Monday, December 16, 2019

பரமனும் சீவனும் - வழக்கும் வியாபாரமும்

ஓர் அருளாளர் ஜீவனுக்கும், பரமனுக்கும் இடையில் ஒரு வியாபாரம் என்கிறார். ஓர் அருளாளரோ ஜீவனுக்கும்,பரம்பொருளுக்கும் இடையில் ஒரு வழக்கு என்கிறார். இரண்டிலும் பார்த்தால் ஜீவன் புத்தி கூர்மை உடையவனாக இருக்கிறான். (யார்? நாம் தான்). கடைசியில் வியாபாரத்தில் ஜயித்ததும் ஒன்றுமில்லாத பொருளைக் கொடுத்துவிட்டு டோடல் லாபம் அடைந்துவிட்டேன். பாவம் நீர் ஏமாந்து போய்விட்டீர் என்று பெருமிதம் கொள்கிறான். வழக்கில் ஜயிப்பதற்குப் பரமனைப் பாடாய்ப் படுத்துகிறான் ஜீவன். அகோர சத்தியமே பண்ணித்தான் பரம்பொருள் நம்மைத் தன்பக்கம் ஈர்த்துக்கொள்ள முடியும் என்றபடிதான் நம்முடைய ஆன்மிக ஈடுபாடு என்பதே இருக்கிறது. என்ன என்ன வழக்கு வியாஜ்யம் பேசுகிறோம்! காலம் காலமாக, வம்சாவளியாக, பூமி உருண்டை எங்கு பார்த்தாலும்... இந்த ஜீவன் கடவுளை நாடுகிறான் என்பது சும்மா தோற்றத்திற்குத் தெரியும் காட்சி. ஆனால் உண்மையில் அந்தப் பரம்பொருள் அன்றோ ஆதிக்கும் முன்பிருந்து அந்தத்தின் பின் வரையும் கூட நம்மை ஜயித்துக்கொள்ள என்ன பாடு படுகிறது. இதைத்தான் ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள் உண்மையில் சேதன லாபம் ஈசுவரனுக்கா? அல்லது ஈசுவர லாபம் சேதனனுக்கா? என்று கேட்கிறார்கள்.

இந்தக் காட்சியை நம் காலத்துக் கவிஞர் பெருமான் ஒரே பாட்டில் வைத்துச் சொல்கிறார்.

‘ஆழி இறைவர்க்கே ஆட்பட்டு யாம் பல்கால்
பாழில் பிறவி படிந்து துறை புகுந்து
ஊழிக் கடைநாளின் ஓங்குமணி வாயிலிலே
வாழி இவண் அடைந்தோம் வாயிலோய் தாள் திறவாய்!

தூங்காமல் பாம்பணையில் தோய்ந்து துவண்டயர்ந்தே
ஏங்கும் எனைக்காண்பான் என்றே வழிநடந்தேன்
தாங்கி முழந்தாள் தவமிருக்கும் அண்ணாவோ!
ஓங்குமணிக் கதவம் ஓடி நீ தாள் திறவாய்!

மாலிருந்த மாடமணி முன்றில் காத்து உன் இரு
கால் கடுக்கும் என்றே கருணையினால் ஈதுரைத்தேன்.
மாலிருந்த நெஞ்சம் மதர்த்து நடந்து என்னிரு
கால் கடுக்குமன்றோ கருணையினால் தாள் திறவாய் !’
(கவிஞர் திருலோக சீதாராம்)

முக்கியமாக நடுவண் பாசுரம் -- தூக்கம் வராமல் ஏங்கி நடந்து நாடிவரும் ஜீவனை, சேஷ சாயி அந்த அரங்க சாயி காண்பான் என்ற எதிர்பார்ப்பு ஒரு அர்த்தம் -

பாம்பணையில் தோய்ந்து துவண்டயர்ந்தே
தூங்காமல் ஏங்கும் எனைக் காண்பான்
என்றே வழிநடந்தேன்.

இன்னுமொரு அர்த்தம் --

தூங்காமல் பாம்பணையில் தோய்ந்து துவண்டயர்ந்தே ஏங்கும் -- யார் ஏங்குவது? அரங்கன். எதற்கு?

எனைக் காண்பான் என்றே -- இங்கு காண்பான் என்றால் காண்பதற்கு என்று பொருள்.

முதல் பொருள் - ஈசுவரலாபம் சேதனனுக்கு

இரண்டாம் பொருள் - சேதன லாபம் ஈசுவரனுக்கு

இத்தனையும் நமக்குப் புரியுமா? பரமன் படும் வேதனை? நமக்குத்தான் இது நமக்குப் புரியவில்லை என்பதையே ஒரு குறையாகக் கருதக் கூட மனம் வரமாட்டேன் என்கிறதே! அதை நினைத்து ஆழ்வார் படும் வருத்தம் கொஞ்சமா?

‘அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர்’ என்று நமக்கு சர்டிஃபிகேட் தருகிறார். அறிவினால் குறைவிலர் என்றால் பூரண அறிவு நமக்கு இருக்கிறது என்று பொருள் அன்று. ஆன்மிகம் நமக்குப் புரியவில்லையே, ஆத்ம ஞானம் ஆகிய உயிர் அறிவு நம்மிடம் இல்லையே என்ற குறைபாடே நம் நெஞ்சில் ஒரு நாளும் ஏற்படாத ஆட்கள் என்கிறார். அதெல்லாம் ஏதோ அக்கறையில் அப்படிச் சொல்கிறார். நாம பரிட்சையில பாஸ் ஆயிடுவோம். கவலைப் படாதீங்க.

*** 

No comments:

Post a Comment