானவை. நல்ல தெளிவுகளைப் பல பெரியோர்களும் கூறியிருக்கும் விளக்கங்களிலிருந்து நாம் பெறமுடியும். வாழ்வின் பொருள் என்ன என்பதைப் பலவேறு விதத்தில் பெரியோர்கள் மனித குலத்திற்கு விளக்கமாகத் தந்திருக்கிறார்கள் என்பது நல்ல விஷயம்.

பின்பழகிய பெருமாள் ஜீயர் என்னும் மகான் ஸ்வாமி நம்பிள்ளையின் சீடராக இருந்தவர். நம்பிள்ளையின்பால் அளவுகடந்த பக்தி கொண்டவர். ஸ்ரீவைஷ்ணவ சமுதாயத்திற்கும், பக்த உலகத்திற்கும் ஒருங்கே மிகப்பெரும் நன்மை புரிந்தவர் ஜீயர். காரணம் என்னவெனில் அனைத்து ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஆகியோருடைய சரிதாம்சங்களை ஒருங்கு திரட்டி ‘குருபரம்பரா ப்ரபாவம் என்னும் நூலை அருளியுள்ளார். இன்றும் பக்த சமுதாயத்தின் கண்கண்ட ஆன்ம சாதனையாகத் திகழ்வது இந்த நூலைத் தொடர்ந்து வாசித்தலும், கேட்டலும் ஆகும். ஒரு நூலை வாசித்தலே மிகச் சிறந்த ஆன்ம சாதனையாக ஆகிவிட முடியுமா என்று ஐயுறுபவர்கள் தெளிவடைய ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பது இந்த மஹா கிரந்தம் ஆகும்.

இந்த நூலோடு மற்ற ஓர் அரிய நூலையும் அருளி பக்த உலகத்திற்குப் பேருபகாரம் புரிந்தவரும் இந்த ஜீயரே ஆவர். அந்த கிரந்தம்தான் வார்த்தாமாலை என்பதாகும். ஆசாரியர்கள் பலரும் பல காலங்களில் நடைமுறை நிகழ்ச்சிகளின் இடையில், பரஸ்பரப் பேச்சுகளினிடையில், ஒரு சில சூழ்நிலைகளில் கூறியருளிய வார்த்தைகள், கருத்துகள் ஆகியவற்றைப் பல சமயம் அவற்றின் சூழ்நிலைக் குறிப்புகளையும் விடாமல் பதிவு செய்திருக்கும் அரும்பணி இந்த நூலாகும். இவ்வாறு பெரியோர்களின் சரிதங்களையும், அவர்கள் யதேச்சையாகக் கூறியருளிய பொன்மொழிகளையும் பிற்காலத்தவர் இழந்துவிடாமல் பதிந்துவைக்க எண்ணம் எப்படி அந்தக் காலத்தில் பின்பழகியபெருமாள் ஜீயருக்கு ஏற்பட்டது என்பது நினைத்தால் வியப்பு தரும் ஒன்றாகும்.

திருக்கலிகன்றிதாஸர் என்னும் பெயருடைய ஸ்வாமி நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமானவர், மனிதர்களுக்கு அறியாதன அறிவிக்கும் உத்தமர், படிப்பவர்கள் அனைவரும் தமக்குக் குருவாகக் கருதி வணங்கும் தன்மையர் - என்று பின்பழகியபெருமாள் ஜீயரைப் பற்றிக் கூறுகிறது அவரைப் பற்றிய தனியன் சுலோகம்.

கலித்வம்ஸி தயாபாத்ரம், பச்சாத்ஸுந்தர ஸம்ஜ்ஞிகம்|
அஜ்ஞாதஜ்ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேசிகம் ஆச்ரயே ||

ஆம். அப்படித்தானே இவருடைய நூல்கள் இல்லையென்றால் ஆழ்வார்கள், ஆசாரியர்களின் சரிதங்களில் நடந்த பல விஷயங்களையும், அவர்களுடைய பொன்னே போன்ற பாவன மொழிகளையும் எப்படி நாம் அறிய முடியும்?

பின்பழகியபெருமாள் ஜீயருக்கு ஸ்வாமி நம்பிள்ளைபால் இருந்த ஆசார்ய பக்திதான் எத்தகையது என்பதை நாம் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகளின் வாக்கால் உணர முடிகிறது.

’பின்பழக ராம்பெருமாள் சீயர் பெருந்திவத்தின்
அன்பதுவு மற்றுமிக்க ஆசையினால் - நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள்செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்.’

ஜீயர் அருளிச்செய்த குருபரம்பரா ப்ரபாவம் என்னும் நூலில் அவர் நூலின் தொடக்கமாகத் தந்திருக்கும் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஏனெனில் மேலே முதலில் குறித்த சிருஷ்டி, வாழ்க்கையின் பொருள் போன்ற பல உலக முக்கியமான கேள்விகளுக்கு ஸ்ரீவைஷ்ணவ நன்னெறி எத்தகைய விளக்கம் தந்திருக்கிறது என்பதை மிகவும் சாரமாக ஜீயர் தருகின்றார்.

உயிர்கள் பெருத்த அறியாமை இருளில் முழுகிக் கிடக்கின்றன சிருஷ்டிக்கு முந்தைய கணம்வரையில். சித் வஸ்து என்னும் உயிருக்கும், ஜட வஸ்துவுக்கும் எந்த வேறுபாடும் இன்றியே அவற்றின் கலந்து முயங்கிய நிலை உள்ளது. இத்தகைய நிலையில் இருக்கும் ஜீவன் தன்னுடைய அறியாமை ஆகிய தமஸ் நீங்கி மறைப்புண்ட தன் இயல்பாகிய ஞானம் ஒளிரப் பெறவேண்டும் என்றால் அந்த ஜீவனுக்கு பிறவி, கருவி கரணங்கள், வாழ்க்கை என்பன அமைய வேண்டும். அப்பொழுதுதான் ஒரு ஜீவன் தன் கர்மங்களை நீக்கிக் கொள்ள முடியும். ஆனால் உதவிக்காக தந்த பிறவியை உபத்திரவமாக ஆக்கிக் கொள்கிறது ஜீவன். விவேகத்திற்கு உதவியாகத் தந்த புத்தியைக் கத்தி போல் ஆக்கித் தன்னையே அழித்துக் கொள்கிறது. இந்த முதலில் தந்த உதவி பயன்படவில்லை என்றுதான் இரண்டாம் கட்ட உதவியாக சாத்திரங்களைத் தருகிறான் பகவான். அதுவும் பயன்படவில்லை என்றதும், தானே அவதாரங்களாய் வந்து ஜீவனை மீட்க முயல்கிறான். அப்பொழுதும் பயன்படாமல் போகவே ஆழ்வார்களைப் பிறக்கச் செய்தான் என்று ஜீயர் கூறும் விளக்கத்தைக் கருத்தை மட்டும் ஒரு கோவையாக ஆக்கித் தருகிறேன்.

- பகவான், உயர்ந்த ஆனந்தமயமான உலகத்தில், பரம்பொருளாகிய தனக்கு முற்றிலும் பயன்கருதா கைங்கரியம் ஆகிய ஈடுஇணையில்லாத ஆனந்தமயமான உயர்ந்த பேற்றினை, நித்ய முக்தர்கள், முக்தர்கள் இவர்கள் ஒப்ப, இவர்களோடு சேர்ந்து பெறுவதற்கு அனைத்து உரிமையும் உள்ளவர்களாய் இருந்தும் கர்மங்களில் கட்டுண்ட ஜீவர்கள் அந்தோ இழக்கின்றார்களே என்று அவன் துயரம் அடைகிறான்.

பத்த (baddha) ஜீவர்களோ, அதாவது கட்டுண்ட ஜீவர்களோ கர்மங்கள் கழிந்தால்தான் தங்களுக்கு உரித்தான அந்த உயர்ந்த நற்பேற்றைப் பெற முடியும். அவர்கள் கர்ம பந்தங்களினின்றும் விடுபட வேண்டுமெனில் ஜீவர்களுக்கு கரணம், களேபரம், உலகில் பிறப்பு முதலியன தந்து, தங்கள் கர்மத் தொகுதியைக் கழித்துக் கொள்வதற்கு வாய்ப்பு நல்க வேண்டும். மிகுந்த கருணையினால் அத்தகைய வாய்ப்பை சர்வேச்வரன் தந்தான். அசித்தோடு சூக்ஷுமமாகச் சிறிதும் வேறுபாடு தோன்றாமல் கலசிக் கிடந்த ஜீவர்களுக்குக் கரணம் ஆகிய இந்திரியங்கள், களேபரம் ஆகிய சரீரங்கள், போகங்கள் அனுபவிக்க, கர்மங்கள் புரியத் தகுந்த சூழ்நிலைகளாகப் பிறப்புகள், அதற்கேற்ற உலகம் எல்லாவற்றையும் சிருஷ்டி செய்தான். அவன் சிருஷ்டி செய்த நோக்கமாவது கரண களேபரங்களைக் கொண்டு ஜீவர்கள் தம் கர்மங்களைப் போக்கி, பரம்பொருளாகிய தன்னுடைய திருவடிகளைத் தொழுவார்கள் என்ற நோக்கத்தில் இவற்றைச் செய்தான்.

ஆனால் ஜீவர்களோ தங்களுக்குக் கொடுக்கபட்ட வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். வாழ்க்கைக்கு உதவியாகத் தந்த கத்தி, புணை முதலிய கருவிகளைக் கொண்டு வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளாமல், கத்தியால் அழிவையும், புணைகளில் ஏறிக் கடலில் போய் அமிழும் அனர்த்தங்களையும் செய்து கொள்வது போன்று, ஜீவர்கள் பகவானை அடைவதற்காக அவன் தந்த ஆக்கை, இந்திரியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உலக விஷயங்களில் ஈடுபடுதல், உலக இன்பங்களில் தங்களைப் போக்கிக் கொள்ளுதல், பொருள் பற்றில் அவனை மறந்து விடுதல் என்று தங்களுக்குத் தாங்களே கேட்டினைச் சூழ்ந்து கொண்டனர்.

பகவானும் மிகவும் மனம் வருந்தி, ஜீவர்களுக்கு நல்வழி எது தீவழி எது என்று பிரித்து அறிந்து கொள்ள வசதியாக வேதங்கள் முதலிய சாத்திரங்களைத் தந்தால், அதனால் வழிதவறாமல் தன்னிடம் வந்து சேருவார்கள் என்று நம்பி சாத்திரங்களை ரிஷிகள் மூலமாக வெளியிட்டான். ஆனால் ஜீவர்கள் அப்பொழுதும் சாத்திரங்களை அறிந்து நல்வழி அல்வழி என்று அறிந்து தன்னிடம் வராமல் மேலும் மேலும் தங்களுக்கு நாசத்தைச் சூழ்த்து கொள்வார்களாய், தாங்களே எதற்கும் கட்டுபடாதவர்கள், கடவுள் என்றெல்லாம் எதுவும் இல்லை என்று தங்களது ஆத்மா தங்கள் இஷ்டம் என்ற எண்ணத்தைக் கைக்கொண்டு அதனால் பகவானின் உடைமையான தங்கள் ஆத்மாவைக் களவு காணும் குற்றமாகிய ஆத்ம அபஹாரம் என்பதைச் செய்தவர்களாய் விபரீதமாகப் போனார்கள்.

பார்த்தான் பகவான். சரீரம், பிறப்பு ஆகியவை தந்தாலும் வழிதவறிப் போனார்கள். நல்வழி அறிவதற்காக சாத்திரம் ஆகிய உதவியைச் செய்தால், அதன்வழியே போகாது, தம்வழியே போய்க் கெடுகிறார்கள். சரி. நாடு காக்கும் அரசர்கள் எல்லைப் புறங்களில் உள்ள மக்கள் சமுதாயம் கீழ்ப்படியாது எதிர்த்துப் போனால் முதலில் தமது ஆணைகள் அடங்கிய ஓலையை அனுப்புவார்கள். அதற்கும் அமைதி விளையவில்லையென்றால் தாமே நேரே சென்று அடக்கி வருவதற்காகச் செல்வார்கள். அது போன்று பகவானும் தான் வெளியிட்ட சாத்திரங்களை மக்கள் ஏற்று அவற்றின் வழி ஒழுகவில்லை என்றதும் தானே நேரில் அவதரித்து ஜீவர்களைத் தன்னை நோக்கித் திருப்பப் பார்த்தான். அப்படியும் ஜீவர்கள், தங்களைப் போன்றே பிறந்து வளர்ந்த கடவுளின் அவதாரங்களைப் பார்த்துத் தம்மைப் போலவே கேவலம் அவர்களும் ஜீவர்கள்தான் என்று நினைத்து, அதனால் அவர்களின் உபதேசங்களைப் புறக்கணித்து, அவர்களோடு எதிர்த்து எதிரம்பு கோக்கவும் செய்தார்கள்.

பகவான் இதைக்கண்டு சரி இது நம்மால் ஆகும் காரியமில்லை என்று யோசித்து, மிருகங்களைப் பிடிப்பவர்கள் அந்த மிருகங்கள் ஈர்ப்புண்ணும் அதையொத்த மிருகங்களைக் கட்டி வைத்து அதன் மூலம் காட்டு மிருகங்களைப் பிடிப்பதைப் போன்று, இவர்களையொத்த ஜீவர்களைக் காட்டித்தான் இந்த ஜீவர்களை ஈர்த்து நம் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து தன்னிடம் சின்மயமாய் இருக்கும் ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம், வனமாலை, ஸ்ரீ, பூமி, நீளா, அநந்தன், கருடன், விஷ்வக்ஸேனர் முதலிய நித்யஸூரிகளை, 'நீங்கள் திராவிட தேசத்தில் சென்று நதிக்கரைகளின் ஓரமாகப் பிறவி எடுத்து மக்களுக்குத் தமிழ் மொழியில் உபதேசங்களைச் செய்யுங்கள்' என்று அனுப்பினான். அவர்கள்தாம் காவிரி, தாமிரபர்ணி முதலிய நதிக்கரைகளில் ஆழ்வார்களாய் அவதரித்தார்கள். பகவானும் அவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளி, அவர்களின் மூலமாக அனைவருக்கும் பயன்பட வேண்டித் திவ்ய ப்ரபந்தங்களை வெளியிட்டான். இவ்வாறு ஆழ்வார்கள் தோன்றினார்கள். --

இவ்வண்ணம் பின்பழகிய பெருமாள் ஜீயரின் நூலான குருபரம்பரா பிரபாவம் என்னும் குருபரம்பரையின் பெருமைகளைக் கூறும் நூலில் பிரவேசம் என்னும் நுழைவாயிலில் ஜீயர் எழுதியுள்ளதைச் சுருக்கி எளிமையாகத் தந்தேன். உலகின் சிருஷ்டி, உயிர்களின் பிறப்பு, மனித வாழ்க்கை, ஜீவர்கள் முக்தி அடைதல் என்ற அனைத்து உலகிற்கும் பொதுவான தத்துவ விளக்கங்களாகவும், ஆன்ம சாதனையாகவும் ஆழ்வார்களின் திருமால்நெறி திகழ்கிறது என்பதை ஜீயரின் அரிய விளக்கங்கள் நமக்கு உணர்த்துவதாகுக!

***

No comments:

Post a Comment