Monday, December 16, 2019

நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?

திருவாய்மொழியையே ஒரு சமயம் பார்த்தால் ‘வீடுமின் முற்றவும்’ என்னும் பாசுரத்தில் ஆரம்பித்து ஆயிரமாவது பாசுரமாக, அதாவது கடைசிப் பாசுரமாக ’கரவிசும்பு எரி வளி நீர் நிலம் .. இவைபத்தும் வீடே’ என்பதில் முடிக்கும் கிரமமாகப் படிப்பதில் ஆசை இருக்கிறது. ஏனெனில் வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் வீடுடையானிடை வீடு செய்மின்னே - என்னும் தொடக்கமான பத்தும் பாசுரங்களும் ஆன்மிகத்தின் மிக முக்கியமான வைராக்கியம், தியாகம், துறவு என்பதை வலியுறுத்துகிறது. உண்மையில் வைராக்கியம், தியாகம், துறத்தல் என்பது இன்றி ஆன்மிகம் என்ற வார்த்தையே அர்த்தம் அற்றதாகிவிடும். ஆனால் பலரும் பேசுவது என்னவெனில் போகம், மோக்ஷம் இரண்டையும் விட வேண்டியதில்லை என்பதைப் போல் பேசுகிறார்கள். பேசலாம், எழுதலாம், பெயர் புகழ் என்று அடையலாமே அன்றி ஆன்மிகம் என்பது உண்மையில் புரியவேண்டும் என்னில் முதல் படிக்கட்டே தியாகம், வைராக்கியம் என்பதுதான். ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது - பொருள் பற்றும், இன்பப் பற்றும் இருக்கும்வரை ஆத்மஞானம் இல்லை. உபநிஷதம் கூறுகிறது -- தியாகம் என்கிற ஒரே வழியால் மட்டுமே இறவாநிலை என்பது எய்தப் படுகிறது. ஸ்ரீதாயுமானவர் கூறுவதும் - நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?

வைராக்கியம் அவ்வளவு முக்கியமில்லை. கடவுள் அருளை எப்படியாவது அடைந்துவிட்டால் நம்மை ஏதாவது குறுக்குவழியில் கொண்டு போய்விடுவான் என்றெல்லாம் நினைப்பது ஏதோ ஒவ்வொரு சமயத்து மன ஆதரவாக இருக்கலாம். ஆனால் சத்யம் என்னவெனில் நம்மாழ்வார் கூறுவது -

‘சார்ந்த இருவல் வினைகளும்
சரித்து மாயப் பற்றறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்
திருத்தி, வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி
அகலம் கீழ்மேல் அளவிறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும்
இவற்றின் உயிராம் நெடுமாலே.’

வேறு அயல் வழி எதுவும் இல்லை; அப்படி எந்த வேறு வழியும் இருப்பதாக யாராலும் இதுவரை அறியப்படவில்லை - என்கிறது உபநிஷதம்.

எம்பார் என்னும் ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியாரின் கருத்து - ஒருவர் தமக்கு சத்சங்கம் இருக்கிறது, ஞானம் நிறைந்திருக்கிறது, பரம்பொருளிடம் தோயும் உணர்வு இருக்கிறது என்று நினைத்து இவ்வுலகில் நிம்மதியாய் இருப்பதைக் காட்டிலும் முக்கியமானது என்னவெனில் எப்பொழுதும், இவ்வுடலால் ஏற்படும் ஆசைகள், உலகியல் நாட்டங்கள் முதலியன குறித்து எச்சரிக்கையும், அச்சமும், கவலையும் உடையவராக இருத்தலாகும்.

அஷ்டாவக்ர ஸம்ஹிதை ஓர் அற்புதமான கருத்தைக் கூறுகிறது. அது சொல்கிறது - இங்கே வா. துக்கம், துயரம், நிம்மதியின்மை என்று கஷ்டப்படுகிறாயா? ஒன்று தெரிந்துகொள். உலகம் (ஸம்ஸாரம்) இருந்தால் அங்கு துக்கம், துயரம் நிம்மதியின்மை இருக்கும். உலகம் (ஸம்ஸாரம்) என்பது என்ன தெரியுமா? ஆசைதான் உலகம். நீ ஆசையைத் துறந்துவிட்டால் உன்னைவிட்டு உலகம் போய்விடும். உலகம் இல்லாத போது துக்கமும் இல்லை; துயரமும் இல்லை; நிம்மதி ஒன்றே உன் மனத்தில் நிலவும்.

அரிய சுலோகம் -

யத்ர யத்ர பவேத் த்ருஷ்ணா ஸம்ஸாரம் வித்தி தத்ர வை |
ப்ரௌடவைராக்கியம் ஆஸ்ரித்ய வீதத்ருஷ்ண: ஸுகீ பவ||

மனித முயற்சியா? கடவுள் அருளா? என்றபடியான ஐயம் சில சமயம் ஏற்படும். பவம் கடந்த பெருநிலை என்பது உண்மையில் கடவுள் அருளால் ஏற்படுவதேயன்றி மனித யத்தனம் எதுவும் அங்கு செல்லுபடியாகாது. ’மேதையினாலோ, பெருங்கல்வியினாலோ, சொற்பொழிவுகளாலோ இந்த ஆத்ம ஞானம் கிட்டாது. யாரை இந்த ஆத்மா அருள் புரிகிறதோ அவர்களுக்கு தன் தரிசனத்தை நல்குகிறது’ - என்று உபநிஷதமும் கூறுகிறது. ஆனால் இந்த ஜீவன் தன்னை தேகம் என்று அபிமானித்துக் கொண்டதை, அதன் அடிப்படையில் புலனின்பங்களில் ஆசைகளை வளர்த்துக் கொண்டதை எந்த அருளையும் எதிர்பார்த்திராமல் தானே வெகுவேகமாக உலகியல் நாட்டங்களை வளர்த்துக் கொண்டதை விட வேண்டியதும் மனிதராகிய தன்னுடைய முனைப்பும், முயற்சியும் செய்ய வேண்டியது அன்றோ! இல்லை நான் ஆசைகளை விடமாட்டேன். கடவுள் அருள் வந்து தானாகவே என்னை ஆசைகளையும் விடவைத்து அதுவே எல்லா காரியமும் செய்து கொள்ளட்டும் என்று நினைப்பது நமது ஊக்கமின்மையைக் காட்டும் அவ்வளவே. அப்படிப் பார்த்தால் ஆசைகளில் இழிவதற்கு முன்னால் என்ன நினைத்திருக்க வேண்டும்? நானாக ஒன்றும் செய்ய மாட்டேன். கடவுள் அருள் தானாகவே வேண்டுமென்றால் ஆசையில் என்னை செலுத்தட்டும். நானாக ஆசைப்பட்டு முனையமாட்டேன் என்றா இருந்தோம்? அப்பொழுது கடவுள் என்ற ஒன்றையே மறந்து எங்காவது கடவுளே வந்து தடுத்துவிடப் போகிறாரே என்று குடுகுடுவென்று நாமேதானே ஆசைகளில் போய் மாட்டிக் கொள்கிறோம். நாம் கையில் விடப்பூச்சியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் நமக்கு சொல்பவர்கள் என்ன அலறுவார்கள்? போடு போடு அதைக் கீழே! என்றுதானே! நாமும் ஆபத்து என்று கொஞ்சம் உறைத்ததுமே என்ன செய்வோம்? நமக்கு என்ன உரிமை இருக்கிறது? மனித முயற்சியால் என்ன நடந்துவிடும்? கடவுள் அருளே வந்து நம் கையில் இருக்கும் விடப்பூச்சியை நம்மையும் பிடியை விடப்பண்ணிப் பிடுங்கி தானே எறியட்டும். நாம் முயற்சி செய்ய நமக்கு உரிமையில்லை என்றா இருப்போம்? அத்தகைய உணர்வின் அக்கறைதான் வைராக்கியம் என்பது. இந்த உணர்வு ஏற்பட்டால்தான் ஆன்மிகம் புரியும்.

***

No comments:

Post a Comment