Monday, December 16, 2019

வைராக்கியம் ஒரு சாதுர்யம்

வைராக்கியம், தியாகம், துறவு என்ற வார்த்தைகளைக் கேட்டதுமே நம்மில் பலர் நினைப்பது என்னவெனில் திருவோடு, காவித்துணி, காடுமேடு, காட்டிற்கு ஓடு என்றபடிதான். ஆனால் உண்மையில் வைராக்கியம், தியாகம், துறவு என்பது முக்கியமாக நம் பார்வையில் ஏற்பட வேண்டிய மாற்றம். இந்த உலகை நாம் அதிகபட்ச இன்பங்களைப் பெறுவதற்கான இடமாக மட்டும் காண்போமாகில் அப்பொழுது நமது ‘நான்’ என்பதன் ஆட்சியில் ஆசையின் பிடியில் அகப்பட்டுக் கொள்கிறோம்.

ஆனால் இந்த உலகம் என்ற முழுமையில் நமது இடம் என்ன, இந்த உலகின் உள் உண்மை, நம்முடைய ‘நான்’ என்பதன் உட்பொருள் இவற்றில் கவனம் கொள்ளும் பொழுது நமது அகங்காரம் ஆசையின் பிடியில் அகப்படாமல், உண்மையின் தொடர்பு கொண்டதுவாய் ஆகிறது. நம்முடைய அகங்காரம் என்னும் பொந்திற்குள் உலகையே கட்டி உள்ளிழுக்கும் பைத்தியக்காரத்தனம் அகன்று, அகண்ட உலகில் அடங்கிய ஓர் உண்மையாய் ஆகிவிடுகிறோம். அப்பொழுது நம்மிடம் பிளவுபடாத அறிவும், பிரபஞ்சத்தோடு பொருந்திய உணர்வும், அதனுடைய கருவியாய்ப் பொருந்தி செயல்படும் மகிழ்வும் ஏற்படுகிறது.

நாம் துறப்பதோ வெறும் துச்சத்தை, அல்பமான சிறிய அகந்தையின் நடுக்கத்தை. பெறுவதோ நமக்கு இயல்பான அகண்ட அனுபவத்தை. ஆனால் இந்த வியாபாரம் நமக்கு முதலில் புரியமாட்டேன் என்கிறது. சிறுமை இனிக்கிறது. குறுகிய லாபம் கவர்வதுவாய் இருக்கிறது. ஆனால் அருளின் வல்லமை நம்மைத் துணிய வைக்கும் போது நமக்குச் சிரிப்புதான் வருகிறது. அப்பொழுது என்ன கூறுவோம் என்பதைச் சொல்லிக்காட்டுகிறார் மாணிக்கவாசகர் :

‘தந்தது உன் தன்னைக்
கொண்டது என் தன்னை
சங்கரா!
ஆர்கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றில்லா ஆநந்தம் பெற்றேன்.
யாது நீ பெற்றது ஒன்று என்பால்?’

இதையே ஈசாவாஸ்ய உபநிஷதம் கூறுகிறது --

ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாஞ் ஜகத்|
தேந த்யக்தேந புஞ்ஜீதா மா க்ருத; கஸ்யஸ்வித் தனம் ||

இதில் உயிரான சொற்றொடர் -- த்யக்தேந புஞ்ஜீதா. தியாகத்தால் இந்த உலகை அனுபவி. ஆசையால் அனுபவிக்கக் கற்றோம் நாம். அதுதான் தவறாகப் போயிற்று. தியாகத்தால் இந்த உலகைப் புரிந்துகொண்டால் பின்னர் ‘அந்தம் ஒன்றில்லா ஆநந்தம் பெற்றேன்’ என்று நாம் சொல்லத்தானே வேண்டும்? இந்த வியாபாரத்தில் நம்மிடம் தோற்றுப் போக பரம்பொருளும் விரும்பத்தான் செய்கிறது.

***

No comments:

Post a Comment