Monday, December 16, 2019

ஒன்றுறப் பழகுதற்கே

ஒன்றுறப் பழகுதற்கே அறிவுடைய
மெய்த்தோழரும் அவள் கொடுத்தாள்

என்கிறார் பாரதி. இந்த வரிகளில் ஒரு நுட்பம் சொல்வாராம் கவிஞர் திருலோக சீதாராம்.

‘ஒன்றுறப் பழகுதற்கே’ பழக வேண்டுமில்லையா? அதற்கு நண்பர்கள் வேண்டாமா? சும்மா ஜாலி நண்பர்கள் என்றுமட்டும் இல்லாமல் அறிவுடைய உண்மையான நண்பர்களை அவள் கொடுத்தாள் என்பது மேலோட்டமான அர்த்தம். கவிஞர் சொல்வது - அப்படி அர்த்தம் பண்ணக் கூடாது. மெய்த்தோழரை அவள் கொடுத்தாள். அவர்களிடம் அறிவு இருக்கிறது. எதற்கான அறிவு? எந்த அளவு அறிவு? ‘ஒன்றுறப்பழகுதற்கேஏஏஏ பயன்படும் அறிவு’. பல இடத்தில் அறிவு வந்தால் சண்டை, பிணக்கம், புகைச்சல், காழ்ப்பு இப்படிக் கிளம்பிவிடுகிறது. அங்கும் அறிவு தன் வேலையைக் காட்டுகிறது. அது சுலபம்.

ஆனால் Knowledge purely for Intimacy, Knowledge which enhances more and more Intimacy - இத்தகைய அறிவு ஏற்படுவது மிகவும் அபூர்வம். ரஸிப்பது ஒவ்வொரு தோழரும் பிறருடைய பேச்சை, நடவடிக்கைகளை, சிந்தனையை - என்னும் ஆழ்ந்த ரஸனையும் அன்பும் பரஸ்பரம் இருந்தாலொழிய இத்தகைய ‘ஒன்றுறப்பழகுதற்கே ஆன அறிவு’ என்பது நிலவாது. அத்தகைய அறிவுடைய மெய்த்தோழரை அவள் கொடுத்தாள் என்று பாரதி பாடுகிறார் என்று திருலோக வியாக்கியானம். இப்பொழுது மாற்றிப் பாடிப் பாருங்கள்:

‘ஒன்றுறப்பழகுதற்கே அறிவுடைய மெய்த்தோழரை
அவள் கொடுத்தாள்’

***

No comments:

Post a Comment