Monday, December 16, 2019

ஸ்ரீராமகிருஷ்ணரும் என் தந்தையும்

ஸ்ரீராமகிருஷ்ணர்பால் உண்டான பக்தியினால் எனக்குப் பல குழப்பங்கள் இல்லாமல் போயின. பலருடைய குழப்பங்கள் எனக்குப் புரியாமலும் போயின. ஹிந்துமதம் என்பது எனக்கு இயல்பான ஆதிமுதல் வரும் மெய்மையாகப் புரியவருவது ஸ்ரீராமகிருஷ்ணர் தயவில்தான். ஸ்ரீராமகிருஷ்ணர் என்றால் விவேகாநந்தர், அன்னை சாரதாமணி தேவியார், நேரடிச் சீடர்களான சுவாமி பிரம்மானந்தர், சுவாமி அபேதாநந்தர், சுவாமி சிவாநந்தர் முதலிய பல மகான்களும் உள்ளடக்கம். ஸ்ரீரங்கத்தில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் திருப்பராய்த்துறை தபோவனம் செல்வது என் அடிக்கடி வழக்கம். அங்கிருந்த பிரமச்சாரிகளுடன் தங்கிவிட்டு மறுநாள் வருவது. அப்பொழுதெல்லாம், பொழுது ஏன் இவ்வளவு கண்மூடி வேகத்துடன் பறக்கிறது என்று வருத்தமாகிவிடும். மீண்டும் வரப்போகிறேன் என்றாலும் சத்சங்கத்திலிருந்து பிரிவு என்பது வாட்டும். மஹாசிவராத்திரியின் போது இரவெல்லாம் கண்விழித்துத் தோட்டத்தில் நடுவே ஹோமத் தீ வளர்த்து, அனைவரும் புடைசூழ அமர்ந்திருப்போம். நடுவில் தீயின் முன்னர் உருவெடுத்த தீ என சுவாமி சித்பவாநந்தர் அமர்ந்திருப்பார். சிவநாமம் முழங்க தீவளரும். பின்னர் பின்ஜாமத்தில் சிவன் கோயில் சென்று வழிபடல்.

இதற்கும் அடிப்படையாக என் தந்தையின் வளர்ப்பு, அதன் முக்கியத்துவம். ஏனெனில் பலருக்கும் குழப்பமாக இருக்கும் பிரச்சனையான ஜாதி என்பது எங்கள் சிந்தனையில் படாதவாறு வளர்த்தவர் எந்தையார். வீட்டுப் பூஜையறையில் ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் மட்டும். குழந்தையிலிருந்தே அவர் அடிக்கடி சொல்லி வளர்த்த பாடல்கள் பாரதியின்பாடல்கள். அவருடைய ஆழ்ந்த ஈடுபாடு என்றால் அது ஷேக்ஸ்பியர், பாரதி, ஸ்ரீராமானுஜர், காந்தி, வில் ட்யூரண்ட், சுத்தாநந்த பாரதியார், இன்னும் பல மகனீயர்கள். அவரும், ப்ரொஃபஸர் கமலாபதியும் சேர்ந்து பல நாடகங்கள், ஷேக்ஸ்பியர் மற்றும் தமிழ் நாடகங்கள் 50, 60 களில் மேடையேற்றினர். ப்ரொஃபஸரின் வீட்டுக்குப் போகும் போது தவறாமல் என்னையும் கூட்டிப் போவார், மலைக்கோட்டை மீது தெருவில் வீடு. மேல்கட்டில் அவருடைய ஸ்டடி ரூம். ஆங்கில இலக்கியம் அங்கு உருக்கொண்டு நடமாடும். இருவரும் சேர்ந்தால், அவர்களுடைய பிற நண்பர்களும் வந்துவிட்டால் அப்புறம் காலக் கப்பலுக்கு ஓயா வேலைதான். பல உலகங்களைப் பார்த்துவிட்டேன் என்று அப்பொழுதே நான் நினைப்பதுண்டு. கொஞ்சம் பிஞ்சில் பழுத்ததாய் ஆகிவிட்டேனோ என்று பின்னால் நினைத்ததுண்டு. எப்படியோ பல துறைகளிலும் எனக்குத் தெரியாமல் என்னை ஆளாய் ஆக்கிக் கொண்டிருந்த தந்தையின் அக்கறை அது என்பதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை. தந்தையோடு இருப்பதைத்தான் நான் விரும்பினேன் என்பது எனக்கு அப்பொழுதே பிரக்ஞையாக ஆன விஷயம். என்னுடைய முதல் தோழனும் என் தந்தையே.

எனவே, சாதி என்பது எனக்கு அந்நியமான விஷயம் என்பதை எனக்குச் சாதித்துக் கொடுத்த பெருமைக்கு முதல் மரியாதை என் தந்தைக்கே தகும். பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் விவேகாநந்தரில் ஆழ்ந்து போன போது இந்த அடிப்படைக் கல்வி எனக்கு மேலும் ஆழமாகி விட்டது. அதேபோல் ‘மறந்தும் புறந்தொழாமை’ என்னும் கண்ணோட்டமும் எனக்கு ஏற்படாமல் போனது தந்தையின் அணுகுமுறையால். அனைத்தில் இருக்கும் உயர்ந்த விஷயங்களைத் தோய்ந்து ரசிப்பவர். அவ்வாறு இரசிக்கவும் கற்றுக் கொடுத்தார். மாதம் ஒருநாள் ஆபீஸில் இருக்கும் நண்பர்களோடு திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் ஒரு ஞாயிறு கூட்டு பூஜை இருக்கும். வருடாந்திர ஸஹஸ்ரநாம பூஜை ஜனவரி முதல் தேதி. அதற்கு வேண்டிய பிரசாத பை தயாரிப்புகள் எங்கள் வீட்டில் நடக்கும். மறுநாள் அங்கு ஒரு சின்ன பாரத சமுதாயமே வந்திருக்கும். ப்ரொஃபஸரைப் பார்க்கப் போகும் பொழுது மலைக்கோட்டைப் பிள்ளையார் சந்நிதியில் வழிபாடு. தம் மக்கள் எப்படி வளர வேண்டும் என்று நினைத்தாரோ அப்படி வளர்க்க அவர் அறிந்திருந்தார். அதுவும் மனத்தில் எண்ணங்கள் ரீதியாகவும் சிடுக்குகள் நீங்கி நேரிய வழியில் செலுத்தும் ஆசானாகவும் ஒரு தந்தை தன் மக்களுக்கு அமைவது அந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் அருள்தான் என்று நினைக்கிறேன்.

ஆங்கில இலக்கிய மணமும், தமிழ் இலக்கிய மணமும், வடமொழி இலக்கிய மணமும், பிரெஞ்சு இலக்கிய மணமும் ஒருங்கே கமழ்ந்த வீடு எங்களுடையது. என் தந்தை ஸ்ரீ ஆர் வேணுகோபால் அவர்களும், அவரது ஆசான் ஆங்கிலப் பேராசிரியர் சி எஸ் கமலாபதி - இருவரும் சேர்ந்து எனக்கு அறிமுகப்படுத்தாத துறையே இல்லை எனலாம். Love of books and learning இவர்கள் எனக்கு அளித்த ஆசீர்வாதம். திரு சி எஸ் கமலாபதி அவர்களின் வீடு எனக்காக பிரத்யேக அனுமதி அளிக்கப்பட்ட நூலகமாகத் திகழ்ந்தது. அன்றே உலகில் எங்கு புதிய திசைகள் திறந்தாலும் அதைப் பற்றி ப்ராண்ட் ந்யூ நூல்களைத் தருவித்துத் தானும் வாசித்து, நான் தொணப்பி வாங்கி வாசிக்க வசதியாக இருந்தவர். 1971, 1972 லேயே இவர் தொடர் சொற்பொழிவுகள் தந்துகொண்டிருந்தார் ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூலில், இலக்கியம், உள இயல் துறைகள், மேலை நாட்டு கருத்தியல் துறைகள் ஆகியன பற்றி. தந்தையும், அவரது நண்பர்களும் மும்முரமாக அவரது சொற்பொழிவுகளை நடத்துவிப்பதில் ஊக்கமாக இருக்க, எனக்குச் சிறு வயதிலேயே உலகம் எங்கும் மன சஞ்சாரம்.

வில் ட்யூரண்டின் The Pleasures of Philosophy என்று ஒரு நூல். இதை நூலாக நானாக வாசித்தது பின்னால். ஆனால் அதற்கு முன்னமேயே சிறு வயதிலேயே இந்த நூலைத் தந்தை படிக்கக் கேட்டும், ஞாயிறு அன்று உணவுக்குப் பின் தந்தைக்குத் தூக்கம் வரும் வரை படித்துக் கொண்டிருந்துமே பல முறை இந்த நூலைப் படித்தும் கேட்டும் முடித்திருக்கிறேன். நிச்சயம் என்னைப் போல் Educational curriculum, both ancient and modern, both eastern and western ஒருங்கே அனுபவித்தவர்கள் மிகவும் அருமைதான்.

எனது தந்தையும், அவரது அண்ணா ஸ்ரீ உ வே ஆர் பத்மநாப ஐயங்காரும் சேர்ந்து பேச ஆரம்பித்தால் ஸ்ரீவைஷ்ணவத்தைப் பற்றியும், பூர்வாசாரியர்கள் பற்றியும் அங்கே வேறு ஓர் உலகம் திறந்துவிடும். இரவு 10 மணி, 12 மணி, மற்றவர்கள் தூங்கத் தொந்தரவாய் இருக்குமோ என்று அக்கறை பிறந்து மேலே மொட்டை மாடிக்குப் போய் இருவரும் தொடரும் சம்பாஷணை 2 மணி வரை - சமயத்தில் பெரியப்பா ஊரிலிருந்து வந்தால் இந்தக் கொண்டாட்டம் எனக்கு. தூக்கம் எல்லாம் எனக்குப் பறந்துவிடும். அவர்களுடன் ஓரமாகச் சுருண்டு அடித்து முடங்கியபடிக் கேட்டுக் கொண்டிருப்பேன். 'ஏண்டா உனக்குத் தூக்கம் வல்லையா?' என்று பெரியப்பா எப்பொழுதாவது கேட்டால் எரிச்சலாக வரும். ஏனென்றால் சமயத்தில் தந்தை ஏதோ ஒரு மூடில் 'ஏய் போ போய்ப் படு.' என்று துரத்திவிட்டுவிட்டால்..! என்ன செய்வது. அதனால் அவர் கேள்வி ரிஜிஸ்டர் ஆகுமுன் ஏதாவது கேள்வி கேட்டு வேறு ஓர் அன்க்டோட்டுக்குத் திருப்பி விட்டுவிடுவேன் பேச்சை.

எத்தனை பிறவிகள் பிறந்தாலும் பரவாயில்லை. ஆனால் அதே பெற்றோருக்கு, அதே பெரியப்பாக்களுடன் அமையும் என்றால்... எனக்கு மோக்ஷம் எல்லாம் வேண்டாம். மீண்டும் மீண்டும் ஸ்ரீரங்கத்தின் வீடுகளில் பிறப்பேனாக. ஆனால் என் தந்தை என்னை மீண்டும் மகனாகப் பெறுவதற்குச் சம்மதிப்பாரா என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான். போதுமே ஒரு பிறவிக்கு.. என்று அவர் கைகூப்பாத குறையாக நடந்துகொண்டிருந்திருக்கிறேனோ என்ற குற்ற உணர்வு எனக்கு உண்டு.

*** 

No comments:

Post a Comment