Monday, December 16, 2019

Andre Gide

புவிப்பழங்கள்
''ஐயா! வாசகனே! கடவுளை அங்கே இங்கே தேடாதே. எங்கும் தேடு. ஒவ்வோர் உயிரும் கடவுளை நோக்கிக் காட்டுகிறது. ஆனால் ஒன்றும் அவரை வெளிப்படுத்துவதில்லை. எந்த உயிரைப் பார்த்தாலும், நாம் பார்த்ததுமே நம்மைக் கடவுளிடமிருந்து திசை திருப்புகிறது"

யார் இந்த வாசகங்களைச் சொன்னது? ஆந்த்ரே ஜ்ஷீத் -- கண்பார்த்துப் படிக்கும் இங்கிலீஷ் உச்சரிப்பு -- ஆந்ட்ரெ கைடு. Andre Gide. புவிப்பழங்கள் என்னும் நூல். Fruits of the Earth. அற்புதம். வித்யாசமான திருப்பங்கள், சொடக்குகள், மொழியமைப்பிலேயே.

வழ்க்கமான கணக்குப்பிள்ளைத் தனமான எழுவாய், பயனிலை, செயப்படுபொருள். இப்படிப் படுத்துவார்கள் சில மொழிநடைக் காரர்கள். ஆந்த்ரே அப்படியெல்லாம் படுத்துவதில்லை. ஆனால் வேறு விதமாக. ஒரு வாக்கியம் இப்படித்தான் போய் முடியும் என்று நீங்கள் யூகிக்க முடியாது. நீஷேவின் தூரத்து சொந்தம் இந்த விஷயத்தில் என்றால் பாருங்களேன்.

ஓர் இடம் பாருங்கள்: --

"மாலை வந்தால் பகலின் மரணம் என்று அறி. காலை வந்தால் அனைத்தும் புதிதாய்ப் பிறந்தது என்று கொள்.

கணம் தோறும் காட்சியைப் புதுமையாக்கு.

மஹா ஞானி யார் தெரியுமா? எப்போதும் புதிது புதிதாக வியப்பவன்."

பிற்காலப் பழங்கள் -- என்ற பகுதியில் ஒரு கவிதை, garden fresh அன்று, wild fresh !!!

"திரியும் காற்றில் பூக்கள் சிலிர்த்தன.
உலகின் முதல் காலையின் கீதம்
என் இதயச் செவியில் விழுந்தது.
ஆரம்ப உற்சாகம்
இளமையின் தேன்வெயில்
பூவிதழ் அடர்ந்து
பனித்தேன் பிலிர்க்கும்
மிக மிருதுவான அழைப்பைத்
தொடரத் தயங்காதே
வருகின்ற நாளின்
இதமான படையெடுப்பை
வரவேற்றுக்கொள்

இனிய சதியில் மெல்லிய காற்று
மெள்ளப் பெயர்ந்து போகிறது
உன் கள்ளம் நாணும் உள்ளம்
காதலிக்கத்தான் செய்யட்டுமே."

நல்ல நூல் Fruits of the Earth by Andre Gide, Penguin Bokks, 1976

ஆந்த்ரே போல் கிய்யொம் ஜ்ஷீத் பிறந்தது 22 நவம்பர் 1869. அப்பா சட்டப் பேராசிரியர். தனிமை வாட்டும் பால காண்டம். இலக்கியம், சங்கீதம் இஷ்ட தெய்வம். கட்டுரையில் ஆரம்பித்தவர் அப்பறம் எதையும் விட்டுவைக்கலை. 1917ல் ப்ரெஞ்ச் இளைஞர்களுக்கு ஆதர்சம். அவருடைய சிரஸாஸனத்தனமான கருத்துகளின் பேரில் எக்கச்சக்க தாக்குதல் வாதம். 1947ல் நோபல் பரிசு.
வித்யாசமான நடை. குறுக்கு வெட்டில் சிந்தனை. ஆனால் சில இடங்களில் வலிந்து பேசுவதுபோல் இருக்கும். சில வரிகள், மழை பெய்யும் பின்மாலைப்பொழுதையும், கொட்டைக்குழம்பு காப்பியையும் நினைக்கச் சொல்லும். உதாரணம் வேண்டுமா?

“புதர்கள் கப்சிப் மௌனம். ஆனால் சுற்றி இருக்கும் பாலைவனமெங்கும் வெட்டுக்கிளிகளின் காதல் கீதம் எதிரொலித்துக்கொண்டிருக்கும்.”

***

No comments:

Post a Comment