இரண்டாம் திருவந்தாதி 61 பாடல்
நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனே! உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61
இதில் 'உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு' என்று வருகிறது. பிரமாணித்தல் என்பது என்ன பொருள்? பிரமாணம் சரி. அது என்ன பிரமாணித்தல் என்ற பயன்பாடு? இந்தப் பாட்டைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். ஒரு காலால் நிலம் புதைத்து, நீண்ட தோள் திசையெல்லாம் சென்று அளந்தது திருவிக்கிரம அவதாரம். இந்த உலகளந்த விக்கிரம லீலையானது அந்தக் கருமாணியாய் இரந்த கள்வனைப் பிரமாணித்தார் பெற்ற பேறு என்கிறார் ஆழ்வார். அதை அந்தக் கருமாணியாய் இரந்த கள்வனை விளித்தே சொல்கிறார். கருமாணியாய் இரந்த கள்வனைப் பிரமாணித்தல் என்பது என்ன?
இந்த 'பிரமாணித்தல்' என்ற இரண்டாம் திருவந்தாதியின் பயன்பாட்டுக்குச் சமீபத்தில் வெளிவந்த ’இயற்பா - நம்பிள்ளை ஈடு’ - டாக்டர் எம் ஏ வெங்கடகிருஷ்ணன் பதிப்பு நூலையும் பார்த்தேன். விசுவாசம் என்றபடிதான் இருக்கிறது. பொதுவாக இயற்பா பிரபந்தங்களுக்குப் பெரும் விரிவான வியாக்கியானங்கள் அமையவில்லை. சுருக்கமான உரைகள், அல்லது அரும்பதங்கள்தாம். கொஞ்சம் விரிவு என்றால் இந்தச் சமீபத்திய பதிப்புதான். எனவே இந்தப் பாசுரத்திற்கு இந்தச் சொல்லைப் பற்றியவரை இதுதான் என்று அறுதிப்பாடு ஏற்பட இயலாது. சொல்லப்பட்ட 'நம்பகமான' விசுவாசம் கொள்ளுதல், அல்லது இதைவிடக் கொஞ்சம் நுணுக்கமாகப் போய், அவன் காட்சிக்கு அரியன் ஆகையாலே சரியான பிரமாணங்களால் அவனைப் பற்றிய திடமான ஞானம் வாய்த்தல் என்ற ரீதியில் அணுகுவது இன்னும் சிறப்பு.
பாட்டு பேசுகின்ற கதையின் சந்தர்ப்பம் அனைவருக்கும் தெரிந்ததுதான் வாமனனாய்ச் சென்று மாவலியிடம் மூவடி மண் யாசித்து, அதைத் தன் காலாலே அளக்க அனுமதி பெற்று, அளக்கும் போது திருவிக்கிரமனாய் வளர்ந்த, ஓர் அவதாரத்தில் ஈரவதாரங்களாக ஆன வாமன அவதாரக் கதைதான் பேசப்படுகிறது. இந்த இடத்தில் ப்ரமாணம், பிரமாணித்தல் என்ற சொல்லின் பயன்பாடு குறித்துத்தான் கேள்வி எழுந்தது.
முதலில் பிரமாணம் என்ற சொல்லைக் கொஞ்சம் ஆராய்வோம். இந்தச் சொல் உண்மையில் இரண்டு கூறுகளின் சேர்க்கை. ப்ர என்னும் முன்னொட்டு ஒன்று. மாநம் என்னும் சொல் ஒன்று. மாநம் என்ற சொல்லை ப்ர என்னும் முன்னொட்டு பொருள் படுத்துகிறது. மாநம் என்றால் என்ன? இந்தச் சொல்லுக்கு வடமொழியில் பல பொருள்கள் உண்டு. பிரபலமான இரண்டு அர்த்தங்கள் அளவை, அறிவு உண்டாக்கும் சான்றுவழி. ப்ர என்னும் முன்னொட்டு சாதாரணமாக பிரசித்தி என்னும் பொருளைத் தான் சேரும் சொல்லுக்குக் கூட்டும். அப்பொழுது ப்ர மாநம் என்றால் பிரசித்தியான அறிவுக்கான சான்று வழிகள் அல்லது அளத்தல் என்னும் பொருளில் கொண்டால் பொதுவாக ஒப்பக் கூடிய அளவைகள். பிரமாணம் என்று மூன்று சுழி இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம். வடமொழி இலக்கணப்படி ஒரு சொல்லில் 'ந'கரம் இருந்து அதற்கு முன்னொட்டில் 'ர'கரம் வருமேயானால் அந்த ரகரமானது சொல்லில் உள்ள நகரத்தை மூன்று சுழி ணகரமாக ஆக்கிவிடும் என்பது விதி. எனவேதான் ப்ர மாநம் என்பது ஒரு சொல்லாக ப்ரமாணம் என்று வந்தது. தமிழ் வடிவம் பிரமாணம்.
என்ன இரண்டு அர்த்தங்கள்? அளத்தல் என்னும் பொருள், அறிவு பெறும் சான்று வழி என்னும் பொருள்.
மகாபலி மூவடி மண் தருகிறேன் என்றதும் அளப்பது யாருடைய கால் அளவையால் மூவடி மண் என்ற கேள்வி எழுந்தது. வாமனன் தன்னுடைய கால் அளவையால் மூவடி மண் என்றார். மாவலி, அவன் சுற்றத்தார், அவையோர் என்று அனைவரும் சிரித்துவிட்டனர். இருப்பதே குட்டையான ஆள், இவருடைய காலால் மூவடி என்றால் ஒரே விநோதம். இவரைத் தவிர வேறு யார் அளந்தாலும் அது இன்னும் அதிகமாகத்தான் இருக்கப் போகிறது. ஏன் இப்படி இந்தக் குள்ளர் அடம் பிடிக்கிறார் என்று ஒரே நகைச்சுவை. பார்ப்பதற்கோ மிக அழகான குள்ளன். மனம் கவரும் தோற்றம். சரி என்று அனைவரும் வாமனனுடைய கால் அளவையின்படியே தர ஒப்புக்கொண்டு விட்டனர். அதாவது கருமாணியாய் சென்று இரந்தவனின் காலடி அளவையே பொதுவாக அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட மாநம், அளவை ஆகிவிட்டது. அதாவது கருமாணியை அவர்கள் பிரமாணித்துவிட்டார்கள். அளவைக்கான பிரமாணமாக பொதுவில் ஒப்பினர். ஆழ்வார் சிரிக்கிறார்.
கருமாணியாய்ச் சென்று இரந்த கள்வனே! உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு!
அளக்கிறேன் என்று சொல்லிக் குட்டைக் காலைக் காண்பித்து நெட்டை உருவத்தால் அளந்தாயே அவர்களுடைய முழு ஒப்புதலையும் வாங்கிக் கொண்டு, அது உன்னைப் பிரமாணித்த அவர்கள் பெற்ற பெறு அல்லவோ! என்று சாடூக்தியாக (சாடல் குறிப்பு உள்ள சொற்கோவை) ஆழ்வார் ஒரு கோணத்தில் பார்த்தால் கூறுகிறார். அதாவது அளத்தல் என்னும் பொருளில் மாநம், பிரமாணம் என்பதைக் கையாண்டு.
சரி. இப்பொழுது சான்று வழிகளால் அறிவு வாய்த்தல் என்னும் பொருளில் மாநம், ப்ரமாணம் என்னும் சொல்லைக் கையாண்டு எப்படி ஆழ்வார் வேறொரு பொருள் சிறப்பைத் தருகிறார் என்பதைப் பார்ப்போம். வாமனனாய்ச் சென்று இரந்து மூவடி அளக்குங்கால் திருவிக்கிரம அவதாரமாய் வளர்ந்த நெடுமால் என்ன செய்தார்? இந்த அகில உலகனைத்திலும் உள்ள பொருள் ஒவ்வொன்றிலும் தமது பாத இலச்சினையை வைத்தார். அதாவது அனைத்து உயிர்களும், அனைத்துப் பொருட்களும் விஷ்ணுவைச் சேர்ந்தவை, வைஷ்ணவமானவை என்று நன்கு இலச்சினை பொறித்து நிரூபித்ததுபோல் ஆகிவிட்டது திருவிக்கிரமனின் அவதார காரியம். இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் கேட்டதா? அல்லது பொருட்களுக்கு எல்லாம் கேட்கும் அறிவு உண்டா? இருந்தும் தம்முடைய சொத்து என்பதைத் தாமே அளந்துகாட்டி இலச்சினை பொறித்துப் பாதுகாத்து வைத்தது போல் ஆயிற்று.
மிகப்பெரும் வேதாந்த வித்வான்கள் எல்லாரும் என்ன செய்கிறார்கள்? சாத்திர விசாரம் செய்கிறார்கள். அதாவது பிரமாணங்களாகிய சாத்திரங்களை நன்கு தீர விசாரித்து உறுதியான அறுதியான பரம்பொருள் பற்றிய ஞானத்தை அடைகிறார்கள். இங்கு பிரமாணம் என்றால் அறிவு பெற வைக்கும் சான்று வழிகள் என்னும் பொருள். அவ்வாறு பிரமாண விசாரம் செய்து அவர்கள் அடையும் நிச்சயம் என்ன? வேத வியாசர் அவ்வாறு எல்லா சாத்திரங்களையும் நன்கு விசாரம் செய்தார். அவர் என்ன சொல்கிறார் என்ன நிச்சயத்திற்குத் தாம் வந்ததாக?
ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புந:புந:
-- அதாவது அனைத்து சாத்திரங்களையும் மீண்டும் மீண்டும் ஆய்ந்த பிறபாடு -- என்பது இதன் பொருள்.
சரி அவ்வாறு ஆய்ந்தீரே? என்ன முடிவுக்கு வந்தீர் ஐயா? என்றால் சொல்லுகிறார் --
இதம் ஏகம் ஸுநிஷ்பந்நம் -- இது ஒன்றுதான் மிக நிச்சயமாக முடிவாகியது -- என்ன?
த்யேயோ நாராயண ஸதா
-- நாராயணனே சதா சர்வ காலமும் தியானிக்கப்பட வேண்டியவன்.
ஏன் நாராயணனையே சதா சர்வ காலமும் தியானிக்க வேண்டும்? நாரங்கள் ஆகிய நித்ய பொருட்கள் அனைத்திற்கும் அவன் ஒருவனே சென்று சேரும் புகலாக இருப்பவன். எனவேதான் நாரா:+அயநன் = நாராயணன். அது மட்டுமா? நாரங்கள் ஆகிய நித்ய பொருட்களின் உள்ளே தான் அந்தர்யாமியாய் நிலவி நின்று திகழ்பவன் அதனாலும் நாராயணன். அதாவது உயிர்களுக்கு எல்லாம் அவனே கதி என்பது உண்மை என்றால் உயிர்கள் அனைத்தினுள்ளும் உள்ளுயிராய் இலகுபவனும் அவனே.
இப்படி முடிவாகச் சொன்னதும் வியாசர் போல்வாரை யாராவது கேட்டிருப்பார்களே? அது எப்படி ஐயா? நீர் சொல்கிறீர். அனைத்தும் நாராயணனின் சொத்து, உடல், அனைத்துக்கும் புகல் நாராயணனே என்று. நாராயணன் வந்து என்றாவது இவை அனைத்தும் என் உடைமை என்றும், என் சொத்து இந்த உயிர்கள் எல்லாம், இவை அனைத்துக்கும் உயிராகவும் உடையவனாகவும் இருப்பவன் நானே என்றும் நிரூபணம் செய்திருக்கிறானோ என்று யாராவது கேட்டால் என்ன சொல்லியிருப்பார் வியாசர்? நிச்சயம் திருவிக்கிரமாவதாரத்தைப் பாரப்பா, அவனே அனைத்தையும் அளந்து தன்னுடைய சொத்து என்று அனைத்தின் மீதும் தன் பாத இலச்சினை பொறித்த அவதாரம் ஆயிற்றே!
அதைத்தான் ஆழ்வார் சொல்லிக் கொண்டாடுகிறார். அவனையே பரம்பொருள், அனைத்தின் சொந்தக்காரன் ஸர்வ ஸ்வாமி, அனைத்தின் உள்ளுயிர் ஸர்வாந்தராத்மா, அனைத்தின் காரணன், ஸர்வ காரணன், அனைத்துக்கும் அவனே பரம கதி என்று ஏகப்பட்ட சாத்திரங்களை ஆராய்ந்து, எந்த சாத்திரங்கள்? எல்லாராலும் பொதுவில் ஒப்பப்பட்ட சான்றான பிரமாண நூல்கள அனைத்தையும் நன்கு ஆராய்ந்து, அத்தகைய பிரமாண விசாரங்களால் அவனையே புகலாகவும், அடைவிக்கும் நெறியாகவும் அந்த நெறியால் அடையத்தக்க உயர்ந்த இலக்காகவும் சிறிதும் மயர்வற நிச்சயம் செய்தவர்கள், அவனையே பிரமாணித்தவர்கள் அவர்களுக்குக் கிடைத்த அரிய பேறன்றோ இந்த திருவிக்கிரம அவதாரம்!
தன்னுடையதான பிரபஞ்சத்தை எவனோ ஒரு மகாபலி என்பான் தன்னுடையது என்று அபிமானிக்க, அவனைப் புறங்கையால் தட்டி எறிந்து பெரு வலிமையால் தன் சொத்து என்று நிறுத்திவைக்க முடியும் என்றாலும், அந்த மாதிரி வெளிப்படையாக எதையும் செய்யாது, ஏதோ அவன் பெரிய யஜமானன் போலும், அவனிடம் தான் சென்று இரந்து, அந்த இரப்புக்கு என்று ஒரு வேஷம் கருமாணியாய், அவனும் ஏதோ தன் பெருமிதம் துலங்க ஒப்பினோம் என்று தர, அதைத் தன் காலடியால் அளந்து காட்டி மீட்டாய் என்னும் இது என்ன கள்ளத்தனம்! என்று வியக்கிறார் ஆழ்வார்.
கருமாணியாய் இரந்த கள்வனே! உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு.
(அதாவது மகாபலி என்பது நம்முடைய அகங்காரம் என்று புரிந்துகொள்ளுங்கள். நாமே என்ன பாடு படுத்துகிறோம்! லேசில் விட்டுவிடுகிறோமா தெய்வத்தை நம்முள் நுழைய? தெய்வத்துடைய சொத்து நம் உடல் உயிர் உலகம் அனைத்தும். ஆனாலும் நமக்கு நிச்சயமான புத்தி இருக்கிறது இது நம்முடையதுதான் என்று. முதலில் அந்த தெய்வம் இருக்கிறது என்று என்னய்யா நிரூபணம்? என்கிறோம். ஆனாலும் வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு வாய்ப்பில் தெய்வம் ஒன்றும் தெரியாதது போல சாதுவாய் நம் வாழ்க்கைக்குள் நுழையத் தொடங்குகிறது. பின்னர்... அவர் என்ன சார் ஆனார்?... அவர் எங்கப்பா...அப்படியே மனுஷன் மாறிப் போயிட்டாரு...என்ன பக்தி...என்ன பக்தி....நாம் எல்லாம் என்னய்யா தெய்வத்தை பக்தி செய்யறோம்? அவர் தன்னை மறந்து கண்ணீரும் கம்பலையுமாக செய்கிற பக்தி இருக்கே.......அது எல்லாம் கடவுளின் அருள்...என்னத்த சொல்றது ! )
கருமாணியாய் இரந்த கள்வனே! உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு!
***
No comments:
Post a Comment