Monday, December 30, 2019

முயலும் சரணாகதியும்

சில வருஷங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு தனி வீட்டில் குடியிருந்தேன். சுற்றிலும் மரங்கள். வாசலில் கிராதிக்கு உட்பக்கம் மேடைபோல் குறடு. சைக்கிள் அங்குதான் நிறுத்துவோம். மேலே ஊஞ்சல் கட்டித் தொங்க விடக் கொக்கிகள். ஊஞ்சல் கட்டவில்லை பல வருஷங்களாக. எனவே குருவிகள் தங்கள் குடும்ப வாழ்க்கையை அங்கே தொடங்கிக் குஞ்சு பொறித்துப் பறக்குமட்டும் பயன்படுத்தக் கூட்டைக் கட்டின. கூடு இருந்துகொண்டே இருக்கும். குருவிகள் பேறுகாலத்தில் வரும் முட்டையிட்டு அடைகாக்கும். நாங்கள் எங்கள் வேலையுண்டு நாங்களுண்டு என்று போகின்றவர்கள் என்று அதற்கு யார் சொன்னார்கள்? குருவிக்கூட்டைக் கலைப்பது பாவம் என்று இளகிய மனத்தர் என்று அதன் பாஷையில் யாராவது தெரிவித்தார்களா? அது தெரியாமல் அந்தக் குருவிகள் குருட்டாம் போக்கில் கூடு கட்டிக் குடும்பம் நடத்துகின்றன என்று கூறாதீர்கள். நிச்சயம் பறவை, விலங்கு, பூச்சி, ஏன் எறும்பு எல்லாமே அறிவில்தான் இயங்குகின்றன என்ற நிச்சயம் சிறிது இயற்கையில் வாழ்ந்தாலே தெரிந்துவிடும். ஆனால் வகுப்பறை மேடைக்கு மட்டும் சில கொள்கைகள், சில வாசகங்கள், சில கோட்பாடுகள். இதற்கு 'ஒப்புக் கொள்ளப்பட்ட நெறிமுறைகளின் படி' என்று பெயர். இதிலும் ஒரு காரணம் இருக்கலாம். இல்லையென்றால் பொய் மலிந்து எங்கும் பூனைக்குறும்பு ஆகிவிடும்.

விவேகாநந்தர் சொல்வார், 'அதோ வருகிறது கனவேகத்தில் புகைவண்டி. தண்டவாளத்தில் விரைவில் சுழலும் அதன் சக்கரங்கள். இன்னும் சற்று இருந்தால் சக்கரம் ஏறி அந்த எறும்பு நசுங்கியிருக்கும். ஆனால் லாகவமாக எறும்பு பக்கவாட்டில் நகர்ந்து எங்கு இடைவெளி ஏற்படுமோ அங்கு ஒதுங்கித் தப்பித்து மீண்டும் தன் வழியைத் தொடர்கிறது. அதனிடம் சுதந்திரம் இருக்கிறது' என்று கூறுவார். உயிர், விடுதலை, அறிவு -- ஒரு வைரத்தையே திருப்பித் திருப்பிப் பல பட்டைகளில் தெரியும் ஒளி மாலைகளைக் காண்கிறோம்.

நமது குருவிக்கு வருவோம். குஞ்சு பொறித்து நாட்கள் ஆகிப் பறக்கப் போகிறது என்றால் எங்களுக்கு முதல்நாளே தெரிந்துவிடும். கலகல கல என்று கூட்டில் ஓயாத பயணக் கலகலப்பு இருக்கும். send off போலும் என்று பேசிக்கொள்வோம். அப்படி ஒரு சமயம் ஏதோ அவசரம் காலை கிளம்பிச் சைக்கிளை எடுக்கச் சென்றேன். கூடத்திலிருந்து பக்கத்துச் சன்னலுக்கு வெளியே சைக்கிள் நிற்கும். கதவைத் திறந்தால் ஒரு குருவி வினோதமான முறையில் பாரபோலா, டம்பல்ஸ் போன்ற பல வடிவங்களில் தன் இறக்கைகளை அதிர்வுற வீசிய படியே கிழே தரையில் என் கால்கள் நகர வொட்டாமல் சுற்றிச் சுற்றி வருகிறது. வினோதமாக இருக்கிறது. சத்தம் கேட்டாலே ஓடிவிடும் பறவை என் எதிரில் கால்களுக்கு அருகில் என்னைத் தடுப்பதுபோல் வியூகம் போடுகிறது. ஒரு கணம் பொறி தட்டினாற் போல் உறைத்தது. அடடா பிள்ளையைப் பள்ளிக் கூடம் சேர்க்கும் 'வித்யாரம்பம்' சடங்கு நடக்கிறது போலும். இப்பொழுது வராதே என்கிறது என்று. அப்படியே ரிவர்ஸ்ஸில் பின்னால் வந்து கதவைச் சாத்திவிட்டேன். பக்கத்து சன்னலில் நின்று என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தேன்.

சைக்கிள் ஹாண்டில் பார் மேல், பறக்க முயன்று புது அனுபவத்தில் நெட்டுக் குத்த விழுந்த குஞ்சு கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழுந்த உட்கார்ந்திருக்கிறது. அப்பன் பறவை, ஆத்தாள் பறவை இரண்டும், அவற்றின் குடும்பத்தில் எந்த உறவு முறை இந்தச் சடங்கிற்கு முன் நின்று நடத்த வேண்டும் தெரியாது. இரண்டும் மாறி மாறி குரல் கொடுத்து ஊக்கம் தருகிறது. அல்லது செய்முறை குறிப்புகள் தருகின்றன. நமக்கு எல்லாமே ஒரே கிலுகிலுகிலுகிலுதான். ஓர் அரை மணி நேரம் நான் மனித உலகிற்கும் பறவை உலகிற்கும் இடைப்பட்ட உலகில் இருந்தேன். நான் ஏற்கனவே அறிந்து வைத்திருந்த co-ordinates எல்லாம் அந்த நேரத்தில் தூரவே நின்றன. பிரத்யக்ஷம், படித்த அறிவைப் புறந்தள்ளி விட்டு மூர்த்தண்யமாக நடந்துகொண்டிருந்தது. குருவியோடு நான் மனத்தொடர்பு கொண்டதும், அந்தக் குஞ்சின் வித்யாரம்பத்தில் நான் கலந்துகொண்டதும், ஏற்கனவே எனக்குக் கணந்தோறும் பழக்கத்தில் இருக்கும் படித்த, புரிந்துகொண்ட உலகும் ஒன்றையொன்று முறைத்துக்கொண்டு பேச்சு இல்லாமல் நின்றன. பழைய உலகம். இந்தப் புதிய பார்வையை எந்தத் தட்டில் கொண்டு போய்ச் சொருகி வைப்பது.? எல்லாமே அறிவுதான்.

நான் குருவியோடு பேசினேன் என்றால் நம்பிக்கையாகிவிடும். அல்லது குழந்தைக் கதையில் வரும் கற்பனையாகிவிடும். அதன் வீட்டுக் குஞ்சு பெரிசான நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் என்றால் நீங்களே என்னைத் தனியாக பார்த்து 'ரொம்ப படிக்காதீர்கள். அவ்வளவாக உடம்புக்கு நல்லது இல்லை' என்று அக்கறையாக நல்லது சொல்வீர்கள். இல்லை நம் பழைய உலகில் இடம் கொள்ளாத ப்ரத்யக்ஷமானாலும் அது நம்பக் கூடியது அன்று. என் புரையுள் சொருகிவைக்க இடம் இல்லையென்றால் அது உண்மையில் இருந்தும் இல்லாதது போல்தான். மனித உயிர் மனித உடல் மனித வாழ்க்கை இந்த ரீதியில்தான் தொடக்கமுதல் நான் மூளையில் தகவல் கவாண்களைச் சட்டம் கட்டி வைத்திருக்கிறேன். அதில் கொள்ளாதது ஏதோ freak என்று புறம் தள்ளப்படுகிறது.

இங்குதான் எனக்கு ஓர் ஐயம் வருகிறது. பக்தி என்பது பழைய உலகில் புதிய பார்வையோ? ஏனெனில் இந்தச் சம்பவத்தைப் பாருங்கள். எனக்கு ஏற்பட்ட ப்ரத்யக்ஷ அனுபவம் இல்லையேல் இதற்குப் பெரிதும் மதிப்பு அளித்திருக்க மாட்டேன். ஆனால் இப்பொழுது இந்தச் சம்பவத்தில் மனம் தோய்ந்து சுழல்கிறது. ----

சேது ஸ்நாநம் செய்ய பராசர பட்டர் போனார். மீளும் போது பாதிரிக்கொடி அருகில் பொழுது சாய்ந்துவிட்டது. அக்கம் பக்கம் தங்கிச் செல்ல வீடுகள் இல்லை. ஒரு வேடன் குடிசையில் சென்று சிறிது அமர இடம் பார்த்தார். வேடன் தான் அமர்ந்திருந்த ஆஸநத்தையும் தந்து, கட்டிலைத் தட்டிப் போட்டு அமரச் சொல்லி உபசரித்தான். பட்டர் யோசித்தார். இவனுக்கு நம்மைப் பற்றித் தெரியாது. நாம் ஏதோ இவனுக்குச் செய்தோம் என்று பதிலுக்கு இவன் இதைச் செய்யவில்லை. தன்னை அண்டி வந்தான் ஒருவன் என்ற ஒரே காரணத்திற்காக இதைச் செய்தான் ஆனான். அப்படியென்றால் பகவானுடைய வீடு இந்த உலகம். இங்கு ஒண்ட நாம் வந்துவிட்டோம். நம்மை முன்பின் தெரிந்தவன், உறவு, பிடித்ததைச் செய்தவன் என்ற எந்தக் காரணத்தையும் முன்னிடாமல் தன் வீட்டை அண்டி வந்தான் என்ற ஒரே காரணத்திற்காக அந்த பரமசேதனனும் நம் நன்மை செய்யத்தானே வேண்டும். என்ன நினைத்திருக்கின்றானோ? என்று கூறிக்கொண்டார். சரி போதுபோக்காக இருக்கட்டும் என்று அவனிடம் இன்று வேட்டையாடப் போனாயாப்பா? ஏதாவது விசேஷம் உண்டா? என்று வினவினார்.

வேடன் சொல்லுகிறான்: --

'சாமி! ஒரு முசல் குட்டியைப் பிடிச்சேனுங்க. பிடிச்சிக்கிட்டுப் பொட்டைவெளியில வாரேன். பார்த்தா தாய்முசலு அந்த எரிக்கிற பொட்டை வெளின்னு கூட பார்க்காம என் முன்னாடி நெடுஞ்சாண்கிடயா விழுந்து அடம் பண்ணுது. எனக்கு என்னமோ பண்ணிடிச்சி சாமி! பேசாம அந்தக் குட்டிய உட்டுட்டு வந்துட்டன்' என்றான்.

பட்டர் முகத்தில் ஈயாடவில்லை. அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தவர் நெடுநேரம் கழித்துக் கூறுகிறார்:-- இந்தச் சம்பவத்தில் பொதிந்திருக்கும் குணாதிசயங்கள்! ஒரு முசல் தன் குட்டியைக் காப்பாற்றச் சரணாகதியை அனுஷ்டிக்கிறது. வேட்டையாடுதலே வாழ்க்கையாக உடைய வேடன் சரணமடைந்த ஓருயிரைத் தன் உணவை விட்டுக்கொடுத்தும் காப்பாற்றுகிறான். இந்த இரண்டு குணநலன்களுமே பரம சேதனனாகிய பகவான் விஷயத்தில் சம்பந்தப் பட்ட குணங்கள். அவ்வாறுதான் பிரமாணங்கள் தெரிவிக்கின்றன. கீதையில் கண்ணன் 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என் ஒருவனையே சரணமாகப் பற்று. என்று பிரபத்தியாகிய சரணாகதியை உபதேசித்தான். அவ்வாறு சரணாகதி செய் என்று இந்த முசலுக்கு யார் உபதேசித்தார்? ஸ்ரீராமாயணத்தில் 'அரி ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா' சரணமடைந்த விரோதியைக்கூட ஒருவன் தன் பிராணனை விட்டும் காப்பாற்ற வேண்டும் என்று சரணாகதி அடைந்தவனைக் காக்க வேண்டிய பொறுப்பு பற்றிக் கூறியிருக்கிறது. சர்வசக்திமானாகிய பகவான் அன்றோ அனைத்து உயிர்களையும் காக்கவல்லவன். அவ்வாறு சரணாகதி அடைந்தவர்களைக் காப்பது கடமை என்று இந்த வேடனுக்கு யார் உபதேசித்தார்கள்?

எங்கோ ஒரு காட்டில் யாரோ ஒரு வேடனுக்கும் முசலுக்கும் இடையில் தன்னியல்பாக பிரபத்தி பலித்ததே! இந்த விசேஷம்தான் என்ன! இயற்கையே சரணாகதிக்குத் தன் போக்கில் பிரமாணம் சொல்லுகிறதோ? - என்று நெடு நேரம் சிந்தை வயத்தவர் ஆனார் என்று வார்த்தாமாலை அந்தத் திருக்கணத்தை ஏடுபடுத்தியிருக்கிறது.

அறிவு, மனத்தொடர்பு, உள்ள அதிர்வு, உயிர், உயிருக்கு உயிர் உண்டாகும் உள்ளப் பரிமாற்றம், பக்தி இவையெல்லாம் என்ன? ’பழைய உலகினில் புதிய பார்வைகளின் விடியல்’ என்று கவிதை போல் ஏதோ எழுதிப் பார்க்கிறது என் அந்தரங்கம்.

***

No comments:

Post a Comment