Monday, December 23, 2019

சிறந்த தீர்த்தாடனம் எது?

யுதிஷ்டிரர் :- பாட்டனாரே! எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் சிறந்த தீர்த்தம் எது என்று சொல்லுங்கள். எதனால் சிறந்த சுத்தம் உண்டாகிறது என்பதையும் எனக்கு விளக்குங்கள் ஐயா!

பீஷ்மர் :--- சத்யம் என்னும் துறையும், தைரியம் என்னும் மடுவுமாக உள்ள ஆழமும், பரிசுத்தமும் தெளிவுமான மனம் என்பதுதான் மிகச் சிறந்த தீர்த்தம். அந்த மனம் என்னும் தீர்த்தத்தில் அழியாத சத்வகுணத்தைப் பிடித்துக்கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். தவம், ஞானம், பணிவு, சத்யம், மனம் வாக்கு உடல் ஆகியவற்றின் ஒற்றுமை, கொல்லாமை, எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்பு, ஐம்புலன்களையும் அடக்குவது, மன அடக்கம் ஆகிய இவை மேற்சொன்ன மிகச்சிறந்த தீர்த்தமாகிய மனத்தில் புனித நீராடுவதால் ஏற்படும் தூய்மைகளாகும்.

ஜலத்தினால் உடம்பு நனைந்தவன் ஸ்நானம் செய்தவன் என்று சொல்லப் படுவதில்லை. இந்திரிய ஜயத்தினால் சுத்தமானவன் எவனோ அவன் தான் ஸ்நானம் செய்தவன். அவன் உள்ளும் புறமும் பரிசுத்தனானவன். கிடைக்காத விஷயங்களில் ஆசையும், கிடைத்த விஷயங்களில் எனது என்னும் பற்றும் இல்லாமலும், பிறகு விருப்பம் உண்டாகாமலும் இருப்பவர் எவரோ அவருடைய சுத்தம்தான் சிறந்த சுத்தம். ஒழுக்கத்தின் தூய்மையே பெரும் தூய்மை. புனித நீரில் குளிப்பதால் உண்டாகும் தூய்மை அதற்குப் பிற்பட்டதுதான்.

ஞானத்தினால் உண்டாகும் சுத்தம் எதுவோ அது எல்லாவற்றிற்கும் மேலானதாக நினைக்கப் பட்டிருக்கிறது. பிரம்ம ஞானமென்னும் ஜலம் நிரம்பின மனத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தவர்கள் எவரோ அவர்தாம் ஆத்மாவைக் கண்ட ஞானிகள்.

(ஸ்ரீமத் மஹாபாரதம்) 

No comments:

Post a Comment