மகான்களைப் பற்றிச் சிந்திப்பதால் நம் வாழ்க்கை மகத்துவம் பெறுகிறது. உயர்ந்த நிலையைப் பற்றிச் சிறிதாவது நம் மனம் எண்ணிப் பார்க்கிறது. மூன்று பத்தாண்டுகள் சொச்சமே வாழ்ந்த இளைஞர் சாதித்ததுதான் எவ்வளவு! காலடியில் மலர்ந்த கதிரவன் காலடியில் பல நூற்றாண்டுகள்! இல்லை என்பதைப் பெரும் தத்துவம் ஆக்க பௌத்த மாத்யமிகம் முயன்ற பொழுது 'இருப்பது ஒன்று. அது உலகன்று. பிரம்மம். உலகம் அதன்மேல் காணும் தோற்ற மயக்கம். உயிர் எனத் தோன்றுவதும் உண்மையில் பிரம்மமே' என்ற 'இருக்கிறது என்னும் பெரும் தத்துவ முழுமையால்' மனித குலத்தை வென்றெடுத்தார் ஸ்ரீபகவத்பாதர்.
ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்வாமி விவேகாநந்தர் ஆர்வங்களில் திளைத்த கல்லூரிக் காலத்தில் ஆதிசங்கரர் எனக்குப் பெரும் பிரமிப்பு. அவருடைய நூல்கள் பெரும் மயக்கம். அதுவும் திருச்சி மலைக்கோட்டையில் ஒரு நண்பன் இருந்தான். அவன் என் ஆர்வத்தைப் பார்த்துவிட்டுத் தன் வீட்டில் இருந்த பழைய ஸ்ரீராமகிருஷ்ணா மடப் பதிப்பு ஆங்கிலத்தில் Upadesa Sahasri, Tr by Swami Jagadananda அதை எனக்கே தந்து விட்டான். மொட்டை மாடியில் உட்கார்ந்துகொண்டு எவ்வளவு நாள்கள் அந்த நூலில் என்னை இழந்திருப்பேன்!
அதில் ஒரு ப்ரகரணம் - கூடஸ்த அத்வய ஆத்ம போத ப்ரகரணம்.
ஒரு பிரஹ்மசாரி பையன் குருவிடம் அணுகிக் கேட்கிறான். அவனுக்கோ பெரும் அலுப்பு. ச என்ன இது! மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு. இடைப்பட்ட காலம் எல்லாம் துன்பம். சுகம் போல் தோன்றிப் பழிப்புக் காட்டிப் போகும் ஜிகினா இனிப்புகளின் தொல்லை வேறு...
'ஐயா! மாறி மாறிப் பிறந்து வரும் இந்த உலக இயல்பிலிருந்து எப்படி விடுதலை பெறுவது? உடல்தான் நான் என்ற எண்ணம் இருக்கிறது. உடல் துன்பம் எல்லாம் என்னை வருத்துகிறது. நனவு போதாது என்று கனவு. கனவில்லா தூக்கம் என்றால் மூர்ச்சை போட்டு மீண்டும் அடிப்பது போன்ற அவஸ்தை. போதுமய்யா இந்தத் தொல்லை. இதுதான் என் சொந்த இயல்பேவா? அப்படி என்றால் ஒன்றும் செய்ய இயலாது. அல்லது என் இயல்பு வேறா? அப்படி என்றால் கொஞ்சம் தெளிந்த காற்று வீசும் சுகம். கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது. சொல்லுங்கள் ஐயனே. நம்பிக்கையா? தீராவிதியா?
குரு - 'குழந்தாய்! கேள். உன் இயல்பு அல்ல அப்பா அது. நடுவில் ஏற்பட்ட ஒன்று.
'அப்படியா? அப்படி என்றால் ஏன் ஏற்பட்டது? என்ன காரணம்? எதனால் இது முடிவுக்கு வரும்? இந்தத் தொல்லை எப்பொழுது ஒழியும்? நான் எப்பொழுது என் சுயநிலை அடைவேன்? நோயாளிகள் ஸ்வஸ்தம் அடைவதைப் போன்று? நோயின் காரணம் எப்படி நீங்கும்?'
குரு - 'குழந்தாய்! காரணம் அவித்யை. வித்யை அதை முடிவுக்குக் கொண்டு வரும். மாறி மாறிச் சுழலும் இந்தத் துக்கம் எந்தக் காரணத்தால் சுற்றிக்கொண்டு இருக்கிறதோ அந்தக் காரணமான அவித்யை நீக்கப்பட்டால் நீ விடுதலை ஆகிவிடுவாய். பின் ஜனன மரணச் சுழலில் சிக்க மாட்டாய். நனவிலோ கனவிலோ எந்த நிலையிலும் சோகம் என்பது உன்னைத் தீண்டாது.'
'அந்த அவித்யை என்பது என்ன? அதன் அடிப்படை யாது? என்ன விஷயத்தினால் அதன் ஆட்சி? அந்த வித்யையாவது என்ன? அதனால் நான் எப்படி என் சொந்த இயல்பை அடைவேன்?'
குரு - 'ஸம்ஸாரச் சுழலில் சம்பந்தப் படாத அந்தப் பரம ஆத்மா நீ. ஆனால் நீயாகவே உன்னை ஸம்ஸாரச் சுழலில் மாட்டிக் கொண்டதாக மருள்கிறாய். அதே போல் நீ கர்த்தாவும் அன்று. அனுபவங்களை அனுபவிக்கும் போக்தாவும் அன்று. ஆனால் இதையெல்லாம் நீயாகவே உன்னை இப்படியெல்லாம் மயங்குகிறாய். நித்யமானவன் நீ. ஆனால் இறந்து போகும் உயிராக எண்ணிக் கவலை கொள்கிறாய். இதுதான் அவித்யை என்பது.'
*
அப்பாடி! காலை இளம் வெயில். சலசலக்கும் மரங்களில் சப்திக்கும் பறவைக் கூட்டம். கோயிலின் மேளம் போன்று எழுந்து வீசும் காற்று. அந்தக் கணம் இந்த வரிகள் என்னும் போன கதகதப்பு! இன்றும் புல்லரிப்பு! நான் நித்யன்.... நான் இறக்கப் போகிறதில்லை.... இந்தத் துன்பங்கள் எல்லாம் நானாக மருண்ட அவித்யை.
இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றியாய் கிழக்கில் விடியல். உச்சி வானில் ஒரு தோற்ற மயக்கம் - ஸ்ரீஆதிசங்கரரின் சின்முத்ரையும் அவரது கொவ்வைச் செவ்வாய்க் குமிண்சிரிப்பும் மட்டும் கண்ணுக்குப் படுவது போல்.!
*
No comments:
Post a Comment