Monday, December 30, 2019

ஆள் மறைந்தால்தான் தத்துவம்

ஆழ்வார் தாம் இருந்த ஓர் அருள் நிலையில், தக்க ஞானக் கண்களாலே தாம் கண்ட ப்ரத்யக்ஷமாக பகவத் தரிசனத்தைக் கூறுகிறார். ஆபரேடிங் ஸிஸ்டத்தில் நாம் சிலவற்றைக் காண்பதாகக் கூறுகிறோம். லௌகிகக் கண்களுக்கும், தொழில்நுட்பம் அறியாதார் கண்களுக்கும் முறையே இரண்டும் நம்பிக்கையின் பாற்பட்ட அனுபவக் கூற்றுகளாய் இருந்துவிடுவதான ஓர் ஒப்புடைமை அமைந்துவிடுகிறது. எனவே நீ அனுபவித்தது உன்மட்டோடு. அதற்கு என்ன பொதுச் சான்றாண்மை? என்ற கேள்வி அவசியம் கேட்கப்பட வேண்டிய கேள்வியாக ஆனாலும் அந்தக் கேள்வியே சிந்தனைக்குரியதாகவும் ஆகிவிடுகிறது.

ஏனென்றால் பழங்காலம் தொட்டு, பல இடங்களில், பல மொழிகளில் பிறந்த ஆன்மிக அருளாளர்களும், இறையன்பாளர்களும் தாங்கள் கண்ட காட்சியைப்பற்றிச் சொல்லிக்கொண்டுதான் வந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகின் பல இடங்களில் சொல்லும் ஒன்று எப்படிப் பேசி வைத்துக்கொண்டு கட்டுக்கதை புனைந்தது ஆகும்? சரி அப்படியென்றால் அது எப்படிச் சாத்தியம் ஆகும்? ஏனென்றால் ஒன்று வேறு ஏதோ தளத்தில் நிகழ்ந்தது, வேறு ஏதோ சூழல்களில் நிகழ்ந்தது, இத்தகைய மனோநிலையில் நிகழ்ந்தது என்றுதான் சொல்லிக்கொண்டு போகமுடியுமே ஒழிய, நிகழ்ந்தது என்று சொன்ன பிற்பாடு இருப்பு நிகழ்வு என்பதற்கான அனைத்து அம்சங்களும் அங்கு வந்துவிடும். இந்த இருப்பில்தான் இதுமாதிரி நிகழும் வேறு ஓர் இருப்பு இருக்கிறது. அதுபோல் எவ்வளவோ வகை இருப்புகள் உண்டு என்றெல்லாம் ஒருபோதும் சொல்லமுடியாது. Existence is One. பல தளங்கள், சூழல்கள் என்று சொல்லலாம். அதற்குத்தான் ஆபரேடிங் ஸிஸ்டம் உதாரணம் பயன்படுகிறது.

ஆபரேடிங் ஸிஸ்டத்திலும் சரி, அருளாளர்கள் தரும் விவரணைகளிலும் சரி நிகழ்வு நிகழ்வாக இருக்கும் வரையில் எந்தக் காட்சியாக இருந்தால் என்ன? அதற்கும் ஒரு ஹோலோக்ராபிக் வர்ச்சுவல் அனுபவத்திற்கும் என்ன வித்யாசம் இருக்கப் போகிறது? அதாவது ஒருவர் ஒரு காட்சி பெறுகிறார் என்றால் பின் அவர் அங்கு உடைந்துவிட வேண்டும். அந்த வ்யக்தி முற்றிலும் நொறுங்கிவிட வேண்டும். காண்பவனை முற்றிலும் மாற்றிவிடாத காட்சிக்குப் பெரிதும் பெறுமதி இருக்கும் என்று தோன்றவில்லை. ஓர் ஆபரேடிங் ஸிஸ்டம் உதாரணம் காட்சிக்கான பொதுமையைப்பற்றிய விவாதத்தை ஆழ அகலமாக ஆக்குமே தவிர, காட்சிக்கான விளக்கமாக ஒரு போதும் ஆகிவிடாது என்றே தோன்றுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணரே கூட ஒரு சமயம் விவேகாநந்தரின் கேள்வி ஒன்றுக்கு, அதாவது இந்த யோகக் காட்சிகளுக்கான உள்ளார்ந்த பெருமதிப்பு ஏதேனும் உண்டா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் 'நீ ஆன்ம சாதனையில் முன்னேறிக்கொண்டிருக்கிறாய் என்று வேண்டுமானால் இந்தக் காட்சிகள் தெரிவிக்குமே அன்றித் தம்மளவில் ஏதும் பெருமதிப்பு உடையன அல்ல' என்று கூறுகிறார். யாரோ ஒருவர் தமக்கு இத்தகைய காட்சிகள் ஏற்படவேண்டும் என்று கரையும் பொழுதும் இந்தக் காட்சிகளை விட விவேகமும், வைராக்கியமும், பக்தியும், ஞானமும் எவ்வளவோ சிறந்தவை என்று அறிவுறுத்துகிறார். ஆக அருளனுபவம் என்பது ஒருவரை உள்ளே 'கண்டமான' நிலையிலிருந்து அகண்டமாக ஆக்கவேண்டும். அவரது ஸங்குசிதமான வ்யக்தியை உடைத்து விகாசமான ஆளுமையை, அல்லது ஆளிறந்த தன்மையை ஏற்படுத்த வேண்டும்.

ஸ்ரீராமகிருஷ்ணர் கூறும் மொழி -- ஞானத்தின் முன்னால் ஒருவனிடம் இருப்பது பச்சையான அகங்காரம். அது அல்லல் படுத்தும். ஆனால் ஞானம் அடைந்த பின் அவனது அகங்காரம் கெடுதல் செய்யும் தன்மையை இழந்துவிடுகிறது. எரித்த கயிறு போல் இருக்கிறது. பார்வைக்கு மட்டும் அகங்காரம் போன்று. ஆனால் அதனால் கட்ட இயலாது. அதாவது தான் என்று ஒருவன் குவித்து வைத்துள்ள சுய நிலுவைகள் அத்தனையும் நிர்மூலமாக எரிந்துபட வேண்டும். இருந்ததற்கான ஒரு தோற்றமே மிஞ்சும். சாம்பலாகிப் போன கயிறு முறுக்கின புரிகள் உட்பட அப்படியே இருக்கும். ஆனால் ஒரு காற்றடித்தால் தூள் தூளாகப் பறந்துவிடும்.

ஆள் மறைந்தால்தான் வேதாந்தமே புரியும் என்பார் பிள்ளை எங்களாழ்வான். ஸ்ரீராமானுஜரின் மருமகனார் நடாதூராழ்வான். அவருடைய பேரர் நடாதூரம்மாள். தமது பிதாமஹரிடம் வேதாந்தம் கற்கத் தொடங்கினார் நடாதூரம்மாள். ஸ்ரீபாஷ்யம் மங்களஸ்லோகம் தொடங்கினதுமே 'அகில புவந' என்று ஆரம்பித்ததுமே ஏன் அகில புவந என்று ஆரம்பிக்க வேண்டும்? நிகில புவந, ஸகல புவந என்றெல்லாம் ஆரம்பிக்கலாமே? அவற்றை விடுத்து 'அகில புவந' என்று ஆரம்பிப்பதின் ஸூக்ஷ்மம் என்ன? என்று கேட்டார் நடாதூரம்மாள். பெரியவருக்கு ஒன்று புரிந்தது. பையன் சிறுவயது. துடியாகக் கேட்கும் கேள்விகளுக்கு எல்லை இருக்காது. அத்தனைக்கும் ஈடு கொடுத்துக் காலக்ஷேபம் சொல்ல தம் வயது இடம் கொடுக்கவில்லை. எனவே தமது பேரனை 'அப்பா! ஐயத்திற்கே இடமின்றி ஆழமும் விரிவுமாகச் சொல்லக் கூடியவர் திருவெள்ளறையில் எழுந்தருளியுள்ள ஆசாரியரான பிள்ளை எங்களாழ்வான். நீ அவரிடமே சென்று கற்கத் தொடங்கு' என்று அனுப்பி வைத்தார். இளவயதினரான நடாதூரம்மாள் ஆர்வமும் முனைப்பும் தள்ள திருவெள்ளறை போய்ச் சேர்ந்தார். பிள்ளை எங்களாழ்வான் திருமாளிகையைக் கண்டறிந்து கதவைத் தட்டினார்.

'யாரது?' என்று உள்ளிருந்து எங்களாழ்வானின் குரல்.

இளைஞர் 'நான்தான் நடாதூரம்மாள். ஸ்ரீபாஷ்யம் கற்க வந்திருக்கிறேன். என் பிதாமஹர் நடாதூராழ்வான் அனுப்பினார். அருள் புரிய வேண்டும்'

எங்களாழ்வான் உள்ளிருந்தபடியே 'நான் செத்த பிற்பாடு வா. சொல்லுகிறேன்' என்றார்.

இளைஞருக்கு முகம் செத்துவிட்டது. என்ன இது? மகாபெரியவர் என்னதான் ஏதோ விரக்தியில் இருந்தாலும் இப்படியா அச்சானியமாகக் கூறுவது? ஒரே வார்த்தை சௌகரியமில்லை இப்பொழுது என்றுகூட கூறியிருக்கலாம். எல்லாம் நம் தலைவிதி என்று நொந்தபடியே பாவம் காஞ்சிபுரம் திரும்பிவிட்டார்.

முகம் வாடி வரும் பேரனைக் கண்டதும் போன இடத்தில் என்ன சேதியோ என்னவோ என்று தாத்தா ஆதுரமாகப் படபடப்புடன் விசாரிக்கிறார். 'பிள்ளை எங்களாழ்வான் நலம்தானே?'

பேரன் என்ன சொல்வார்? 'பெரியவர் நலமே உள்ளார். ஆனால் என் பூர்வ ஜன்ம கர்மங்கள்தாம் நன்மையாக இல்லை போலும்!'

ஏனப்பா? என்ன ஆயிற்று?

'நான் சென்று கதவைத் தட்டினேன். யாரது என்று வினவினார். நான்தான் நடாதூரம்மாள், தங்களுடைய பேரன் என்று கூறினேன். என்ன விரக்தியோ தெரியவில்லை? 'நான் செத்த பிறகு வா. சொல்கிறேன்' என்று கூறிவிட்டார். ஏன் எனக்கு இப்படி ஆயிற்று? ஸ்ரீபாஷ்யம் கற்க வேண்டும் என்று நினைத்தது தப்பா? என்று வருந்தினார் பேரப்பிள்ளை.

நடாதூராழ்வானோ சிரிக்கின்றார். 'அப்பனே! உனக்கு ஏற்கனவே உபதேசம் ஆரம்பமாகிவிட்டது தெரியவில்லையா ?'

என்ன?

'ஆமப்பா! நான் செத்த பிறகு வா என்றால் அந்த மகான் தம்மைக்குறித்துச் சொல்லவில்லை. யார்? என்ற கேள்விக்கு இந்த ஆத்மாவின் உண்மையான இயல்புக்கு, பகவானின் உடலும், சேஷமும் ஆன இந்த ஆத்மாவின் சொந்த இயல்புக்குப் பொருத்தமாக ஆத்மாவின் நிலைநின்ற பெயரான 'அடியேன்' என்று சொல்லாமல் நீ இந்தத் தேகத்தோடு சம்பந்தப்பட்ட பெயரான தேகாத்மாபிமானமான பெயரையும், இன்னாருக்குப் பிறந்தவன், இன்னார் பேரன் என்று வந்து மறையும் சொந்தங்களை இட்டும் உன்னை அடையாளப்படுத்திக் கொண்டாயல்லவா? அதைத்தான் அவர் குறித்திருக்கிறார். அந்த ’நான்’ என்ற தேகாத்மாபிமானம் அடிப்படையான அடையாளம் உன் உணர்விலிருந்து மறைந்து ஆத்ம ஸ்வரூபமான 'அடியேன்' என்ற உணர்த்தி தலை தூக்கியபின்பு வா. அப்பொழுதுதான் நீ ஸ்ரீபாஷ்யம் கேட்கச் சரியான அதிகாரி ஆவாய்.' என்று உனக்கு முதல் உபதேசமே கனகச்சிதமாக ஆரம்பம் ஆகிவிட்டது. கொடுத்து வைத்தவன் போ மீண்டும்' என்று சொல்லிப் பேரனைத் திருவெள்ளறைக்கே அனுப்பிவைத்தார் வேதாந்தச் சுவடறிந்த பாட்டனார். பக்தியின் உதவியோடு கூடிய சாஸ்திரத்தால் ஜநார்த்தனனை அறிந்தேன் என்றான் சஞ்சயன்.

***

No comments:

Post a Comment