ஒன்று நிச்சயம் சார் - இவ்வாறு பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். அதாவது நிச்சயம் அடைந்தவர்கள், கொஞ்சம் அப்படியா இப்படியா என்று அல்லாடிக் கொண்டிருப்பவர்களுக்கு உறுதி தரும் வகையில் பேசும் போது இப்படி ஆரம்பிக்கின்றார்கள். இப்படித்தான் ஒருவர் செங்கண்மாலுக்கே சொல்லுகிறார். திருமாலுக்கு என்ன இப்படியா அப்படியா என்ற உறுதியற்ற நிலைமை உண்டா?
ஆமாம். பக்தியில் தோய்ந்த உயிர்களுக்கு என்ன தரலாம் என்பதில் திருமாலுக்கே கொஞ்சம் இப்படியும் அப்படியுமாக நிச்சயம் இல்லாத ஓர் அவஸ்தை ஏற்படத்தான் செய்கிறது. நினைத்துப் பார்க்கிறான் திருமால். என்ன உயர்ந்த பட்சமாகத் தான் தரமுடியும்? அந்த வானாடு.
ஆனால் பக்திக்கு ஈடாகுமா அந்த வானாடு? மிக உயர்ந்த நிலைதான். மாறுதல், தேய்தல், மங்குதல் அற்ற உயர்பெரும் பேறு. ஆனாலும் பக்தியின் அந்த உன்னதத்திற்கு ஈடாக என்றால்... பரவாயில்லை என்கிறீர்களோ... ஏதோ இருப்பதைத்தானே தரமுடியும்.... இல்லை இப்படிச் செய்தால் என்ன? ஒரு புது இன்னும் சிறப்பு மிக்க வானாடு ஒன்றையே புதிதாக இயற்றிவிட்டால் என்ன? இப்படி மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டிருக்கும் திருமாலிடம் உறுதி விளைவிக்கும் விதமாகச் சொல்கிறார் நம்மாழ்வார்.
ஒன்றுண்டு செங்கண்மால்! யான் உரைப்பது.
நீ பாவம். உன் அடியார்க்கு என் செய்வேன் என்றே இருத்தி நீ.
நீ அவர்களுக்கு அளிக்க முடிவதெல்லாம் அந்த வான் தான். நீ அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் அந்த வான் இருக்கிறதே அது உண்மையிலேயே அறுதியிலும் அறுதியாக மிகச் சிறந்தது என்றா எண்ணுகிறாய்?
இல்லை அதுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்...
உன்னுடைய அருமையான முடிவற்ற கல்யாணகுணங்கள் எனப்படும் பெரும்புகழ் இருக்கிறதே, அந்தப் புகழிலேயே தோய்ந்து கிடக்கும் உன் அடியார்களின் சிந்தை இருக்கிறதே, அதனுடைய சிறப்பு என்ன என்று உனக்குத் தெரியாதா? உன்ன்னுடைய புகழில் தோய்ந்த அவர்தம் சிந்தையின் செம்மையும், சிறப்பும், இனிமையும், பெருமையும் வேறு ஒன்றிற்கு உண்டா?
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ, நீ அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான்?
மனம் மொழியைத் தாண்டியதுதான் பரமபதம். ஆனால் திருமாலின் புகழில் தோய்ந்த அடியார்தம் சிந்தை, மனம் என்பது அதை விடவும் பெரியது என்று அந்தத் திருமாலுக்கே ஐயம் தீர்த்து வைக்கும் நிச்சயத்தோடு நம்மாழ்வார் பேசினால் என்ன செய்ய முடியும்?
Imperfect world. When we are able to realise and see and get immersed in the glory of the Divinity impregnating that very imperfect world mundane, it turns out far superior to the eternal Transcendent state.
இதைத்தான் சொல்ல வருகிறாரோ நம்மாழ்வார்?
’இந்த உலகமே வேணாம்யா. ரொம்ப அசிங்கம் பிடிச்ச உலகம். ஒண்ணும் சொகமில்ல... எல்லாம் அல்பம், திரமில்லாதது, பொய்,மயக்கம் அவ்வளவுதான். பேசாம நேர வைகுந்தம் அடையற வழியைப் பார்ப்போம். பரமபதம் அங்க போனாத்தான் நிம்மதி’. - என்று ஒரு வழியாக முடிவு பண்ணினால் இவர் இப்படிச் சொன்னால் என்ன பண்ணுவது....
ஒன்றுண்டு செங்கண்மால் யானுரைப்பது உன்னடியார்க்கு
என்செய்வனென்றே இருத்தி நீ - நின்புகழில்
வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ நீ அவர்க்கு
வைகுந்தம் என்றருளும் வான்.
*
No comments:
Post a Comment