Wednesday, December 25, 2019

திருவரங்கர் திருத்தாளச்சதி

பலவருஷங்களுக்கு முன்பு, 2009ல் என்று ஞாபகம், திரு சந்தக்கவி ராமசாமி (ஸ்ரீரங்கம்) அவர்கள் ஒரு கூட்டத்தில் சொன்னார். -- "திருத்தாளச்சதி என்ற சந்தத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே பதிகம் பாடியிருப்பது திருஞானசம்பந்தர் மட்டுமே. அந்தச் சந்தம் அமைந்திருக்கும் விதம் இந்தப் பாடலில் தெரியும். ’தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத் தாமேபேணா தேநாளுஞ் சமணொடு உழல்பவரும்’ (திருக்கழுமலம் பதிகம், பாடல் 10, திருஞானசம்பந்தர் தேவாரம்). வேறு யாரும் அந்தச் சந்தத்தில் முயற்சி செய்யவில்லை".-- என்றார். கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்து அதே சந்தத்தில் ஒரு பதிகம் பாடி அவருக்குக் காண்பித்தேன். திருத்தாளச்சதி என்ற அந்தச் சந்தத்தில் பாடிய பதிகம்தான் 'திருவரங்கர் திருத்தாளச்சதி' என்னும் பத்து பாட்டு.) திருஞானசம்பந்தர் அருள்வாராக.
*
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

1)
ஸ்ரீரங்க மாறெங்கும் திருவளர்சோ லைகளாம்
ஆறேபாயா ஊற்றேயாய்த் தடமணல் திடரிடவும்
சேரங்க மாறோடு நலந்திகழ்வே தங்களாம்
தாமேகாணா காட்டேயாய் தரிசனம் தருவதுவாம்
வாருங்கள் மாலோடு வலமிடமாய்ச் சுற்றுணா
வாராமாறா வேவாநோய் வருவினைத் துரிசறவும்
சேருங்கள் சேலோடு கயலயல்பாய்ப் பைங்கணாள்
நேரேமாலே சேர்ப்பாளாய்த் தருமருள் திருமகளே.

2)
போகாமல் தேடாமல் பொறுமையுடன் புங்கமார்
பாகார்தேன்வாய்ப் பேராச்சொல் பிதற்றிடும் புரிவளையீர்
வாகான கோல்நாடிப் படர்கொடியும் பற்றுமே
ஏகாதேநீ நேர்ந்தேயுன் உளந்தனை விடுத்தனையே
சோகாத்தென் காவாதென் சுடரடிக்கே சுந்தரீ
சேர்ந்தேயேகாய் சேராத இழவெலாம் இனித்தீர
மீகாமன் கைசேர்ந்த கலமெனவே காத்திராய்
மோகாவேசம் மீறாதே மனமருள் திருமகளே.

3)
அட்டிட்ட பால்சூடு பொறுக்குமென்று பாங்கராய்
தாமேதேராத் தாயாகித் தருவுளக் கனிவினிலே
தொட்டிட்ட தொல்லார்வம் தொடரவும் தாங்கொணாத்
தோயாநின்ற மாயற்கே தொடர்ந்தநம் வழிபடலே
விட்டிட்டு முற்றும்நம் உளமயல்சேர் பற்றெலாம்
தாளேநேர்கோள் என்றேயாம் தடங்கடல் கிடந்திடுமால்
மட்டிட்ட செம்பாத மலரடிக்கே ஆட்களாய்
மாலேயாகி மாயாத உளம்தரும் திருமகளே.

4)
பட்டர்கோன் ஆண்டாளும் பரமனருள் மாறனும்
சேர்ந்தேகண்டார் மூவர்தாம் திருவருள் நெருக்குறவே
இட்டத்தால் ஈசன்தான் சுருட்டியதன் பாம்பணை
மாலேதானே மாலாகித் தொடர்ந்திடும் மழிசையர்கோன்
கட்டிட்டே பூத்தொண்டு கதியருள்தாள் தூளியும்
விட்டேமாற்றிக் கட்டிட்ட மதிள்திருக் கலியனையே
கொட்டிட்டுப் போருக்கே புறப்படும் குலப்பெருமாள்
மீண்டேவந்த சேனைக்கே திரும்பிடு திருவருளே

5)
பாணர்கோன் பண்ணிற்கே குலமுனிவன் தோளுலாய்
நேரேசென்றே ஆழ்ந்தாராய் அரங்கன தரவணையில்
காணில்நல் சோதிக்கே கதிதனைத்தான் தேடியே
தெற்கேவந்தே சேர்ந்தாராய்ப் புளிமரத் திருநிழலில்
மாண்சேயாம் மாறன்முன் மதுரகவி கேட்டதால்
கேள்விக்கேதான் மாறாடி அரும்பொருள் அளித்தனரே
சேண்நீண்ட மேல்நாட்டில் குழுமிடுநல் நித்தராம்
தாமேவேண்டிக் கேட்பாராய்ச் செவிமகிழ் திருமொழியே.

6)
கேட்டிட்ட கேள்விக்கே தலைகவிழும் வித்தனாய்த்
தானேகேட்ட கேள்விக்கே தகும்பதில் பெறுபவனாய்ப்
போட்டிக்கே வந்திட்டுப் புவியரசிப் பார்வையால்
ஆளத்தானே வந்தாராய் அரசினில் பகுதிபெற்றே
நாட்டிற்கு நன்மைக்கே நலந்திகழும் சேர்ப்பராய்ச்
சென்றேசென்றே தந்தாராம் தழையுடன் திருநிதியே
வாட்டங்கள் போக்கும்நல் வரமருளும் வார்த்தையால்
ஆறேசூழ்ந்த தீவத்தில் தரிசனம் திருவருளே

7)
நானென்னும் எண்ணத்தில் எனதெனுமாம் எண்ணமாய்ப்
பாடேயாகிப் பந்தத்தில் படுமிடர்ப் பெருந்துயராய்
வானென்னும் வீடேயாய் விரசையிலே வந்ததாம்
ஆன்மாதானே ஈடேற இரங்கிடும் இறையவனே
கோனாகிக் குன்றத்தில் பவக்கடலும் மட்டமாய்
வானோர்தாமே காண்பாராய் மருவிடும் திருமலையே
தானாகி நின்றிட்ட திருவுருவில் இட்டமாய்த்
தேனேபாலே நேராகி உகந்தருள் திருவருளே.

8)
ஏழான சுற்றுக்கள் மதிளெனவே காக்குமாம்
தாழாதேநல் சார்ங்கம்தான் உதைத்திடு சரமழைபோல்
பாழைத்தான் நெல்செய்யும் பரமனது பற்றெனா
பாரேயான மூர்த்திக்கே அடங்குக நமதுளமே
ஊழாகி ஊட்டும்வல் இருவினையாம் கட்டிலா
ஒன்றேயான ஆன்மாவே இறந்திட விடிலிழவே
மாழாந்து நம்நெஞ்சம் மருவியதோர் நன்மையாய்
மாலேயாக மாலுக்கே அருள்செயும் திருமகளே

9)
தேரோடும் வீதிக்கே வடம்பிடிக்கும் நெஞ்சமாம்
நீராயோடும் வேர்வைக்கே நிலமகள் குடமுழுக்காம்
ஏரோடும் நன்செய்க்கே உழவுசெயும் மக்களால்
கூடிப்பாடிக் கோவிந்தா குழுமிய பெருந்திருத்தேர்
பேர்பாடும் நாவாயும் பெருகியதோர் அன்பெலாம்
நேரேகொள்வான் கோவிந்தன் நெருக்கிய இடைகழியாய்ச்
சீராடும் ஊரெல்லாம் சிறப்பனைத்தும் பொங்கிடா
வேரேயாகி வீட்டிற்கே விளைநிலம் திருவருளே.

10)
மாலுக்கே ஆசானாய் மயர்வறநல் லீட்டினால்
வீடேயிங்கே போந்தாற்போல் விளக்கிய விரிவுரையே
சேலோடும் போராடும் கயற்கணாளர் கண்டிடா
கண்ணேதானே ஆனந்தம் அரங்கரின் அடைக்கலம்யாம்
பாலோடும் பொன்மேனி பரிவுடைநல் பாங்கெனா
யோகுக்கேயாய் நல்போகி நலந்திகழ் முனிவரனாய்
மாலுக்கே வையத்தை உரிமையென ஆக்கிடா
ஈடேகொண்டே ஆக்கும்பேர் வரமுனி திருவருளே.

*
சாற்றுக்கவி

11)
தட்டிட்டே முட்டிக்கைப் பதிகமொன்றே செப்பினார்
மேடைமேலே சந்தத்தார் புகலியர் எனவுரைத்தார்
மட்டில்லா ஆர்வத்தால் மடமையெதும் அஞ்சாதே
மானாவாரிப் பாட்டாகப் பதிகமி தனைமுயன்றேன்
விட்டிட்டே வாயாரச் சிரிப்பதுவே செய்வதால்
வாதைநோவே போகும்மே வழக்கமும் சிறப்பதுவாம்
இட்டத்தால் மோகன்தான் அரங்கரையே பாடினான்
நாணேயின்றித் திண்ணத்தால் நகைத்திடும் திருமகளே.

***
பெரிய ஜீயர் திருவடிகளே சரணம்! 

*

No comments:

Post a Comment