Monday, December 30, 2019

வாழ்க்கைக்கு மிக முக்கியம் ஆன்மிகம்

வாழ்ந்து அனுபவித்துப் பின் ஓய்ந்து அடங்கி முதுமையில் இறப்பை எதிர்நோக்கியிருக்கும் பொழுது கவலைப்பட வேண்டியது மதம் என்னும் சமாசாரம். வாழும் போது ஆன்மிகம் பற்றிக் கவலைப் படுபவன் வாழ்வை இழக்கிறான். -- இதுதான் உலக நடை போதிக்கும் யதார்த்தமான வார்த்தை. பொறிபுலன்கள் செயலோடு இருக்கும் பொழுது எதற்கு கடவுள், முக்தி இந்தப் பேச்செல்லாம்? இவ்வாறு எண்ணும் பச்சை மனம் பல அனுபவங்களைப் பெற்று, வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் புரிய ஆரம்பித்து, அப்பொழுதும் உடல் வலுவெல்லாம் இழந்த காரணத்தால் மட்டுமே இறப்பு என்ற ஒன்றை நினைவை விட்டு நீக்க முடியாத காரணத்தால் ஏதோ கடவுள், முக்தி, ஆன்மா என்ற பேச்சுகளுக்கு வந்து சேருகிறது. அனுபவித்துத் தீரக்கூடியனவல்ல ஆசைகள். ஆனாலும் ஆசையின் மாயச் சைகை கடைசி மூச்சு பிரியும் முன்னரும் கூட ஜீவனை மயக்காமல் விடுவதில்லை.

ஆனால் வாழ்வின் இறுதியில் தன் ஆன்ம நலத்தைப் பற்றியே ஓர் உயிர் முழு மனத்துடன் ஈடுபடுவதுதான் உரியது. சுவைத்துக் களைத்த உலக விஷயங்களைப் பற்றி அப்பொழுது எண்ணிக் கொண்டிருப்பது யாது பயன் தரும்? இந்தக் கணக்குதான் சாதாரணமாக உலகினர் போடும் லாப நஷ்டக் கணக்கு. இந்தக் கணக்கு புரிகிறது. ஆனால் இந்தக் கணக்கு சரியா?

நஞ்சீயர் சரம தசையில் இருக்குங்கால், குட்டக்குடி இளையாழ்வார் என்பவர் அவரிடம்,

'ஏனய்யா! த்வயம் என்ற ரஹஸ்ய ரத்னமான மந்த்ரத்தைத் தாங்கள் சரமதசையில் இருக்கும் இதுகால் சிந்தை செய்தால் நன்றாக இருக்குமே!' என்று கூறுகிறார்.

நஞ்சீயர் -- ஏனய்யா! அது என்ன உம்முடைய எண்ணம்? "உனக்கு அநுசந்திக்க வேண்டியிராதே எனக்கு இப்போது வேண்டுகிறதென்? நடையாடித் திரிவார்க்கு வேண்டாதே கிடப்பார்க்கு வேண்டியோ இருப்பது?"

ஸ்ரீவைஷ்ணவம் சொல்லும் மதம் ஆன்மிகம் என்பதில் உயர்ந்த மிகச் சிறந்த மந்த்ர ரத்னம் த்வயம். அதுவே உலகில் நடையாடித் திரிவார்க்குத்தான் மிக அதிகமாகத் தேவைப்படுவதாம். வாழுங்காலத்தில் ஆன்மிகம் எதற்கு? எல்லாம் 60 வயது மேல் பார்த்துக் கொள்ளலாம் என்ற உலக நடை எண்ணத்தை மண்டையில் ஓங்கி அடிக்கிறது நஞ்சீயரின் வார்த்தை. ஒன்றை ஞாபகம் கொள்ள வேண்டும். நஞ்சீயர் ஏதோ உபதேச பீடத்தில் உட்கார்ந்தபடி சாவகாசமாக உரையாடிய வார்த்தை அன்று இது. சரம தசையில் நின்று கொண்டு பேசும் வார்த்தை. மதம் யாருக்கு? வாழ்பவனுக்கா? அல்லது இறக்கும் தருவாயில் இருப்பவனுக்கா? வழக்கப்படியான கணக்கு உதைக்கிறது.

"உனக்கு அநுசந்திக்க வேண்டியிராதே எனக்கு இப்போது வேண்டுகிறதென்? நடையாடித் திரிவார்க்கு வேண்டாதே கிடப்பார்க்கு வேண்டியோ இருப்பது?"

இதில் முக்கியமானது என்னவென்றால் நஞ்சீயருக்கு அவ்வாறு சொன்ன குட்டக்குடி இளையாழ்வாரும் ஏதோ சாதாரண மனிதர் அன்று. அவர் ஏன் அவ்வாறு சொன்னார் என்பதும் சாத்திர உட்பொருள் நிறைந்தது. அந்திம ஸ்ம்ருதி என்பது ஒன்று. கடைசியில் உயிர் பிரியும் தருவாயில் என்ன நினைவோடு ஜீவன் பிரிகிறதோ அந்த நினைவு அந்த ஜீவனின் மறுமையைப் பெரிதும் பாதிக்கிறது என்பதுதான் அந்திம ஸ்ம்ருதி. வாழ்வு முழுவதும் பிரம்ம சிந்தனையில் காலம் கழித்த ஜடபரதருக்கு அந்திம ஸ்ம்ருதியில் மானைப் பற்றிய கவலை வந்ததால் அடுத்த பிறவியில் அவர் மானாய்ப் பிறக்க வேண்டியிருந்தது என்று சாத்திரங்கள் சொல்கின்றன. இந்தக் காரணம் பற்றியே அந்தக் காலங்களில் கடைசி அந்திம காலங்களில் பகவந் நாம ஜபம், ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம் இவற்றையே செய்துகொண்டிருப்பார்கள். கூட இருப்பவர்களும் இவ்வாறே செய்வது வழக்கம். எந்த நேரத்தில் உயிர் பிரிய நேர்ந்தாலும் பகவத் ஸ்மரணை இருக்கும் என்பதற்காக. குட்டக்குடி இளையாழ்வாரும் அந்த நோக்கத்திலேயேதான் அவ்வாறு கூறியிருக்கிறார். நஞ்சீயர் என்ற பெருமானாரின் சிறப்பை அவரும் நன்கு உணர்ந்தவர்தாம். அதனாலேயே கூட அப்படிப்பட்டவருக்கு அந்திம ஸ்ம்ருதி சிறப்பாக அமைய வேண்டுமே என்ற ஆதங்கத்தில் அவ்வாறு கூறுகிறார்.

ஆனால் த்வயம் என்று சொல்லப்படுவதான ரஹஸ்ய ரத்னமும், மந்த்ர ரத்னமுமான அருந்தனமானது விசேஷமான உட்பொருள் கொண்டது. “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்ற பிரார்த்தனையின் பாரிப்பை உட்கிடையாய்க் கொண்டது. அதற்கு கால பேதம் எதுவும் கிடையாது. அங்கு இங்கு என்ற மறுமை, இம்மை பேதங்கள் எதுவும் கிடையா. எங்கிருந்தாலும் அவன் உகப்பிற்காக ஆன தொண்டெல்லாம் இயற்றுவதே ஜீவனுக்குப் பரமாநந்தமானது என்பதுதான் அந்த மந்த்ரத்தின் உட்பொருள்.

எனவே குட்டக்குடி இளையாழ்வார் அந்திம ஸ்ம்ருதிக்காக த்வயத்தை அநுசந்தானம் செய்யச் சொன்னதும் நஞ்சீயருக்கு உள்ளே சிரிப்பு வந்துவிட்டது. ‘அடடே! இவர் த்வயத்தை ஏதோ சாதாரண மந்த்ரம் போல் நினைத்து அந்திம ஸ்ம்ருதிக்காக நமக்குப் பரிந்துரைக்கிறாரே! அதன் உள் பொருள் இவர் அறிந்தபாடில்லையே! இந்த ஜீவன் இந்த உடலோடு சேர்ந்திருந்தாலும் அல்லது இதைவிட்டுப் பிரிந்தாலும் ஒரு பொருட்டில்லையே! என்றும் நிலைத்த ஆத்மாவின் நித்ய தர்மத்தைப் போதிப்பது அன்றோ அந்த மஹாமந்த்ர ரத்னம். அவன் உகப்பே பேறு, அவனுக்காகவே தொண்டு, அவன் உகக்க அதுகண்டு கொள்ளும் ஜீவனின் உகப்பும் சைதந்யம் பெற்ற பலன் அவ்வளவே. மற்றபடி நிலவுலகில் அவன் வைத்தாலும் சரி, அல்லது தன் திருநாட்டில் கொண்டு போய் வைத்தாலும் சரி என்ன வேறுபாடு? சதா சர்வ காலமும் ஜீவன் அவனுடைய கைங்கர்யபரனாகவே இருத்தல் அன்றோ ஆத்மாவின் நித்ய தர்மம்! அதையன்றோ இந்த மந்த்ரம் போதிப்பது. அதையெல்லாம் நாம் சக்தராய் இருந்த காலத்தில் இவர் நம்மிடம் கேட்டிருந்தால் விளக்கமாகச் சொல்லியிருக்கலாமே! நமது இந்த நிலையில் நம்முடைய நன்மைக்கென்று இவர் சொல்லும் வார்த்தையில் இவர் அந்த மந்த்ர ரத்னத்தின் சீர்மையை உள்ளவாறு அறியவில்லைபோல் தோன்றுகிறதே! “ என்று உள்ளம் கிருபை கொண்டவராய் நஞ்சீயர் சுருக்கமாக இவ்வாறு கூறினார்.

“உனக்கு அநுசந்திக்க வேண்டியிராதே எனக்கு இப்போது வேண்டுகிறதென்? நடையாடித் திரிவார்க்கு வேண்டாதே கிடப்பார்க்கு வேண்டியோ இருப்பது?”

***

No comments:

Post a Comment