Friday, December 27, 2019

அருளிச்செயல்

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் மிக முக்கியமான ஒரு ப்ரயோகம் 'அருளிச்செயல்' என்பது. ஆழ்வார்களின் பாசுரங்களைத்தாம் 'அருளிச்செயல்' என்று குறிப்பது வழக்கம். அதாவது யாரிடம் அஹங்கார மமகாரங்கள் முற்றிலும் அகன்று, உள் நிறைந்த ப்ரசன்னமாய் அவன் ஆண்டு, இவர்களைத் தன் வாயாகவும், குரலாகவும் கொண்டு தன்னையே பாடிக்கொண்டான் என்று பூர்வாசார்யர்கள் முடிவு செய்தார்களோ அவர்களுடைய திவ்ய ப்ரபந்தங்களே 'அருளிச்செயல்' எனப்படுவது. திவ்ய ப்ரபந்தம் என்றாலும் அருளிச்செயல் என்றாலும் பொருள் ஒன்றே. சரி. இதன் பயன்பாடு குறித்து பூர்வாசாரியர்கள் யாரேனும் குறிப்புகள் தந்துள்ளனரா? என்று பார்த்தால் நல்ல வேளையாக ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகளே அற்புதமான விளக்கம் பெய்து வைத்திருக்கிறார்.

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்வாழி
தாழ்வாது மில்குரவர் தாம்வாழி -- ஏழ்பாரும்
உய்ய வவர்கள் உரைத்தவைகள் தாம்வாழி
செய்யமறை தன்னுடனே சேர்ந்து.
(உபதேச ரத்தின மாலை)

'அருளிச்செயல்' என்பதற்குப் பொருளாக பிள்ளைலோகம் ஜீயர் உரை எழுதுவது என்னவெனில்

"அருளிச்செயல்களாவன: ஸர்வேச்வரன் அருளடியாகத் தங்கள் அருளாலே செய்யப்பட்டதாகையாலே அதுவே நிரூபகமாம்படி, இருப்பதாகிற த்ராவிட வேத சதுஷ்டய அங்க உபாங்கங்களான திவ்யப்ரபந்தங்கள்."

’திராவிட வேத சதுஷ்டயம்’ -- த்ராவிட வேதங்கள் நான்கு. அவை நம்மாழ்வாரின் திவ்ய ப்ரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி.

திராவிட வேதாங்கங்கள் ஆறு. திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம்.

மற்றை எண்மர் நன்மாலைகள் த்ராவிட வேதங்கள் நான்கின் உபாங்கங்கள். ஸ்ரீமதுரகவி ஆழ்வாரின் பிரபந்தமும், ஆண்டாளின் திருப்பாவை, திருமொழிகளும் த்ராவிட வேத வேதாந்த ஸாரார்த்தங்களைப் போதிக்கப் பிறந்தவை.

'அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்', 'நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை', 'பயிலுஞ் சுடரொளி' 'நெடுமாற்கடிமை' போன்ற பாசுரங்களில் கூறப்படும் பாகவத சேஷத்வத்தையே தம் முழு இயல்பாய்க்கொண்டு நின்றவர் ஸ்ரீமதுரகவியாழ்வார் ஆகையாலே ததீய சேஷத்வம் (அடியார்க்குத் தொண்டன் என்ற நிலை) என்ற த்ராவிட வேத ஸாரமான அர்த்தத்தைக் கூற வந்தது கண்ணிநுண் சிறுத்தாம்பு.

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளான ஆண்டாளின் திவ்ய ப்ரபந்தங்கள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும். அவை திராவிட வேதங்கள் நான்கின் மறைமுடிவுகளைக் காட்டும் உபநிஷதங்களாய்க் கருதப்படுவன. உபநிஷதங்களுக்கே வேதாந்தங்கள் என்று பெயர் வாய்ந்தது போன்று ஆண்டாளின் திவ்ய ப்ரபந்தங்கள் த்ராவிட வேதாந்தங்கள் என்று கருதப்படுவன. ’பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதஸ் சிரஸ் ஸித்தம் அத்யாபயந்தீ’- மறைமுடிகளெங்கும் மறைந்துள நற்பொருளை மறைமுடி விளங்கும் நாரணர்க்கு அறிவித்த ஆண்டாள் - என்கிறது தனியன் சுலோகம்.

'ஹே அம்ருதஸ்ய புத்ரா:!' என்று மண்ணவரை விளியா நின்றன உபநிஷதங்கள். 'வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொள்மின்' என்றார் திருத்தகப்பனார். ’வையத்து வாழ்வீர்காள்!’ 'நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!' என்று ஆன்ம வர்க்கங்கள் அனைத்தையும் ஒரு திரளாக்கிக் கொண்டு போகப் பாரித்தாள் ஆண்டாள். பிரிகதிர்ப் படுவோரையும் விடேன் என்று 'ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை?' என்று தெருட்டித் தன் வழியே கொண்டு சேர்த்தாள் அஞ்சு குலத்துக்கு ஒரு சந்ததியாம் அந்தப் பெண் பெருமாள். வேதாந்த ஸூத்ரங்களுக்கு ஸ்ரீபாஷ்யம் எழுதிய உடையவர் என்றும் மனனம் செய்வதோ திருப்பாவை. அவருக்கு 'திருப்பாவை ஜீயர்' என்றே திருநாமம் இதனால் அமைந்தது. 'கோயில் அண்ணரே!' என்று அருளப்பாட்டினால் ஆண்டாள் விளித்த பெருமையும் எம்பெருமானார்க்கு உண்டு. இவர்களுடைய நற்கலைகளான திவ்ய ப்ரபந்தங்கள் எல்லாம் 'அருளிச்செயல்'.

ஆனாலும் நாம் எப்படி இவற்றை அருளிச்செயலாக அறிந்துகொள்ள முடியும்? நேரடியாகப் பாசுரங்களைக் கற்றுப் பாருங்கள். நன்றாக இருக்கிறது. காதிற்கு இனிமையாக இருக்கிறது. காமச்சுவையாய் இருக்கிறது. காதல் பாட்டாய் இருக்கிறது என்று விஷ ஜுரத்தில் பித்து பிடித்தாரைப் போலே ஏதாவது பிதற்றித் திரிவோம். எளிய மொழிகளால் ஆன ஆழ்வார்களின் இன்னமுதமான பாசுரங்களின் ஆழ்பொருளை நம்பிள்ளை, நஞ்சீயர், பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகிய ஆசாரியர்கள் தெரிய வியாக்கியைகள் செய்ததால் அன்றோ அருளிச்செயல் எனபதை அருளிச்செயல் என்றே நம்மால் அறிய முடிந்தது! என்று வியக்கிறார் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள்.

பெரியவாச் சான்பிள்ளை பின்புள் ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால் - அரிய
அருளிச் செயல்பொருளை ஆரியர்கட் கிப்போ
தருளிச் செயலாய்த் தறிந்து.

ஆழ்வார்கள் ஏற்றம்! அருளிச்செயல் ஏற்றம் !!

***

No comments:

Post a Comment