Monday, December 16, 2019

ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகரின் வாக்விசேஷம்

ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன் என்னும் வேதாந்தாசாரியரின் வாக் விசேஷங்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் அது பெரும்பாரதம் ஆகும். ஸ்ரீவேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள் ஒரு தனி அழகு. அவருடைய பாடல்களோ எளிமையும், சாரமும் ஒருங்கே வாய்ந்தவை. வாழ்க்கை ஆன்மிகமாக ஆகவேண்டும். ஆனால் இங்கே இப்பொழுதே வீடு வீடாமே என்கிறார் ஆழ்வார். ஸ்ரீவேதாந்த தேசிகரும் அதேகணக்கில் பேசும் ஓர் அருமையான பாட்டு -

எனக்குரியன் எனதுபரம் என் பேறு என்னாது
இவையனைத்தும் இறையில்லா இறைக்கு அடைத்தோம் 

தனக்குஇணையொன் றில்லாத திருமால் பாதம்
சாதனமும் பயனுமெனச் சலங்கள் தீர்ந்தோம்

உனக்கிதம்என்று ஒருபாகன் உரைத்தது உற்றோம்
உத்தமனாம் அவனுதவி யெல்லாம் கண்டோம்

இனிக் கவரும் அவைகவர இகந்தோம் சோகம்
இமையவரோடு ஒன்றுஇனிநாம் இருக்கும் நாளே.

*
முதல் குற்றம் எனக்கு உரியன் என்று நினைப்பது. அதைவிடப் பெரிய குற்றம் என்னைக் காத்துக் கொள்ளும் பொறுப்பின் பாரம் என்னுடையது என்று நினைப்பது. இதையெல்லாம் விடப் பெரிய குற்றம் என்னுடைய பேறு என்று நினைப்பது. இப்படியெல்லாம் நினைக்காமல் அறிவுடையோராக இதெல்லாம் யாருக்கு உரியதோ அந்த உயர்ந்த இறைவராகிய அவருக்கு உரியது என்று அவரிடம் ஒப்புவித்துவிட்டோம். தனக்கு இணை என்று ஒன்றே இல்லாத திருமால்பாதமே சாதனமும், பயனும் என்று சஞ்சலங்கள் இல்லாமல் தீர்மானமாக முடிவுக்கு வந்துவிட்டோம்.

’உனக்கு இதம் சொல்வேன் கேள்’ என்று அருச்சுனனை வியாஜமாகக் கொண்டு வந்த நின்ற வரும் அனைத்து உயிர்களுக்கும் அன்று ஹிதம் கூறினானே அந்த ஒப்பற்ற பாகன் அவன் உரைத்ததைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விட்டோம். பார்த்தால் அவனைப் போல் உத்தமன் உண்டோ? புருஷோத்தமன் அல்லவா? சேயைத் தாய் தாங்குவது போல் நம்மைத் தாங்கி அனைத்து உதவிகளும் செய்கிறான். இனி எந்தப் பேறு எந்த உருவில் வந்தால் என்ன? வந்துவிட்டுப் போகிறது. எது வந்தால் என்ன என்று கவலை அற்ற பேருக்கு ஏது சோகம்? இவ்வாறு சோகமே இல்லாமல் இந்த உலகிலேயே வாழும் காலத்தில் அந்த நித்ய சூரிகளுக்குச் சமமாக நாம் இருக்கும் நாள் எல்லாம் வாழப் பண்ணிய அந்தப் பெருமாயன் அவன் பெருமைதான் என்னே!

***

No comments:

Post a Comment