Monday, December 23, 2019

’பகவத் விஷயம்’ - சொற்பொருள்

’பகவத் விஷயம்’ என்பதற்கு அரும்பொருளில் இரண்டு விதமாகவும் பொருள் சொல்கின்றனர். பகவானை விஷயமாக உடையது, பகவான் தனக்கு விஷயமாக எதைக் கொண்டிருக்கிறானோ அந்த நூல் - என்னும் இரு பொருளும் உண்டு. இரண்டாவதில் பகவான் தனக்கு ராஜ்யமாகக் கொண்டிருக்கும் நூல் பகவத் விஷயம் என்கிறார் அரும்பதக்காரர். நம்மாழ்வாரும் அவ்வாறுதானே சொல்லிக் காட்டுகிறார் - அகில உலகுக்கும் ஸர்வேஸ்வரன் எங்கு உளன்? அவன் சொந்தமான ராஜ்யம் எது? - உளன் சுடர்மிகு சுருதியுள். வடமொழி வேதம் அவனைக் காட்டியதால் சுடர்ந்து பொலிகிறது. தமிழ் வேதமாகிய திருவாய்மொழியை அவன் தன் ராஜ்யமாகக் கொண்டதால் துயரறு சுடரடியாகத் தான் பொலிந்து தோன்றுகிறான்.

இதில் ஒரு கேள்வி வருகிறது. விஷயம் என்றால் பேசுபொருள், அல்லது சப்ஜக்ட் மேட்டர் அல்லது பொருள் என்ற அளவில் புழக்கத்தில் புரிந்துகொள்ளப் படுகிறது. ஆனால் விஷயம் என்றால் ராஜ்யம், நாடு, ஆளப்படும் இடம் என்பது போல் பூகோளப் பரப்பிற்குப் பெயராக வருவது உண்டா? இல்லாமல் அரும்பத ஆசிரியர்கள் கூறுவார்களா?

கோயிலுக்குச் சிற்ப சாத்திரம் இருக்கிறது. பெரிய கோபுரம், மண்டபம் இருக்கிறது. ஆனால் பழங்காலத்தில் மனிதர் வசிக்கும் வீட்டிற்கு சிற்ப சாத்திரம் இருக்கா? பழைய காலத்தில் அதர்வண வேதத்தில் ஸ்தாபத்ய வேதம் என்று ஒரு பிரிவு சொல்கிறார்கள். அது இல்லாம புராணங்கள், நாட்டிய சாத்திரம், பத்ம ஸம்ஹிதை இவற்றிலெல்லாம் இந்த விஷயம் பற்றிக் குறிப்புகள் வருகின்றன. ஈசான சிவகுருபத்ததி, காமிகாகமம், சமாரங்கணஸூத்ரதரம், மயமதம், மானசாரம் போன்ற நூல்களிலும் வீடுகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஆனால் இந்த நூல்களின் விஷயங்கள், மற்றபடி வீடு கட்டுதல் பற்றிய நெடுங்கால அனுபவங்கள் அடிப்படையில் விரிவான பதிவுகள் இவற்றை உள்ளடக்கித் தனிப்பட வீடு கட்டும் இயல் என்றபடி தோன்றியவை, கேரளத்தில், 13ஆம் நூற் -- 16 ஆம் நூற் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய நான்கு நூல்களைச் சொல்வர். தந்த்ரசமுச்சயம், சில்பரத்னம், வாஸ்து வித்யா, மனுஷ்யாலய சந்திரிகா என்னும் நான்கு நூல்கள் அவை. இதில் நான்காவதான மனுஷ்யாலய சந்திரிகா என்னும் நூல் முழுவதும் பல வேறு கட்டடக் கலைக் கருத்துகளை உள்ளடக்கி, திருமங்கலத் நீலகண்டன் மூசத் என்பவரால் எழுதப்பட்டது. 16ஆம் நூற்.

இதில் தொடக்கத்தில் அவர் துதிக்கும் தெய்வங்கள் அனைத்தும் பிரகாச விஷயம் என்னும் இடத்தில் இருக்கின்றன என்கின்றனர் டாக்டர் ஏ அச்சுதன், டாக்டர் பால கோபால் டி எஸ் பிரபு. பிரகாச விஷயம் என்னும் இடம் வேட்டத்துநாடு (அ) வெட்டத்துநாடு. வெட்டம் என்றால் பிரகாசமாம். விஷயம் என்றால் நாடு என்கின்றனர். 1998ல் வாஸ்து வித்யா ப்ரதிஷ்டானத்தில் வெளிவந்த நூல் இது. கேரளத்தில் மலையாளத்தில் எழுதப்பட்ட பல வியாக்யானங்களைக் கொண்டது என்பதே இந்த நூலின் பிரசித்தியைக் காட்டும். இது நிற்க.

இப்பொழுது பகவத் விஷயம் என்பதில், அரும்பதங்கள் குறிக்கும் ஒரு பொருளான பகவானின் விஷயமாக, பகவான் தன்னுடைய ராஜ்யமாகக் கொண்டதால் பகவத் விஷயம் என்று ஓர் நயம் காட்டியிருப்பதற்குப் பிரமாணம் கிடைத்ததா? அதுதான். அறிவு ஆய்வு என்பதெல்லாம் மிகுந்த சிரமத்தைக் கொடுக்கக் கூடியது. ஆனால் ஆர்வம் இருந்துவிட்டால் அதுவே பெரும் இன்ப அதிர்ச்சியான ஈடுபாடு ஈர்க்கும் விஷயம்.

***

No comments:

Post a Comment