Monday, December 23, 2019

குப்பைகள் - கவிதை

அப்பப்பா! எவ்வளவு குப்பைகள்!
ஜனங்கள் சர்வ சாதாரணமாகக்
குப்பை போடுகின்றனர்.
வேண்டாமா தூர எறி.
விழுந்துடுத்தா விட்டுத்தள்ளு.
என்ன வேகம்! என்ன அவசரம்!
கண்ணாடி வளையல் கைக்குட்டை
பொம்மை பர்ஸ் உதட்டுச் சாயம்
அட்டைப் பெட்டி ப்ளாஸ்டிக் கூடை
மருதாணி பாக்கட்டு மண்ணடைந்த ஊதல்
கால் கொலுசு கலர் பென்சில்
செய்தித்தாள் எண்ணைக் குப்பி
பென்சில் பால்பாயிண்ட் பேனா
கைகடியாரம் விழுந்தது கூட தெரியாம ஓட்டம்
காலில் மிதிபட்டு உருள்பட்டு நசுங்கி
அப்பப்பா!
மனுசன் ஒரு குப்பை போடும் பிராணி
ராத்திரி பிடித்த எலியை அடித்து
தெருவில் தூக்கி எறிந்ததை
காக்கை அவசரத்தில் கொத்தியது போக
நாய் மோந்து பூனை பார்த்து
காலில் மிதிபட்டு நசுங்கி.....
மனிதன் ஒரு குப்பை போடும் பிராணி.

பொருள்:..பொருள்..பொருள்..
உருக்குலைந்து உருமாறி உருவிழந்து
உரு இன்னும் இருந்து
உலக நடை நெடுக
உள்ளத்தைப் போலவே ...

’வானமெங்கும் பரிதியின் சோதி’
பரவும் காற்றிலும் ரசாயனக் குப்பை
ஏகப்பட்ட நட்சத்திரம்!
எல்லாம் எவன் போட்ட குப்பையோ?

மன அமைதி
குப்பையோட குப்பையா
விட்டு எறிந்து
யாருடையது என்றில்லாமல்
எவருடையதும் ஆன
எவரும் சொந்தம் கொண்டாட
இன்றி ... சாமீ!...
மன அமைதி
தன்னிடம் இருப்பதைக்
குப்பையில் போட்டுவிட்டு
ஊரெல்லாம் தேடி
மனிதர் போகும் பயணம்.

***

No comments:

Post a Comment