Tuesday, December 24, 2019

நம்பிள்ளை போல்வாரையிறே...

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நியாயம், வியாகரணம், மீமாம்ஸை, வேதாந்தம் ஆகிய சதுஸ்சாஸ்திரங்களின் விடாத பயிற்சி தொன்றுதொட்டு இடையீடின்றி வருவது. அருளிச்செயல் ஆகிய ஆழ்வார்களின் பாசுரங்களில் ஈடுபாடு என்பது ஏதோ மேம்போக்காக அந்த ஆசிரியப் பெருமக்கள் பாவனை காட்டிய விஷயமன்று. வடமொழித் துறைகளாக நாம் மேலே காட்டியவை, தென்மொழியாகிய தமிழின் இலக்கண இலக்கியம் ஆகியவற்றின் உட்புகுந்த பரிச்சயம் இதெல்லாம் இருந்தால்தான் ஒருவர் ஆழ்வார்களின் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஈரச்சொல்லின் உட்பொருள் உணரத் தகுதி பெறுகிறார். இதை ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் நாதமுனிகள் காலத்திற்கு முன்பிருந்தே தம் கூட்டத்தார்க்குப் பசுமரத்தாணி போல் நன்கு உளத்தில் பதித்துவிட்ட உள்ளப்பாங்கு. இதை நானாக உரைக்கின்றேன் என்று நினைத்தால் பிழை. இதோ --

"ஓதுவாய்மையும் உவனியப் பிறப்பும்
உனக்குமுன் தந்த அந்தணன் ஒருவன்
காதலென்மகன் புகலிடம் காணேன்
கண்டு நீதருவாய் எனக்கென்று..." (பெ தி 5 8 7)

என்ற திருமொழியின் உரையில் ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை விளக்கமாக எழுதியிருக்கக் காணலாம்.

"முற்பட த்வயத்தைக்கேட்டு இதிஹாஸ புராணங்களையும் அதிகரித்து, பரபக்ஷ ப்ரதிக்ஷேபத்துக்கு உடலாக ந்யாய மீமாம்ஸைகளும் அதிகரித்து, போதுபோக்கும் அருளிச்செயலிலேயாம்படி பிள்ளையைப் போலே அதிகரிப்பிக்க வல்லவனையிறே 'ஒருத்தன்' என்பது" என்று திருமொழியில் அந்தணன் ஒருவன் என்று கூறப்பட்ட, கற்பிக்கும் சாமர்த்யம் படைத்த அந்த ஒருவன் யார் என்று விளக்குகிறார். உதாரணமாக நம்பிள்ளையைக் காட்டுகிறார்.

இவ்வாறு ஸ்ரீவைஷ்ணவ பூர்வாச்சாரியர்கள் அன்று தொட்டு இன்று என் நினைவு பர்யந்தம் இப்படி வடமொழியும், தமிழும் என்னும் இருமொழியும் திகழ்ந்த நாவர்களாய் இருந்திருக்கின்றனர். (வியாக்கியான மேற்கோளுக்கான விளக்கம் - ஆழ்வார் கூறும் ’அந்தணன் ஒருவன்’ என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்றால் முதலில் துவய மந்திரத்தின் பொருளை நன்கு மனத்தில் பதியக் கேட்க வேண்டும். பின்னர் இதிஹாஸ புராணங்களைக் கற்க வேண்டும், பின்னர் பரபக்க வாதங்களை மறுக்க வேண்டி நியாயம், மீமாம்ஸை ஆகியவைகளைக் கற்க வேண்டும், இவ்வளவும் கற்று முடித்துத் தான் போதுபோக்குவது அருளிச்செயல் அநுபவத்தைக் கொண்டு என்றபடி இருக்க வேண்டும். அப்படி இருப்பவனைத்தான் இங்கு ஆழ்வார் கூறும் ‘ஒருவன்’ என்ற சொல் குறிக்கும்.) ஏன் இதைக் கூறுகின்றேன் எனில், இவ்வளவு படிப்பு உள்ளோடியிருக்கக் கண்டுதான் சின்ன சின்ன விஷயங்களில் கூட அவர்களுடைய சொல்லாட்சிகளும், பத்ததிகளும் நெடிய பாரம்பர்ய ஞானச் சூழலின் அர்த்தம் நிறைந்ததுவாய் இருக்கின்றன.

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாசாரியாரை முதன்முதலில் சந்திக்க நான் சென்ற போது (அது நடந்தது 30 வருஷங்களுக்கு முன்) இந்தப் பாசுர வரியைத்தான் சொன்னேன். ’இப்படிப்பட்ட ‘ஒருவன்’ என்று சொல்லலாம் ஒருவரைக் காண வேண்டும் என்று விரும்பினேன். அதனால் வந்தேன்’ - இதுதான் அவரிடம் நான் பேசிய அறிமுகப் பேச்சு. இப்பொழுது அந்த ஞாபகம் வந்தது.!

***

No comments:

Post a Comment