Monday, December 16, 2019

திருலோக சீதாராம் பற்றி

”தமிழ்க் கவிஞன் வாழ்ந்திருந்தான்
வாய்த்திட்ட ஊரின் மனிசர்களோ
அவன் பெருமை அறியாதார் எனினும்
மதியாதார் யாருமிலர்
மாகவிஞன் புகழைக் கேட்டறிந்து
கிளர்ச்சி தரும் கவியமுதம் வேட்டுக்
கேண்மை கொள நாட்டமுறும்
கிறுக்கர் ஒரு சிலரும்
பாட்டரசன் வாழ்கின்ற பர்ணகுடில் தேடிப்
பலசமயம் வருகின்ற பழக்கம்தான்”

--- என்று தாம் பாடிய ‘புகழ்க்கவிகை’ என்ற குறுங்காப்பியத்தில் விவரித்த கவிஞர் திருலோக சீதாராம் தம்மைத்தாம் ‘தன்சரிதப் பொருளாக’ இந்த வரிகளில் ஆக்கி வைத்திருக்கிறார். ‘கவிதையா? திருலோகத்தைக் கேட்டால் போதுமே!’ என்று நிலவிய காலம் ஒன்று உண்டு.

முதன்முதலில் இந்தப் பெயரை 1968, 69ல் கேள்விப்பட்டேன், நான் பத்து வயது சிறுவனாக இருந்த பொழுது. நாமக்கல்லில் என்னுடைய பேச்சிற்கு (பல பேச்சாளர்களில் ஒருவனாக அதுவும் சிறுவனாக) தலைமை தாங்க வரப்போகும் ஒருவராக அறிந்தேன். கூடவே, தந்தையின் கவிஞரைப் பற்றிய விவரிப்பு மனத்தில் பதிந்துவிட்டது. “ஆள் பார்த்தால் வாமனன் போல் குள்ளமாக இருப்பார். ஆனால் பேச ஆரம்பித்துவிட்டால், கவிதை தொடங்கிவிட்டால், விண்ணுக்கும், மண்ணுக்கும் பிரளயமாடி, திருவிக்கிரமனாக உயர்ந்து விடுவார். அவரிடம் பேர் வாங்கிவிட்டால் பெரிய காரியம்தான்” – இதுதான் என் தந்தை அளித்த விவரணம். நாமக்கல் கவிச்சோலை ஆனதும், நாழிகை வட்டில் நற்றமிழ் நறவம் ஊற்றித்தரும் குடுவையானதும், நினைவுகளில் இன்றும் தட்டாமாலையாடி வருகின்றன. நாமக்கல்லில் பாரதி பேச்சின் சந்தர்ப்பத்தில் சற்றே நேரம் கடந்துவந்த கவிஞரை திரு காசிராஜன், திரு சத்தியசீலன், திரு அறிவொளி, திரு புத்தனாம்பட்டி ராஜகோபாலன் ஆகியோர் அவருடைய கவிதை ஒன்றை அவர் வாயால் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டனர். அப்பொழுது தாம் பாடிய ‘சந்தையில் கவிதை’ என்ற கவிதையை இசைத்துக் காட்டினார்.

“மச்சு வீடுதான்,
மாடியில்.....கூரை இல்லை.
என்னினும்..இருள்வான் உண்டே !

உச்சியில் கொடுங்கை
உளுத்துக் கொட்டும்
உள்ளத் தினவின்
ஒளித்துகள்,

அதனை ஒத்தி எடுத்து
ஒன்றாய்த் திரட்டி
ஒற்றைத் தெருவின் மூலையில்
நின்று கத்தினால் ---
தணியாக் காமமும்
கள்ளும்
கள்ள விலைக்குக் கவிதைக் கொசுரும்
வாங்கிடும் புண்ணியவான்கள்
யாரும் வரலாமன்றோ!

வாசலில் சேவல்
கூவிடு முன்னம்
கோட்டை மணியும் குழைந்தது;
கனவு குலைந்தது.

போ, போ
பைத்தியம்
உலகப் பக்குவம் இன்னும் பெற்றிலை,
கவிதையோர் பிழைப்பா?
உலர்ந்தவாய்
வெற்றிலைக்கு
வக்கிலை என்று
உலர்ந்த
வாய்வெற்றிலைக்கு
வக்கிலை என்று
அசை போட்டு
வெறும் வாய் வெளுத்தனை பொழுதாய் !

உச்சிப் பிள்ளையார்
ஊமையாய்ச் செவிடாய்
உறங்கிப் போன மலைமணி
வைகறைப்
பச்சைப் பிள்ளை
பாலுக்கழுவதைப்
பாரோர் கேட்கப் பறையறைகின்றது;

அவரவர் எழுந்து அவதிகள் எண்ணித்
தலைப் பொறியாகத் தவிப்பார்.
சந்தை இரைச்சலில்
கவிதை யாருக்கு வேணும்?
கற்பனை விட்டுக் கணக்கிதைப் போடு;
நேற்று மாலையில் நீட்டி முழக்கிக்
கோற்றேன் கவிதை கொப்பளித் திருந்த
கவிஞன் பெற்றியைக்
கற்பனை விந்தையைக்
கதைத்தாய் !
விமரிசனக் கடையும் விரித்தாய்.
கூட்டம் கொஞ்சமா?
கொண்டவர் யாரும் உண்டா?
அந்த உருப்படி
அச்சில் வார்த்தால்
யாரும் வாங்கிட வருவரா?

பிரதிகள்
அன்பளிப்பாக ஆளுக்கொன்றாய்
அளித்தால்
“நன்றே ஆ ! ஆ!’ என்பர்.
வெட்டிப் பிழைப்பு

கவிஞர் மறைந்தது 1973ல், மார்ச் 1972ல் எழுதுகிறார்: “இப்போதைக்கு நமக்கு, தமிழில் கவிதையும், ரசனையும், ரசிகர்களும் என்ற வட்டத்துக்கு வெளியேயுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை; அதற்கு அவசியமும் இல்லை. ஒவ்வொரு கணமும் இனிமை; ஒவ்வொரு மாற்றமும் விளையாட்டு. எதிலும் சிக்கி உழலாத மனம். வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது.”

1970 களில் என்று நினைக்கிறேன். இல்லை 1971 ஆகவும் இருக்கலாம். எந்தை திரு ஆர் வேணுகோபால் அவர்களுக்கும், கவிஞருக்கும் (கவிஞர் திருலோக சீதாராம்) ஸ்ரீரங்கத்தில் எங்கள் வீட்டில் ஒரு நாச்சியார் திருக்கோல உற்சவத்தன்று பெரும் வாக்குவாதம். விஷயம் என்னவென்றால், எந்தையார் வில்லியம் ஷேக்ஸ்பியரைப் பற்றி வியந்து கூறி வரும் பொழுது ‘ஷேக்ஸ்பியரின் கருத்துகள், அதன் விரிவுரையாளர்களான ப்ராட்லி போன்றோரின் துணை இன்றி உண்மைப் பொருள் விளங்கப் பெறுதல் கடினம்’ என்று கூறியதும், கவிஞர், ‘கவிஞன் நேரடியாக நமக்குப் பேசும்பொழுது குறுக்கே விரிவுரையாளர்கள் எதற்கு, பொருள் தரகு செய்ய? கவிஞன் பட்ட பிரசவ வேதனையை நாம் முனைந்து காணலே சுகம்’ என்று எதிர்வாதம் தொடுத்தார்.

உதாரணத்திற்கு ஹேம்லட்டிலிருந்து to be or not to be என்ற தனிமைச் சிந்தனை (soliloquy) எடுத்துக் கொள்ளப்பட்டது. எந்தையார் ‘to be ' என்பதும், ‘not to be' என்பதும் இருப்பது, இறப்பது என்பதைக் குறிக்கவில்லை. செயல், செயலின்மை என்பதைத்தான் குறிக்க வருகிறது. கதாநாயகனும் இந்தச் சிந்தனைக்கு முன் தற்கொலைக்கு முனையாதது போலவே, இந்தச் சிந்தனைக்குப் பின்னும் தற்கொலையை விட்டுவிட்டு இனி வாழ்வோம் என்றபடியெல்லாம் எண்ணவில்லை. செயல்பட வேண்டுமா என்ற தயக்கம் நீங்கியவனாய்த் துணிந்து செயலில் குதிக்கிறான். அதனால் இறக்க நேரிடலாம் என்று உணர்ந்த போதிலும் கூட. எனவே சொற்களின் நேர்பொருளான இருப்பது, இறப்பது என்பதைவிட செயல் புரிவது, செயலற்று வாளா இருப்பது என்ற கவை உருவான யோசனையே இங்கு பொருள். இது நமக்கு விரிவுரையாளர்கள் உதவியால்தான் கிடைக்கிறது’ என்று கூறினார் என் தந்தை.

கவிஞர், ‘விரிவுரையாளர்கள் சொன்னார்கள் என்று ஏன் ஒரு பொருளை ஏறிட்டுக் கொள்ள வேண்டும்? இருப்பது, இல்லாது போவது என்ற பொருளிலேயே அணுகலாம். கவிஞன் ஏதேனும் மறைபொருள் வைத்திருந்தால் அது நமக்கும் அர்த்தமாகாமல் போகாது. நாம் சொந்தமாகவே காண்போம். மற்றவர்களின் உதவி தேவையில்லை’ என்றார்.

தந்தையாரோ, ‘அதெல்லாம் உங்களைப் போன்ற சில மேதைகளுக்குச் சரிப்பட்டு வரும். பொதுவாகக் கல்வி என்பதே முன்னால் சென்றவன் முட்டிக் கொண்ட அனுபவம் பின்னால் வருபவர்க்குக் கைவிளக்காய் ஆகிநிற்பதே ஆகும். ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு மனிதனும் அனா ஆவன்னாவிலிருந்து தானே சொந்தமாகக் கண்டு பிடித்து முன்னேறுவது என்றால் மனித குல முன்னேற்றமே ஏற்பட்டிருக்காது. எனவே மற்றவரின் கருத்துகள் சொந்த அறிவின் விளக்கத்திற்குத் தடையாகாது’ என்று பதில் வாதம் வைத்தார்.

கூட வந்த நண்பர்களோ கவிஞருக்கு எதிர்வாதமாக ஏதும் சொல்லத் தயங்கி, ‘வேணு விடாக்கண்டர்னா, கவிஞர் கொடாக் கண்டர். இது லேசுல முடியற மாதிரி தெரியவில்லை’ என்று ஒதுங்கி விட்டார்கள். வாதம் வெகு ரஸமாகச் சென்று, பின்னர் ஒரோவழி பெரும்பாலான இலக்கிய மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு விரிவுரைகளின் அவசியமும், ஆழ்ந்த கவிதை ஈடுபாட்டிற்கு முதலில் கவிதையில் நேரடியாக முழு கவனத்தோடு நுழைதலே வழிவகுக்கும் என்றவாறும் இருவராலும் முடிவு செய்யப்பட்டது.

”பாம்புப் பிடாரன் ஊதிய குழலில்
பதைத்துத் துடிக்கும் குரலெதுவோ?
சாம்பற் காடும் தாழைவெண் மடலும்
சண்பக மணமும் மறந்திசையில்
கூம்பும் பேதைமை கூட்டிய நெறியிற்
குறுகிக் குடத்தில் அடைந்து மனம்
தேம்பி மயங்கும் பாம்பிதன் குரலா?
திகைத்து நின்றிடும் என் குரலா?

உண்பது நாழி, உடையோ கோவணம்,
உறங்கி விழுவது பாழ்மனையில்;
எண்ணி இதற்குப் பொருள் பெற வேண்டின்
எத்தனையோ தொழில் எங்குமுள;
பண்ணை இதற்குப் பாதக வலையாய்ப்
பின்னிப் பாம்பின் படநிழலை
நண்ணியே வாழுமிப் பேதையின் குரலா?
நலிவிதில் ஏங்கும் என் குரலா? ...”

’பாம்பும் பிடாரனும்’ என்ற இந்தப் பாடல் பேராசிரியர் திரு அ சீனிவாசராகவன், ‘நாணல்’ என்ற புனைப்பெயரில் எழுதியது. இந்தப் பாடலை கவிஞர் திருலோக சீதாராம் போற்றிப் புகழாத மேடையோ, இலக்கிய முற்றமோ இல்லை. நண்பர்கள் மத்தியிலும் ஏதாவது இதை ஞாபகத்தில் கொண்டு வந்துவிடக்கூடாது. உடனே நினைவு பேராசிரியர் பால் திரும்பும். பாம்புப் பிடாரன் வந்துவிடுவான். வாழ்வின் ஜீவனோபாயத்தின் தீராத மர்ம முடிச்சை என்னமாகப் பேராசிரியர் ஈர்த்துவாங்கி வைத்திருக்கிறார் இந்தப் பாட்டில் என்று விளக்க ஆரம்பித்தால் அப்புறம் ஒருவாரத்திற்கு எந்தப் பாம்புப்பிடாரனையும் பார்த்தாலும் ஏதோ ’ஒரிஜினல் பாம்பாடீ’ மாதிரியே கண்ணுக்குத் தோற்றமளிக்கும். கவிஞர் ஆகஸ்டு 1973ல் மறைந்த போது ‘நாணல்’ இதைச் சொல்லித்தான் புலம்புகிறார். --

“ ‘நான் அமரன் அமுதத்தைப் பருகி ஆடும்
ஆனந்த மயன்’ என்று பேசினாயே !
வானமரர் இது கண்டு பொருமிச் சீறி,
வளைக்க உனைக் கூற்றுவனை அனுப்பினாரோ?
தேனவிருங் கவிதைச் சொல் வடித்த செல்வா,
திருலோகா, தம்பீ, என் கண்பட்டுத்தான்
ஊனமிலா உன்னுயிரும் உடைந்து போச்சோ?
உலகை விட்டு நேராக்கப் புறப்பட்டாயோ?

”குருவிகளின் கூடிந்த வாழ்க்கை என்ற
குறிப்பில், அன்று காவியம் ஒன்று அமைத்தாய் என்றால்
குருவியென நீ பறந்து சென்று, வாழ்வுக்
கூட்டை நெடும் வெறுமைக்குக் கொடுக்கலாமோ?
உரைத்தபடி நடந்தாயோ? உலகின் உள்ளே
உறை கவினுக் குனைத் தந்ததாகச் சொன்ன
உரைதன்னை மறந்தாயோ? சுடுகாட்டுத் தீ
உனை விழுங்க விட்டதனுள் ஒடுங்குவாயோ?

”பாம்பொன்றைத் தன் வயிற்றுப் பாட்டுக்காகப்
பதறவைத்த பிடாரனுளப் பதைப்பைப் பார்த்துத்
தேம்பியொரு சொல் எறிந்தேன் அதனைச் சொல்லிச்
சொல்லி உளம் உருகிநின்றாய் .....
.............................
ஆமாம் ஐயா,
நெளிந்துவிழும் ‘நாணல்’ தான். ஆனால் என்னை
நீ உதறிப் போய் விட்ட நெருப்பில் ஏதோ
வளைந்துயிர்க்கப் பார்க்கின்றேன். பார்த்தும் என்ன?
வடவையிலும் வேகாத ‘நாணல்’ உண்டோ?”

இவர்கள் இருவருக்குள் இருந்த பரிமாற்றமே விந்தையானது. பேராசிரியர் அ சீ ரா பெரிதும் ஈடுபட்ட அந்தக் கவிதை, திருலோக சீதாராம் அவர்களின் பாடலான ’மூல ப்ரதி’ என்ற கவிதையின் ப்ரவேசத்திற்குமுன் அந்தப் பாடலின் மைய மனநிலை என்ன? என்று பார்த்தால், அதுவும் ஒரு கட்டுரையில் கவிஞன் கண்ட கவிதையைப் பற்றி எழுதும் பொழுது கவிஞர் கூறியவற்றில் ஓரளவு புலனாகிறது.

“ஒரு கவிஞன் தனது கவிதையின் மூலத்தையே நமக்கு உணர்த்திவிட முடியுமா என்பது சந்தேகம். ஏனெனில் கவிதையில், கவிஞன் நமக்கு வழங்குவதெல்லாம் சிருஷ்டி பரவசத்தின் கணநேரக் களிமயக்கில், தனது உள்ளொளியில் அவன் கண்ட திருக்காட்சியின் தித்திப்பைப்பற்றிய சேதியே தவிர, அந்தக் காட்சியையே அவன் நமக்கு வழங்கிவிடுவதில்லை. ஏனெனில் அது அவனுக்கே மறந்துவிட்ட ஒரு கனவு. எனவே கவியின் மூலஸ்தானத்தை ஒரு விமர்சகன் போய் எட்டிப்பார்த்துவிட முடியும் என்பது நடவாத காரியம்”

கவியின் மூலஸ்தானத்தை ஒரு விமர்சகன் போய் எட்டிப்பார்த்துவிட முடியும் என்பது நடவாத காரியம் என்ற இதே எண்ணப் புலம்தான் கவிஞரின் ‘புகழ்க் கவிகை’ என்ற குறுங்காப்பியத்தில் பாத்திரமாகி நிற்கும் கவிஞர் பெருமானின் வாய்மொழியாகவும் வரும். ---

“அகண்டாகார அரங்கினில் ஆடும்
விரிசிறைப் புள் தனை மற்றோர்
வியந்து எண்ணுவர் போற்றுவர்
என்றோ விசித்தெழும்?

இலக்கியம் துய்ப்பார் தாமும் தொடர்வதால்
கவிப்புள் சற்றே தாழப் பறந்தால்
கவிதை காட்டும் எழிலைக் காண்டற் குதவுமே.

விரிந்தெதிர் விளைந்த விந்தைப் படைப்பின்
வியப்பிலும் திகைப்பிலும் வேதனை யுற்று
விம்மிடும் நெஞ்சின் வேக்காட னைத்தும்
செய்யுளாய்க் கவிதையாய்ச் செந்தணல் மலர்ந்த
தீந்தமிழ்க் கனவாய்த் தீய்க்கும் போது
உடன்கட்டை யேற ஒருவரைத் தேடி
உலைவது கவிஞன் உள்ளமே யன்று.
உணர்வின் நோவில் ஒத்தியல் கின்ற
உள்ளம் ஒன்றிரண் டுளவென் றறிந்தால்
உவகைதான் என்பதும் ஒளிப்பதற் கில்லை.”

இத்தகைய மனப்பான்மை கவிஞருக்கு ஸ்வாபாவிகமானது. அந்தப் பார்வையைத்தான் கவிஞர் ’முன்பொரு பாடல் எழுதினேன்’ என்று தொடங்கும் ‘மூல ப்ரதி’ என்னும் கவிதையில் வெளிப்படுத்தினார்

"யாருக்குள் இலட்சிய எழிலின் உணர்வு ஆத்மார்த்தமாக இருக்கிறதோ அவர்களிடமே உன்னத கலையனுபவம் என்பது நிகழ்கிறது. உள்ளுறை உணர்வாக அஃது உணரப் படுகிறது சைதன்யத்தின் உன்னத திகழ்ச்சியில்; அறிவார்ந்த கருத்தாக்கமாக அன்று”
-- ஸாஹித்ய தர்ப்பணம்.

உலக கலையனுபவச் சிந்தனைகளுடன் உரைத்துக் காண வேண்டிய பெற்றியது திருலோக சீதாராம் அவர்களின் ‘மூல ப்ரதி’ என்ற கவிதை என்பது பேராசிரியர் அ சீ ரா அவர்களின் திடமான அணுகுமுறையாகும்.

மூலப்பிரதி

முன்பொரு பாடல் எழுதினென் -- அந்த
மூலப் பிரதி கைவச மில்லை

-- முன்பொரு

எழுதிய பாடல் ஒன்றினை வீட்டின்
எரவா ணத்தில் செருகி யிருந்தேன்
பழுது வந்தது பார்த்தி ருந்தவர்
பாடலை எடுத்துப் பதுக்கிக் கொண்டார்

-- முன்பொரு

இன்ப மென்றொரு தலைப்பிட் டந்த
இனிய பாடலை எழுதிய நினைவு
துன்பம் வந்து சூழும் போது
துணைசெயக் கூடும் தொலைந்துபோ யிற்று.

-- முன்பொரு

வாய்மை என்றொரு வாசகம் வைத்து
வண்ணப் பாடலை எழுதிய துண்டு
பொய்மை இருளில் பொன்விளக் காகும்
பொக்கென மறைந்து போயிற் றென்செய

-- முன்பொரு

வெற்றி என்ற விளக்கம் தந்தொரு
வீரியச் சொல்லை விளம்பிய துண்மை
முற்றும் தோற்று விட்டபோ தெனக்கு
மூளும் நற்றுணை முழுதும் காணோம்

-- முன்பொரு

இருந்த இடத்தில் இருந்த படிஅவ்
இன்னிசை கேட்டே இருந்தேன் இங்கு
வரும்போ தெனக்கு வழித்துணை யாக
வந்தது இடையில் வழிப்பறி போக

-- முன்பொரு

ஏட்டுப் பிரதியை எடுத்தவர் தந்தால்
இனிய பாடலைக் கற்றவர் சொன்னால்
காட்டில் இருளைக் கடந்திட லாகும்
கருணை செய்தவர் ஆவீர் ஐயா

முன்பொரு பாடல் எழுதினேன் அந்த
மூலப் பிரதி கைவசம் இல்லை.

(கந்தர்வ கானம், திருலோக சீதாராம், கலைஞன் பதிப்பகம்)

*** 

No comments:

Post a Comment