Monday, December 23, 2019

திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் இரண்டு செய்யுட்கள்

சூரியனைக் காட்டிலும் பிரகாசம் யாருக்கு உண்டு? அதுவும் பாற்கடலில் உதயமாகும் அந்தப் பரிதியினும் பெருந்திகழ்ச்சி உடைய ஒருவர் இருந்தால் அவரை எப்படிப் பார்க்க முடியும்? நம்மால் ஓரளவு ஒளிப்பெருக்கத்தைத்தான் பார்க்க முடியும். எனவே நிறைய ஒளி என்பது நமக்கு நிறைய விளக்கம் தருமா? ஆனால் வளர் ஒளியும் இருந்து, அஃது நமக்கு மேன்மேலென விளக்கமும் தந்தால் நல்லதுதான். ஆனால் அப்படி இருக்கிறதா ஏதேனும் ஒளி? இருக்கிறது என்கிறார் திருக்குருகைப்பெருமாள் கவிராயர்.

’பாற்கடல் வெய்யோனில் ஒளிபாரித்த சோதிவட
நூற்கடலைத் தென்னுரை நன்நூற்கடலாய் - மாற்கடிமை
வாய்ந்தார் ஈடேற வகுத்தளித்தான் தண்ணளிதாம்
தாம்தாம் எனும் வகுளத்தான்.’

குளிர்ந்த வண்டுகள் ‘தாம்தாம்’ என்று ரீங்கரித்துக்கொண்டு சுற்றும் வகுளமாலையை அணிந்த சோதி பாற்கடல் வெய்யோனிலும் ஒளி மிக்குத் திகழ்வது. எந்த சோதி தெரியவில்லையா? வடநூற்கடலைத் தமிழ் நூற்கடலாய் ஆக்கித் திருமாலுக்கு அடிமை வய்ந்தார் ஈடேற என்று வகுத்தளித்தானே அந்த சோதியின் திகழ்ச்சி மிகப் பெரியது எனிலும் நாம் உளம்கொளும் அளவிற்குத் தண்ணிய கருணை மிக்கது.

அவர் அளித்த அந்தத் தமிழ் நூற்கடலில் என்ன விளைந்தது? தெள்ளமுதத்துத் தீஞ்சுவையையும், மெய்வேதத்து உள்ள உணர்வையும் அள்ளி எடுத்துக் கலந்து ஒன்றாய் இசைத்தது அந்தத் தமிழ் நூற்கடல். அந்தச் சோதியின் பெயரோ மாறன். அவர் அந்தாதியால் தொடுத்த இன்சொல் திருவாய்மொழி. அஃது உத்தமப் பாச் சொல்.

‘தெள்ளமிர்தத் துள்ளாய தீஞ்சுவையை மெய்வேதத்து
உள்ள உணர்வை உணர்வினால் - அள்ளி
எடுத்திசைத்தது ஒன்றெனலாம் இன்பொருளால் மாறன்
தொடுத்திசைத்த உத்தமப் பாச்சொல்.’

***

No comments:

Post a Comment